Thursday, November 26, 2009

அந்த நாள் ஞாபகம் வந்ததோ?ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகள்!


பொறைய கண்டாச்சு

பொறைய கண்டாச்சு

நாளக்கி பெருநா
நம்மளுக்கு ஜோக்கு
கூழை கடா அறுத்து
கூடி கூடி திங்கலாம்.


பெருநாள்ன்னு சொன்ன உடனே,சின்ன புள்ளையில பிறையை கண்டவுடனே இப்பிடி ஆடிப் பாடுவோம்.அந்த ஞாபகம்தான் வருது.எங்க வூடு சி எம் பி லைன்ல இருக்கிறதால, சித்திக் பள்ளி,ஹனீப் பள்ளி இப்பிடி ஒவ்வொரு தெருவா போய் நிறைய எங்க வயசு பிள்ளைங்களோட பாடுவோம்,அந்த இனிமையான நாள்,ஞாபகம் வருது,

அமெரிக்காவுல இருந்தாலும்,அதிரையில,சென்னையில இருந்தாலும்,அந்த நாட்களை யாராலும்.சின்ன வயசுக் குறும்புகளை மறக்க முடியுமா?


அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

Monday, November 23, 2009

பர்தா? ஒரு இந்து சகோதரியின் அனுபவம்!படித்தேன்,பகிர்ந்தேன்


திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார்.

சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார்.

பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் "சதி" (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

'ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.

சவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு "பெண்கள் பகுதி" க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன்.

செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!

சவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.

மறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.

"சவுகரியமா? இதன் மூலமா?" என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.

எனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!. ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.

நோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.

மறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த "பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்" இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

பூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர்.

ஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். ஜித்தாவிலிருந்து வந்திருந்த 'மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்' என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார்.

சரி, இதில் வியக்க என்ன உள்ளது என்கிறீர்களா? அவர்கள் அனைவருமே அணிந்திருந்தது கறுப்பு நிற ஹிஜாப் உடை தான்.

என்னருகில் அமர்ந்திருந்த பெரும் நிறுவன உரிமையாளரான அந்த இளம் பெண் விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்த டிவி கேமராக்கள் எங்களை நோக்கித் திரும்பும் நேரத்தில் எல்லாம் விலகியிருக்கும் தன் முகத்திரையினை சரி செய்து முகத்தை மூடிக் கொண்டார். புதிராகப் பார்க்கும் என் பார்வையினைப் புரிந்தவராக என் பக்கம் சாய்ந்து, "கேமராக்கள் நம்மைப் படம்பிடிப்பதை விட்டும் விலகி விட்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்!" என்றார்.

நிகழ்ச்சிக்கு வந்த மற்ற அனைத்துப் பெண்களைப் போலவே இவரும் மிக அழகிய ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்பு விலகாமல் ஆர்வத்துடன் நெருங்கி கேட்டேன்: "எதனால் தங்கள் முகத்தினைக் கேமராமுன் காண்பிக்க மறுக்கிறீர்கள்?"

அதற்கு அவர், "நீங்கள் இப்போது அணிந்துள்ள புடவை, ஏதேனும் ஒன்றில் சிக்கி, உங்கள் முழங்கால் வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா? அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை!" என்றார்.

"முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவிக்கப்பட்டு அடிமைப்படுத்தப் படுகிறார்கள்" என்ற சொல்லையே இந்தியாவில் திரும்பத் திரும்ப கேட்டிருந்த என் மனதினுள் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

என் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது கைகளுக்கும் விரல்களுக்கும் உதட்டுக்கும் கண்களுக்கும் தேர்ந்த ஒப்பனை செய்திருந்ததையும் கவனித்தேன். மனதில் எழுந்த கேள்விகளை அடக்க முடியாமல் அவர் பக்கம் நெருங்கினேன்.

"இத்தனை அற்புதமான அலங்காரங்களைச் செய்துள்ள உங்கள் அழகை இந்த புர்கா சிதைக்கவில்லையா?" பொருளாதார நிபுணரான அப்பெண் மென்மையாக சிரித்தவாறே கூறினார்.

