Friday, October 21, 2011

வெட்கக்கேடானது...


 "நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாள்வது வெட்கக்கேடானது" என்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டே கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்தார்.ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "முஸ்லீம்களை குண்டுவெடிப்புகளுக்குக் காரணகர்த்தாவாக சித்தரிக்க்கும் ஊடகங்களும் காவல்துறையும் அப்போக்கை கைவிட வேண்டும்" என்று கூறினார். தடய அறிவியல் உள்ளிட்ட விஞ்ஞான முறைகளில் நமது நாட்டின் காவல்துறைக்குத் திறமை இல்லாததாலேயே தீவிரவாத வழக்குகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக கூறினார். 
குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே மின்னஞ்சல்கள் அல்லது அலைபேசிகளில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் மூலம் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் குறித்து முடிவுக்கு வருவதை வண்மையாக கண்டித்தார். "உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் கையில் கிடைக்கும் முஸ்லீம்களின் மீது காவல்துறை பொய் வழக்கு போடுகிறது" என்றார். "அது போல் எவ்வித ஆதாரமும் இல்லாமல் பரபரப்புக்காக பொய் செய்தி வெளியிடும் ஊடகங்கள் கலந்துரையாடல்கள் போன்ற ஜனநாயக வழிமுறைகளின் மூலமாகவோ அல்லது அபாராதம் மூலமாகவோ, அரசின் விளம்பரங்களைக் கொடுக்காமல் தடுப்பதன் மூலமாகவோ தேவைப்பட்டால் ஊடக உரிமங்களை ரத்து செய்வதன் மூலமாகவோ திருத்தப்பட வேண்டும்" என்றும் மார்க்கண்டே கட்ஜ் குறிப்பிட்டார். கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் பெங்களூரு, வாரணாசி, புனே, மும்பை மற்றும் டெல்லி என பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளின் குற்றவாளிகள் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, October 19, 2011

கள்ளக் காதலும்,பெருகும் கொலைகளும்...


கடந்த 2006ம் ஆண்டு ஜூலை மாதம், கேரளாவின் சுற்றுலாத்தலமான மூணாறு, குந்தலா அணைக்கட்டின் அருகே, கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம். யாரென அனைவரும் அதிர்ந்து நிற்க, அருகில், புதுப்பெண்ணான மனைவி வித்யாலட்சுமி. தேனிலவு வந்த இடத்தில், யாரோ அனந்தகிருஷ்ணனை கொன்றுவிட்டு, நகைகளை பறித்துச் சென்றதாக அவர் கூற, போலீஸ் விசாரணையும், மொபைல் போன் குறுந்தகவல்களும் உண்மையை வெளிக்கொண்டுவந்தன.

அடுத்தடுத்து அதிர்ச்சித் திருப்பங்கள்... திருமணமான ஏழே நாளில், அனந்தகிருஷ்ணன் கட்டிய மஞ்சள் கயிற்றின் ஈரம் கூட காயாத நிலையில், கள்ளக்காதலன் ஆனந்துடன் சேர்ந்து, வித்யாவே கணவனை கொன்றது அம்பலமானது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை, அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறிக்கொண்டிருந்த இதுபோன்ற விஷயங்கள், தற்போது, தினசரி செய்தியாக மாறிவிட்டன. கணவனுக்கு தெரியாமல் மனைவி, மனைவிக்கு தெரியாமல் கணவன், மற்றொருவருடன் உறவு வைத்திருப்பது, சாதாரணமாகிவிட்டது.

334 கொலைகள் : மேற்கத்திய மோகமும், தகவல் தொழில்நுட்பக் கலாசாரமும் தமிழகத்தில் ஊடுருவத் துவங்கியபோதே, நாகரிகம் என்பதற்கான அடிப்படை விதிகளும் மாறிவிட்டன. இந்த வரிசையில், கள்ளக்காதலும் புதிய கலாசாரமாகிவிட்டது. ஆண், பெண் நட்பில், உடல் ரீதியான ஈர்ப்பு, பிரதான இடம் பிடித்துவிட்டது.
வீட்டில் கணவன், மனைவியின் தேவைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பூர்த்தியாகாதபோது புதிய துணையைத் தேடுகின்றனர். இந்த விவகாரம் பழைய துணைக்கு தெரியாதவரை பிரச்னை ஏற்படுவதில்லை. தெரிந்துவிட்டால், ஆண், பெண் யாராக இருந்தாலும், கண்டிப்பவரை, "காலி செய்யும்' அளவிற்கு துணிந்து விடுகின்றனர். கடந்தாண்டு மட்டும், 334 கொலைகள் நடந்துள்ளன.

கடந்த 2008, 2009, 2010 ஆகிய மூன்று ஆண்டுகளில் 143 ஆண்களும், 120 பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆண்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், அவர்களது மனைவிமார்கள் பெரும்பாலும் சம்பந்தப்பட்டுள்ளனர்.
காதலில் பல வகைகள் இருப்பதைப் போல், கள்ளக்காதலிலும் மூன்று, நான்கு பிரதான வகைகள் உள்ளன.

