Thursday, September 24, 2009

பெருங்கொடுமைங்க இது!

தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த 25 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயுமான ஒரு பெண்ணை பழிவாங்கும் நடவடிக்கையாக நால்வர் சேர்ந்து வன்புணர்ந்து கொலை செய்த கொடூரச் சம்பவம் மும்பையில் நேற்று நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரில் மூவர் உடன் பிறந்த சகோதரர்களும் இவர்கள் இறந்த பெண்ணின் தூரத்து உறவு முறை யும் ஆவார்கள். மற்றொருவர் அவர்களின் நண்பராவார். இவர்கள் நால்வரும் சேர்ந்து இக்கொலையை அனடாப் ஹில்லில் உள்ள ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று அப்பெண்ணை வன்புணர்ந்து மண்ணெண்னை ஊற்றி எரித்துள்ளனர். கடுமையான தீக்காயங்களுடன் நேற்று காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக அப்பெண்ணின் வாக்குமூலத்தின்படி ராஜேஷ் தேவேந்திரா(30), குமார் தேவேந்திரா(28), நித்யா தேவேந்திரா(25) ஆகிய மூவரும் (உடன் பிறந்த சகோதரர்கள்) அவர்களின் நண்பர் சங்கர் முதலியார்(35) உள்பட நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறை உயர் அதிகாரி கூறினார்.மேலும் இது சில வருடங்களுக்கு முன் இப்பெண் நித்யாதேவந்திராவை திருமணம் செய்ய மறுத்துவிட்டபடியால் ஆத்திரமடைந்த இச்சகோதரர்கள் திட்டமிட்டே இதை செய்திருப்பதாக அப்பெண்ணின் உறவினர் கிருஷ்ணா ரெட்டி கூறினார்
----------------------------------------------

இந்தியாவின் பிசினஸ் கேபிடல்லில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.இது வெளியில் தெரிந்த செய்தி,ஆனால் தெரியாமல் எத்தனயோ உண்டு.அவைகள் எல்லாத்தையும் மேல் சாதி இந்துக்களும்,அரசியல்வாதிகளும் மறைத்துவிடுகின்றனர்.பெண்களுக்கு எதிரான கொடுமை இந்தியாவில் தான் அதிகம் நடக்கின்றன என்றும்,அரபு நாடுகளில் மிக மிக குறைந்த அளவில் நடப்பதாகவும் ஐ நா அறிக்கை கூறுகிறது.ஒரு முறை மத்திய உள்துறை மந்திரியாக இருந்த எல்.கே.அத்வானி சொன்னமாதிரி,"இதே போன்ற செயல்களுக்கு,இஸ்லாம் சொல்கிற மாதிரி - மரண தண்டனை கொடுத்தால்தான் இந்தியாவில் குற்றம் மறையும்".
சிந்திப்பார்களா,அல்லாஹ்வின் சட்டம்தான் அனைத்துக்கும் தீர்வும்,நன்மையும் என்று!

Wednesday, September 23, 2009

நாத்த பொழப்புடா இது?சாட்டையடி 4

பெருநா கொண்டாடியாச்சி,எல்லாரும் நோன்பு பிடிசிருப்போம்.அல்லாஹ் அத ஏத்துக்கொண்டு நமக்கு சொர்க்கம் தர பிரார்த்திப்போம்,இன்ஷா அல்லாஹ்.

இஸ்லாத்த பொறுத்தவரை எல்லாம சரியா இருக்கணும்.எல்லாத்துக்கும் கேள்வி-கணக்குன்னு இருக்கு.நீ எப்படி சம்பாதித்தே,எப்படி செலவழித்தே,அக்கம் பக்கம் உள்ள மக்களுக்கு,ஏழைகளுக்கு,அனாதைகளுக்கு,இப்படி எல்லாருக்கும் நீ கொடுத்தியா?இப்பிடி எல்லாத்துக்கும் கேள்வி கணக்கும் உண்டு,அது போல பரிசா சொர்க்கம்,நரகம் இப்பிடியும் உண்டு.

"ஒரே இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை.முஹம்மது நபிகள் அவர்கள் அந்த இறைவன் அல்லாஹ்வுடைய தூதர் ஆவார்கள்" இப்பிடி யார் சொன்னோமோ,அவர்கள் எல்லாரும் முஸ்லிம்கள்.முஸ்லிம்கள் என்று ஆகிட்ட பிறகு,அல்லாஹ்வும்,அவனுடைய தூதரும் என்ன கட்டளை இட்டாங்களோ,அதை நடை முறைப் படுத்த வேண்டும்.

தொழுகை,நோன்பு,ஜகாத் என்ற ஏழைகள்,ஆதரவற்றோருக்கு கொடுக்கவேண்டிய வரி,ஹஜ் செய்தல் இவைகள் கடமைகள்.இதையும் நாம் பேணி வர வேண்டும்.இத்துடன் நம் கடமை முடிந்து விடுகிறதா,இல்லை.