"இல்லவே இல்லை! இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி...!" என்றார்.
அத்துடன் நில்லாமல், "இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே? பின்பு ஏன் கவலை?" என்றார்.

அப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், "புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா?" என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.

என் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தாப் பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.

"உங்களுக்குத் தெரியுமா?" என்று என்னிடம் கேள்வி எழுப்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண். "மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை!" என்றார்.

"கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்" என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது.

பொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன். எடுத்த எடுப்பில் சற்றே வெறுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.

என் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், "தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக"க் குறிப்பிட்டார். "சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை!" என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.

வியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?

அறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.

இந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.

அதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன். (பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது.

அந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன்.

அந்தப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால் ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்."நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா?" என்று கேட்டு விட்டேன்.

நொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: "இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது" என்றார்.

என்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:

"செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லையா?" என்றார். இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன.

இச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் கூன்கட் (Ghoonghat) எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள்.

அவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு, "கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்?" என்று பெருமையாகக் கூறுயதே விடையாகக் கிடைத்தது.

எனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.

மும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே 'அடிமைத்தனம்' என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் 'பெண்ணடிமை'த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன்? என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.

ஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட.

என்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

இந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா?

பெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில்,

இல்லை. எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை!

சவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும்! -

தமிழாக்கம்: அபூ ஸாலிஹா நன்றி-

www.satyamargam.com
http://www.tmmk.info/news/999726.htm

Wednesday, November 18, 2009

நாஞ்சொல்றது சரியாங்க?

நமக்கு ரெண்டு பெருநா மட்டும்தான்.ஒன்னு நோன்புப் பெருநாள்,இன்னொன்னு ஹஜ்ஜுப் பெருநாள்.இந்த ரெண்டு பெருனாலுமே ஏழைகளுக்கு கொடுத்து வழங்க செய்யும் பண்டிகை.நோன்பு பெருநாள்,நாம் ஏழைகளுக்கு அரிசி,கோதுமை,இறைச்சி,காய்கறி என்று கொடுத்து விட்டுத்தான் நாம நோன்புப் பெருநாள் தொழுகைக்கு செல்லவேண்டும்,அதேபோல ஹஜ்ஜுப் பெருநாள் அன்றும் அடுத்து வரும் மூன்று நாட்களிலும் ஆடு,மாடு,அல்லது ஒட்டகம் அறுத்து தத்தம் குடும்பம்,சொந்தங்கள்,ஏழைகள்,அக்கம் பக்கம் என்று அந்த இறைச்சிகளை பகிர்ந்து கொடுத்து,மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். இதுதான் இஸ்லாம்.

இன்னும் சொல்லப்போனா,நம்ம பெருநாட்களில் காசை விரயமாகுற சமாச்சாரமோ,சுற்றுச் சூழல் கெடும் அவலமோ கிடையாது.எல்லாம ஏழைகளும் உண்டு,பசியாறி சந்தோஷமாக இருக்கவேண்டும் என்ற தூய எண்ணம் மட்டும்தான்,ஒகே - இப்ப விஷயத்துக்கு வருவோம்,எல்லாரும் புதுப்பிறையை பாத்திருப்பீங்க,இன்ஷா அல்லாஹ் பத்து நாள்ல ஹஜ்ஜுப் பெருநாள் வருது,இதுக்கு குர்பானி கொடுக்க ஆடு,மாடு,ஒட்டகம் புக் பண்ணி இருப்பீங்க.


பொதுவா,நிறைய பேர்,தங்கள் வீடுகளில் அறுத்து சொந்தங்கள்,ஏழைகளுக்கு வழங்குகிறார்கள்,இது சரிதான் என்றாலும் அது மூலமா பரவலாக ஏழைகளுக்கு போய் சேராது,அது மட்டுமில்ல,வாங்கினவங்களே திரும்ப திரும்ப வாங்கும்படி நேரலாம் இல்லையா?