கவனத்தில் வராத மனைவியர் : முதல் வகைக்கு பலியாகுபவர்கள், பணமே பிரதானமாகக் கொண்ட ஆண்கள். இவர்களுக்கு, மனைவியிடம் காதலைக் காட்டுவதற்கு கூட நேரம் இருப்பதில்லை. இத்தகைய கணவன்மார்களின் மனைவிகளுக்கு, பக்கத்து வீட்டுக்காரனின், "ஹலோ! சவுக்கியமா?' என்ற குசல விசாரிப்பு கூட, மிகப் பெரிய குதூகலத்தைக் கொடுத்துவிடுகிறது. குசல விசாரிப்பு, "குஜால்' வரை சென்றுவிடுகிறது.

இத்தகைய பெண்களுக்கு, தன்னோடு பழகும் ஆணின் அழகோ, அறிவோ ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை. கணவனை விட சுமாரான அழகு, அந்தஸ்து என இருந்தாலும், தன் மீது அக்கறை காட்டுகிறான் என்ற எண்ணமே, அவர்கள் பக்கம் இவர்களை விழ வைத்துவிடுகிறது. இது கணவன்மார்களுக்கு தெரியும் போது, முதலில் கண்டிப்பு, அடுத்த கட்டம், கொலை. இதில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றவர்கள் ஏராளம் என்கிறது போலீஸ் தரப்பு.

"மாஜி' காதல் : அடுத்த வகை, திருமணமான பின், கணவனது நடவடிக்கைகள் பிடிக்காமல், முன்னாள் காதலனுடன் கள்ளக்காதல் கொள்வது. பெற்றோர் விருப்பம், நிர்பந்தத்திற்காக காதலித்தவனை விட்டு வேறு ஒருவரை கரம் பிடிக்கும் பெண்கள், சில நேரங்களில் முன்னாள் காதலனை பார்க்கும் போது, மீண்டும் உள்ளிருக்கும் காதல் துளிர்க்கிறது. காதலனோ, பழைய காதலியின் பலவீனத்தை பயன்படுத்திக் கொள்ள, கள்ளத்தனமாக காதல் வளர்கிறது. இதில், பெண்கள் பெரும்பாலும் பாதுகாப்பாக உணர்வதாக, மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது போன்ற சம்பவங்களிலும், சில நேரம், கட்டுப்படுத்துபவர் உயிர், "கட்டுப்பட்டுப்' போகிறது. இதற்கு, மூணாறு ஹனிமூன் கொலை ஒரு எடுத்துக்காட்டு. இது தவிர, சென்னையில், பள்ளி ஆசிரியை ஒருவர் முன்னாள் காதலனால், கொலை செய்யப்பட்ட சம்பவமும், கள்ளக்காதல் கொலை பட்டியலை உயர்த்தியது.

ஐ.டி., காதல் : ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள், பெரும்பாலும், வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்றனர். கணவன், மனைவியை தவிர மற்ற உறவினர்களிடம் இருந்து பிரிந்திருக்கும் நிலையில், வேலை பளுவும் கூடும் போது, குடும்ப வாழ்க்கை பின்தங்குகிறது. இந்த நிறுவனங்களில் ஆண்கள், பெண்கள் சகஜமாக பழகுவதால், பல தொடர்புகள் ஏற்படுகின்றன. மேலும், ஐ.டி., நிறுவனங்களை தவிர, பல வீடுகளில் கணினி வசதி உள்ளதால், "சாட்டிங்' கலாசாரம் மூலமும் கள்ளக்காதல் விவகாரங்கள் பெருகியுள்ளன. பல நாட்கள் சாட்டிங் மூலம் பழகும் சிலர், நேரில் பார்க்கும் போது பிடித்துப் போனால், காதலை வளர்த்துக் கொள்கின்றனர். இதில், சிலர் "வீடியோ சாட்டிங்' மூலம், பாலியல் செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

ஜாலிக்காக கள்ளக்காதல் : இதைத் தவிர எதைப் பற்றியும் கவலைப்படாமல், விளையாட்டுக்காக அல்லது செக்ஸ் தேவைக்காக மட்டும் சிலருடன் உறவு வைத்திருப்பதை, "பேஷனாக' கருதுபவர்களும் உண்டு. திருமணமான ஆணும், பெண்ணும் தங்களுக்கு தெரிந்தவர்களுடன் இந்த வகையில் உறவு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

"டிவி' தொடர்களும் ஒரு காரணம் : கள்ளக்காதல் சம்பவங்கள் தொடர்பாக, மனநல நிபுணர் நம்பி கூறியதாவது:
கிராமங்களில் அரசல் புரசலான விஷயங்கள், நகர்ப்புறத்தின் வளர்ச்சியால் தற்போது அதிகரித்துள்ளது. நகரமயமாதல், தொழில் மயமாதல் போன்ற காரணங்களால், தொடர்புக்கான வசதிகள் அதிகரித்துள்ளன. நகர்ப்புறத்தில், அடுத்த வீட்டில் யார் இருக்கின்றனர். அந்த வீட்டிற்கு யார் வந்து செல்கின்றனர் என்பதே பலருக்கு தெரியாது. இதனால், ஆணோ, பெண்ணோ தவறு செய்வதற்கு வாய்ப்புகள் அதிகரித்து விட்டன.