நம் அன்றாட வாழ்வில்,இருபத்து நான்கு மணி நேரமும்,நாம் எதிர் கொள்கிற ஒவ்வொண்ணுக்கும் குரானும்,ஹதீசும் காட்டிய வழிப்படி நடக்க வேண்டும்.அதுதான் மார்க்கம்.

காலையில எந்திரிச்சி ஒருத்தன் கடைக்கி,வயலுக்கு,தோப்புக்கு,ஆபீசுக்கு வேலைக்கி போறான்.இல்லை சொந்தமா வியாபாரம்,விவசாயம் பண்றான்.அப்படி பண்ற வேலையோ,வியாபாரமோ மற்ற மக்களுக்கு கெடுதல்,தீங்கு செய்யாததாக இருக்க வேண்டும்.

உதாரணமா,ஒருத்தன் ஒரு மளிகை கடை வச்சிருக்கான்,அதுல இறைவன் தடுத்த எந்த பொருளும் விற்காமலும்,மக்களுக்கு தீங்கு செய்ற எதையும் செய்யாமலும்,நேர்மையான முறையில்,எடை அளந்து,யாரையும் மோசடி செய்யாமலும் வியாபாரம் செய்கிறான் என்றால் அவன்தான் இறைவன் சொன்ன சொல்லையும்,நபிகள் சொன்ன சொல்லையும் செய்கிறவன்,அவனுக்கு மறுமையில் வெற்றி கிடைக்கும்।இன்ஷா அல்லாஹ்।

சரி,இதுக்கு மாத்தமா சாராய வியாபாரம் செய்கிறான்,சாராய வேலைக்கி போறான்,தானும் அந்த சம்பாத்தியத்துல கெடச்சத வச்சி தின்கிறான்,பொண்டாட்டி பிள்ளைகளுக்கு குடுக்குறான். இப்படி நாத்தப் பிழைப்பு நடத்தறவன் கதி? பொறவு பாக்கலாம்.

(இதில் குறிப்பிடப்படும் செய்திகள் யாவும்,யாரையும் அல்லது தனிப்பட்ட நபர்களை குறிப்பவை அல்ல. ஆனால் அப்படி யாராவது சாராய சம்பாத்தியத்தில் இருந்தால் இன்றே திருந்துங்கள்-இது குரான்,ஹதீஸ் மூலம் விடுக்கப்படும் எச்சரிக்கை.)

Saturday, September 19, 2009

பெருநாள் வாழ்த்துக்கள்

பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம்। மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

உலக மாந்தர் யாவருக்கும் என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்!
இன்ஷா அல்லாஹ்,நாளை முதல்,எதிர்பாருங்கள்।
கலக்கிடுவோம்ல!!!

Tuesday, September 8, 2009

ரமலான் முபாரக் & அட்வான்ஸ் ஈத் முபாரக்.

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி,சகோதரர்களே,புனித மிகு ரமலான் நம்மிடையே இருந்துகொண்டுள்ளது,கடைசி பத்தில் லைலத்துல் கதர் எனும் ஆயிரம் மாதங்களைவிட சிறந்த நாள் இன்ஷா அல்லாஹ் வரவிருக்கிறது।அதை தேடிக்கொண்டு,(தேடிக்கொள்ளுங்கள்)இபாதத்தை அதிகப் படுத்திக் கொள்ளுங்கள் என நம் உயிரினும் மேலான அண்ணல் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே,இன்ஷா அல்லாஹ்,நோன்பு முடியும் வரை இந்த பிளாகுக்கு விடுமுறை,மேலும் இன்ஷா அல்லாஹ்,பெருநாள் அன்று முதல் மீண்டும் அநியாயம்,பொய்,ஏமாற்று,வரதட்சணை,பெண்களுக்கு எதிரான கொடுமைகள்,வட்டி-சாராயக் கடை சம்பாத்தியம் இன்னும் மார்க்கத்திற்கு எதிரான போக்கை அம்பலப்படுத்தியும்,அதற்கு இஸ்லாமிய தீர்வும் குறித்தும் தொடர்ந்து விவாதிக்க உள்ளோம்।

எல்லாம் வல்ல அல்லாஹ்,நம் அனைவர் பாவங்களையும் மன்னிப்பானாக.ஆமீன்.

ரமலான் முபாரக் மற்றும் அட்வான்ஸ் பெருநாள் வாழ்த்துக்கள்

Monday, September 7, 2009

வரதட்சணை வாங்கும் ஆண் பொட்டப்பய, வாங்கத்தூண்டும் பெண்ணுக்குப் பெயர் என்ன? அனானி கேள்விக்கு,பதில்!சாட்டையடி 3

//ஆனால் அந்த ஆண் பொட்டையை வரதட்சணை வாங்க எல்லா வகையிலும் தூண்டும் (வரதட்சணையை தொகையை பேசி முடிக்கும்) அவனின் தாய் மற்றும் சகோதரி போன்ற பெண்களை என்ன பெயர் வைத்து, எப்போ சாட்டையடி கொடுக்க போகிறீர்கள்???//

ஒருத்தர் இப்பிடி கமென்ட் பகுதியில கேட்டிருக்கார்।உண்மையில இது ஏத்துக்க வேண்டிய விஷயம்தான்।

கொமரா இருந்து,கல்யாணம் முடிக்கிறதுக்குள்ள வாப்பாவும்,சகோதரங்களும் படுற கஷ்ட்டத்தப் பாத்துக்குட்டு இருந்துட்டு,கல்யாணம் ஆனப்பறம்,அவளுக்கு பிள்ளைங்கள் பொறந்து,அவன் ஆம்பிலப்புல்லையா இருந்துட்டா,தான் பட்ட கஷ்டத்த மறந்துட்டு,அந்த பொண்ணும்,தான் மகனுக்கு வரதட்சணை வேணும் என்று கேக்குறது இருக்கே,இது பெருங் கொடுமை?