அதுக்கு எனக்கு ஒரு யோசனைங்க,பிடிச்சிருந்தா செஞ்சு பாருங்க.ஒவ்வொரு ஊர்லயும் பைத்துல்மால் இருக்கு,அது இல்லாத ஊர்கள்ல எத்தனயோ இஸ்லாமிய அமைப்புக்கள் இருக்கு,யத்தீம்கானாக்கள் (அநாதை இல்லங்கள்)இருக்கு.நீங்க அறுக்குற கறிகளை உங்க சொந்த பந்தம்,அக்கம் பக்கம் கொடுத்த பிறகு,ஏழைகளுக்கு உள்ள பங்கை அந்த நிறுவனத்துல கொண்டு போய் கொடுத்தா, அவங்ககிட்ட இருக்குற ஏழைகள் லிஸ்ட்ட வச்சி,எல்லா ஏழைகளுக்கும் பகிர்ந்து கொடுப்பாங்க.இது மூலமா எல்லாருக்கும் கிடைக்க வாய்ப்பு கிடைக்கும்.என்னா நான் சொல்லுறது.
-------------------------------------------------------

உங்களில் ஒருவர் பேரிச்சம் பழத்தின் ஒரு துண்டையாவது (தர்மம்) செய்து நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியுமாயின் அதை அவர் செய்துக் கொள்ளட்டும் என்று நபி அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதியீஇப்னு ஹாதம்(ரலி)நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

ஒவ்வொரு முஸ்லிம் மீதும் தர்மம் செய்வது அவசியமாகிறது என்று நபி அவர்கள் குறிப்பிட நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவர் (தர்மம் செய்ய எப்பொருளையும்) காணவில்லையாயின் என்று வினவ அவர் தன் கரங்களால் உழைத்து அதில் தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்யட்டும்'' என்று நபி அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவர் (தர்மம் செய்ய எப்பொருளையும்) காணவில்லையாயின் என்று வினவ ''அவர் தன் கரங்களால் உழைத்து அதில் தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்யட்டும்'' என்று நபி அவர்கள் கூறினார்கள். நபித்தோழாகள் 'அவர் அதற்கும் இயலாவிடின் என்று வினவ அவர் நன்மையை (பிறருக்கு) ஏவட்டும் என்று நபி அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் அம்மனிதர் அதற்கும் இயலாவிடின் என்று வினவ ''அவர் (பிறருக்கு) தீமை செய்வதை விட்டு தவிர்த்து கொள்ளட்டும். அதுவே தர்மமாகும் என்று நபி அவர்கள் விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி(ரலி)நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ

(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! 22:37
(THE QURAN)

Friday, November 13, 2009

உயிரே போனாலும் இந்த மடத்தனத்தை செய்ய மாட்டோம் !

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள டியோபாண்ட் என்ற இடத்தில் நடந்த ஜம்இய்யத்துல் உலமாயே ஹிந்த் மாநாட்டில், “வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்திற்கு எதிரானது. எனவே இந்தப் பாடலை முஸ்லிம்கள் யாரும் பாட வேண்டாம்…” என்று தீர்மானம் இயற்றப்பட்டது.

இதைக் கேள்விப்பட்ட சங்பரிவாரும், பாஜகவினரும் வானத்திற்கும், பூமிக்கும் இடையே குதியாய் குதித்து “இந்தக் கருத்து அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது…” என்ற அளவுக்கு பேசியிருக்கிறார்கள்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் வந்தே மாதரம் பாட வேண்டும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்று அவர்களுக்குத் தெரியவில்லை. வந்தே மாதரத்தைப் பாடித்தான் ஆக வேண்டும் என்று சொல்பவர்கள் இந்திய ஒற்றுமைக்கு எதிரானவர்கள்; தேச நலனுக்கு குந்தகம் செய்பவர்கள் என்பதே உண்மை!