தாம்பத்ய வாழ்க்கையில் ஏமாற்றம் அதிகரிக்கும் போதும், கணவன், மனைவிக்கிடையில் ஒற்றுமையின்மை அதிகரிக்கும் போதும், பிறரது தொடர்புக்கான வாய்ப்புகள் அதிகரித்துவிடுகிறது. ஏமாற்றம், விரக்தியில், தேடுதல் உணர்வும் அதிகரிக்கிறது. இதை, ஊடகங்களும் அதிகளவில் ஊக்குவிக்கின்றன. "டிவி' சீரியல்கள் இது போன்ற விஷயங்களை நியாயப்படுத்துவதுடன், இப்படியெல்லாம் செய்யலாம் என்று தூண்டுகின்றன. கணவன்மார்களிடம் இருக்கும் குடிப்பழக்கம், பெண்களிடம் இருக்கும் அறியாமை ஆகியவை, இருதரப்பையும் அரவணைப்பை தேடச் செய்கிறது.

சிங்கப்பூரில், தற்கொலை சம்பவங்கள் அதிகரித்த போது, தற்கொலை செய்திகள் வெளியிடக் கூடாது என்று ஊடகங்களுக்கு மூன்று மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தடைக்குப் பின், தற்கொலை சம்பவங்களே குறைந்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டாக்டர்கள் சிலரும், இது போன்ற கள்ளத்தொடர்பு விஷயங்களை தவறானதில்லை என்று நியாயப்படுத்துகின்றனர். இதை சட்ட விரோதமான உறவு என்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இவ்வாறு நம்பி கூறினார்.

ஒழுக்கம் தான் ஒரே வழி? : இந்த சம்பவங்களில் நடவடிக்கை குறித்து, பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: குடும்ப நல மையங்களில் முதலில், இது தவறு என்று கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. மீறி தவறு செய்யும் போதும், புகார் வரும் போதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த விஷயத்தில், தனி மனித ஒழுக்கம் என்பது முக்கியம். அனைத்து மதங்களிலும், இந்த விஷயம் தவறு என்பது உணர்த்தப்படுகிறது. அதற்கான தண்டனையும் அளிக்கப்படுகிறது. ஆனாலும், யாரும் அவற்றை மதிப்பதில்லை.

இந்த விஷயங்களுக்கு ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் பெரிதும் உதவுகின்றன. சமூகத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடும் என்று பயப்படுபவர்கள் மட்டுமே, இந்த விஷயத்தில் சற்று தள்ளி நிற்கின்றனர். கலாசார சீரழிவுக்கு, இந்த விஷயம் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் கூறினார்.

மூன்றாண்டுகளில் அதிகளவில் கள்ளக்காதல் கொலை நடந்த நகரங்கள்:

1. தர்மபுரி -38
2.கிருஷ்ணகிரி-27
3.நாகப்பட்டினம்-23
4.வேலூர்-20
5.தேனி-14. இந்த ஐந்து பகுதிகளும் பொருளாதாரம், கல்வியில் பின்தங்கியவை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய சம்பவங்கள்:

* 2006 ஜூன்: தேனிலவுக்காக மூணாறு சென்ற போது, மனைவி வித்யாலட்சுமியின் ஏற்பாட்டின்படி, கணவன் அனந்தகிருஷ்ணன் கொல்லப்பட்டது.

* 2010 ஜூலை: தண்டையார்பேட்டையில், பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்த நடுநிலைப் பள்ளி ஆசிரியை, முன்னாள் காதலனால் கொல்லப்பட்டது.

* 2010 ஜூலை: தன் வயிற்றில் வளர்ந்த கருவை கலைக்கச் செய்ததற்காக, கள்ளக்காதலன் ஜெயக்குமாரின் மகன் ஆதித்யாவை, காதலி பூவரசி கொன்று, சூட்கேசில் வீசியது.

*2011- சார்லஸ் என்பவர், நண்பனின் மனைவியுடன் கொண்டிருந்த கள்ளத் தொடர்பு காரணமாக கொலையுண்டது.

* 2011 பிப்ரவரி- சிந்தாதிரிப்பேட்டையில் சிரஞ்சீவி என்பவர் மனைவி, கணவனின் கள்ளத்தொடர்பை கண்டிப்பதற்காக தீக்குளித்தது.

* 2011 செப்டம்பர்- சூளைமேட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கணவன் மற்றும் குழந்தைகளை விட்டு, காதலனுடன் சென்று, மூன்று மாதம் கழித்து திரும்பி வந்தது. 


தினமலர்


நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து; அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக; மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.


“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.


நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.
 திருக்குர்ஆன்