இந்திய அரசியலைப்புக் குழு 1950ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதியன்று “ஜனகனமன” என தொடங்கும் பாடலை தேசிய கீதமாக அறிவித்துள்ளது. இந்தப் பாடல் எல்லா அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிலையங்களிலும் கட்டாயம் பாடப் படும். இந்தப் பாடலை 52 வினாடிகளில் பாடி முடிக்க வேண்டும் என்று விதியே இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்புவரை சினிமா படம் முடிந்தவுடன் திரையரங்குகளில் இந்தப் பாடல் ஒலிக்கப்படும். அப்போது எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் வழக்கம் இருந்தது.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக கூட்டங்களில் மட்டும்தான் இந்த தேசிய கீதம் அந்த காலத்திலும் பாடப்படவில்லை. இப்போதும் பாடப்படுவதில்லை. அந்த அளவுக்கு அவர்கள் தேசிய கீதத்திற்கு இழுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இவர்களின் வளர்ச்சி ஏற்பட்ட பிறகு திரையரங்குகளில் ஒலிபரப்பப்படும் “ஜனகனமன” பாடலும் நிறுத்தப்பட்டு விட்டது. எனவே தேசிய கீதத்தை மதிக்காத தேச விரோதிகள்தான் வந்தே மாதரத்திற்கு பல்லக்கு தூக்குகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய சுதந்திரத்திற்கு முன்பாகவே வந்தே மாதரம் பாடுவதை தேசிய தலைவர்கள் விட்டு விட்டார்கள். 1911ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில்தான் “ஜனகனமன…” என்று தொடங்கும் தேசிய கீதம் முதன் முதலாக பாடப்பட்டது.

இந்நிலையில் 1923ம் ஆண்டு காக்கி நாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த விஷ்ணு திகம்பர் பலுங்கர் என்பவர் இந்தப் பாடலைப் பாட முயன்றார். அப்போது சபையில் இருந்த மௌலானா முஹம்மது, “இது இஸ்லாத்திற்கு எதிரான பாடல். அதனால் இதைப் பாட அனுமதிக்க முடியாது…” என தடுத்தார்.

முஹம்மது அந்தப் பாடலை பாடக்கூடாது என்று தடுத்ததற்கு நியாயமான காரணங்கள் இருந்தன.
1. காங்கிரஸ் கட்சி வந்தே மாதரம் பாடலுக்கு விடை கொடுத்து விட்டுத்தான் “ஜனகனமன…” பாடலை 1911ல் எடுத்துக் கொண்டது.

2. 1922ல் அல்லாமா முஹம்மது இக்பா ன் “சாரே ஜஹான்ஸே அச்சா… ஹிந்துஸ் தான் ஹமாரா…” என்ற பாடலை காங்கிரஸ் துணை தேசிய கீதமாக ஏற்றுக் கொண்டது. (ஆதாரம் : ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேசிய பொதுச் செயலாளர் ஹொ.வெ. சேஷாத்திரி எழுதிய தேசிய பிரிவினையின் சோக வரலாறு. பக்கம் 169).

இவ்வளவுக்கும் பிறகு வந்தே மாதரத்தை காங்கிரஸ் மாநாட்டில் பாட முயன்றது அதிகப்பிரசங்கத்தனம்தானே! அந்த அதிகப்பிரசங்கித்தனத்தைதான் சங்பரிவாரும், பாஜகவினரும் இன்றுவரை விடாமல் செய்து வருகிறார்கள்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் யாரையும், எதற்காகவும் வற்புறுத்த முடியாது. “ஜனகனமன…” என்று தொடங்கும் பாடல் தேசிய கீதம்தான். இந்த தேசிய கீதத்தை பாட வேண்டும் என்று கூட யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேசிய கீதம் பற்றி உச்சநீதிமன்றம் இப்படி தீர்ப்பளித்திருக்க, தேசிய கீதமல்லாத வந்தே மாதரத்தை முஸ்லிம்களும் பாட வேண்டும் என்று சங்பரிவார் வற்புறுத்துவது ஜனநாயக விரோத செயலாகும்.

தேசப்பற்று என்பது தேச மக்களை நேசிப்பதாகும். வந்தே மாதரம் பாடுவதில் அல்ல. இந்தியாவில் வாழும் சிறுபான்மை மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், பழங்குடியின மற்றும் தலித் மக்களை சங்பரிவார் வெறுத்து ஒதுக்கும். அவர்கள் வெறுப்பால்தான் இம்மக்களும் அவர்களை தூரத்திலேயே வைப்பர். இப்படி இந்தியாவில் வாழும் 90 சதவீத மக்களை வெறுத்து, அவர்களின் வெறுப்புக்கும் உள்ளாவது நிச்சயம் தேசப் பற்றுள்ளவர்களின் செயலாக இருக்க முடியாது.

இப்படி தேசப் பற்றில்லாமல் திரிபவர்கள்தான் வந்தே மாதரத்தை தலையில் தூக்கி சுமக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

வந்தே மாதரம் பாடல், மதம் சார்ந்த பாடல். அது தேசிய பாடலல்ல. இந்தியாவை சரஸ்வதியாக, துர்க்கையாக பாவித்து, அதனை வணங்குகிறேன் என்று ஆனந்த மடம் நாவல் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதியுள்ளார். இப்படி இந்து தெய்வங்களை வர்ணித்து, வணங்குகிறேன் என்று பொருள் வரும் பாடலை இறைவன் ஒருவனே என்று ஏற்று, நடைமுறைப்படுத்தும் முஸ்ம்களால் எப்படி வணங்க முடியும்?

தாய் நாட்டின் மீது பற்று வைக்கலாம். அதற்காக வெறும் மண்ணை வணங்க வேண்டும் என்று சொல்வது பகுத்தறிவுக்கு முரணானது அல்லவா? மண்ணில் சிறுநீர் கழிக்கிறோம். மலம் கழிக்கிறோம். குப்பை போன்ற அசுத்தங்களை எடுத்து வீசுகிறோம். அவை மண்ணோடு மண்ணாக மக்கி விடுகின்றன. இவை அனைத்தும் கலந்துள்ள மண்ணை வணங்குவது மடத்தனம் இல்லையா? இந்த மடத்தனத்தை செய்ய மாட்டோம் என்று முஸ்லிம்கள் சொன்னால் அவர்களின் மீது சங்பரிவார் பாய்ந்து பிராண்டுவது நியாயம்தானா?


ZAKIR HUSSAIN

Thursday, November 12, 2009

பொறவு அவார்ட் தருவியளா ஜலீலா அக்கா?

ஜலீலா அக்கா எனக்கு அவார்டு தந்திருக்காஹ.நன்றி,ஆனா அதுக்கு எனக்கு தகுதி இல்ல.என்னக்கி இந்த வரதட்சணைப் பேய் ஒழியுதோ,ஹராமான சம்பாத்தியம்,வேலை இல்லாம ஹலாலான சம்பாத்தியம் பெருகுதோ,மூடநம்பிக்கை,ஷிர்க்-பித்-அத்,தர்கா ஒழியுதோ,இன்னும் பெண்களுக்கெதிரான பெருங்கோடுமைகள் நம் இந்தியாவிலிருந்து துரத்தி அடிக்கப்படுகிறதோ அன்றுதான் அந்த அவார்ட் பெற்றுக்கொள்வேன்,இன்ஷா அல்லாஹ்,தீமைகள் ஒழியும் ,நன்மைகள் பெருகும்.

அப்போ எனக்கு அவார்ட் தருவீங்களா ஜலீலா அக்கா,கண்ணீருடன் பாத்திமா ஜொஹ்ரா.

Tuesday, November 3, 2009

பாத்து முடிங்கம்மா!இல்லன்னா பிரச்சனைதான்!!

யாண்டி,அவோ ஊட்டுல நிறைய சொத்து இருக்குடி,அந்த ஊட்டுல உள்ள ஒரு பையனை எடுத்து ஒன் மொவளுக்கு முடிச்சா என்னடி?

அவனுக்கு கெட்ட பழக்க எல்லாம் இருக்குடி,வேண்டாம்?

அட போடி இவளே,ஆம்புளைன்னா இப்பிடித்தாண்டி இருப்பான்.சொத்து நெறைய இருக்கு,ஒன மவதான் அனுபவிக்கப்போரா?

சரி,வரதட்சணை அப்பிடி,இப்பிடின்னு நெறைய கேப்பாங்களே?

ஆமாம்,வூடு கேப்பாங்க,பணம்,நகைன்னு கேப்பாங்க,அங்க-இங்க பொரட்டி,அந்த மாப்பிள்ளையை எடுத்தா ஒனக்குதாண்டி நல்லது.யோசிச்சிக்க,சொல்றத சொல்லிப்புட்டேன்.

ஆமாண்டி நீ சொலறது சரிதான்,இந்தக் காலத்துல இது சகஜம்தான்,நம்ம கேக்கலன்னா வேற யாராச்சும் கொத்திக்கிட்டுப் போய்டுவாங்க.
------------------------------------------------------
அவளைபோய் ஒன் மொவனுக்கு கேட்டியாமே?

ஆமாம்,கேட்டன், யான் எதுக்கு கேக்குறியோ?

அவ ஒரு மாதிரிடி,தொழ மாட்டா,ஒழுக்கமா இருக்க மாட்டா,ஒரே சினிமா பைத்தியம்,டிவியே கதியேன்னு கெடப்பா.

ஆனா நல்ல அழகாம்லோ?

ஆமாண்டி,அழகா இருந்துட்டா போதுமா?நல்ல ஒழுக்கமும்,தொழுகையும்தானே முக்கியம்.

அவன் ஆசைப்பட்டுட்டான்,நான் என்னா செய்ய?
------------------------------------------------------
இப்பிடித்தாங்க ஆல்மோஸ்ட் எல்லா ஊர்லயும் நடந்துக்கிட்டு இருக்கு,இந்த மாதிரி பணம்,அழகு இந்த மாதிரி மட்டும் பையனையோ,பெண்ணையோ பாத்துட்டு,நல்ல ஒழுக்கம்,மார்க்கப்பற்று இதெல்லாம் இருக்கான்னு பாக்காததுனால,அவன் கொஞ்ச நாள்ல இவளைப் பிடிக்காம,வேறொருத்தியை நாடிப் போறான்,அதே மாதிரி,இந்த இவளும் வேறொருவனை கள்ள புரஷனாக்கிக் கொள்ளுரா? கடைசியில,அந்த குடும்பம் சீரழிஞ்சி,எல்லாமே நாசமாயிடுது.இதுனால அவங்க ரெண்டு பேருக்கு மட்டுமில்ல,அவங்க குடும்பம் மட்டுமில்ல,பாவம் பிள்ளைகளும்தான்.இதுனால இந்த உலகத்துலயும் அழிவு,மறுமையிளையும் அழிவு,கைசேதம்.

கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாத்தா,நான் சொன்னது சரின்னு உங்களுக்கே தெரிய வரும்.என்னக்கி குரானையும்,நபிகள் நாயகம் ஸல் அவர்களின் ஹதீசையும் கடைபிடிககிறோமோ,அப்பத்தான் இங்கேயும் வெற்றி,அங்க மருமையிளையும் வெற்றி,இன்ஷா அல்லாஹ்.இத நம்ம கண்கூடா பாத்துக்குட்டு இருக்கோம்.
----------------------------------------------------------
அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!” (புகாரி, முஸ்லிம்)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “பெண்களை அவர்களின் அழகுக்காக திருமணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய அழகு அவர்களை அழித்துவிடக் கூடும். பெண்களைச் செல்வந்தர்கள் என்பதற்காக மணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும் அடங்காப் பிடாரித்தனத்திலும் அவர்களை ஆழ்த்திவிடக் கூடும். மாறாக மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் மொழிந்தார்கள்: “எவருடைய மார்க்கப் பக்தியையும் நற்குணத்தையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ அத்தகைய மனிதர் உங்களிடம் திருமணம் கேட்டு வந்தால் அவருக்கு மணமுடித்துக் கொடுத்து விடுங்கள். நீங்கள் இப்படிச் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும் தீமையும் விளைந்துவிடும்.” (திர்மிதி)


மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும் எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்த பந்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.(4:1)