இதுக்கு என்னோட ஐடியா,ஒரு ஆள்,ஒரே ஒரு ஆள் துணிஞ்சு,நேரா அதிராம்பட்டினம் போலீஸ் ஸ்டேசன் போய்,ஒரு கம்பிளைன்ட் எழுதி கொடுத்து,இதுக்கு காரணமா இருக்குற ஆம்பிள,பொம்பிள,மணமகன் பொட்டப்பய,நாத்தனாமாறு இப்பிடி எல்லாத்தையும் புடிச்சி,உள்ளே தள்ளி களி திங்க வச்சா சரியாயிடும்.

ஜமாத்துல,கட்சியிலன்னு எவனும் வந்தா,அவன் மேலேயும் கம்ப்ளைன்ட் பண்ணி உள்ள தள்ளுங்க।நமக்கு,ரெண்டு வகையில நியாயம் இருக்கு.ஒன்னு,நம்மோட புனிதமான் மார்க்கம்,ஒரு ஆண்தான்,பெண்ணுக்கு மஹராக,அவள் கேட்பதைக் கொடுக்கவேண்டும் என்று சொல்லி பெண்களை உயர்த்துகிறது,கண்ணியப்படுத்துகிறது.

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்।அல்குர்ஆன்

ரெண்டாவது, சட்டம் அது கடுமையா தண்டிக்க சொல்லுது।ஆனா கம்பிளைன்ட் கொடுக்குறது ரொம்ப கம்மி.இப்படி துணிஞ்சு கம்பிளைன்ட் கொடுத்து பாருங்க,நிலைமை கொஞ்சம்,கொஞ்சம் சீராகும்.

இன்ஷா அல்லாஹ்,
இன்னும் சாட்டையடி தொடரும்.............

Sunday, September 6, 2009

பேரு மாறிப்போச்சி? குமுறல்-1

ரேஷன் கார்டுக்கு பேரு எடுக்க வர்றான்,எலக்ஷன் அட்டைக்கு பேரு எடுக்க வர்றான்,அட எது எத்க்கோ பேரு குறிக்க வர்றான்,(கரண்டுக்கு,வரி வசூலிக்க இப்பிடி)யாரு,அட கவருமேண்டுல்லேர்ந்துதாங்க.கேட்டா-ஆபிசருங்கறான்.எல்லாத்தையும் குறிச்சிப்புட்டு, கார்டை,அட்டையை,அட எதோ ஒன்னை வாங்கிப் பார்த்தா,அட பாவிபயலுவளா,அழகான,உம்மாவும்,வாப்பாவும் வச்ச பேருக்கு பதிலா,இவன் ஒரு பேர எழுதிள்ள தொலச்சிர்றான்,நாமளும் அப்போ கண்டுகிடாம,பாஸ்போர்ட் எடுக்கும்போதும்,முக்கியமான வேலையாவும் தேவைப்படும்போது,மாட்டிக்கிட்டு அல்லாடறோம்.
இப்படி எத்தனை பேரு நம் ஊர்ல இருக்காக தெரியுமா?அட ஏன் கேக்குறியே?என் பேரும் அப்பிடி வந்ததுதாங்க!என்ன அப்பிடி பாக்குறியே, நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க.


பாத்திமா ஜொஹரா இது என் பேரு.ரேஷன் கார்டுல பாத்திமா ரோஜான்னு பதிஞ்சுட்டுப் போய்ட்டான்.அப்பொறம்,எலக்சன் கார்டு,இப்பிடி ஒவ்வொன்னா எல்லாத்துலயும் ரோஜான்னே மாறிப் போச்சே.வேற வழி இல்ல,மாத்தலாம்னு போனா,இதுக்கு லேட்டாகும்னு சொல்றான்,மாப்பிள்ளை எனக்கு அமெரிக்காவுக்கு விசாவுக்கு அப்பளை பண்ணி,கூப்பிட்டும் வந்தாச்சு.சரி வுடு ஜூட்,ரோஜான்னே இருக்கட்டும்னு விட்டாச்சி.இப்போ மாப்பிளை,பிள்ளைகளோட தற்போது டெக்சாசில் இருக்கோம்,ஆனா வீடு,வசிப்பிடம் எல்லாம் நியூ யார்க் முகவரிதான்.
அவரு சாப்ட்வேர், நான் தயாரிப்பு நிர்வாகத்துல இருக்கேன்.காதிர் முகைதீன் பள்ளியில படிச்சிட்டு,மெட்ராசுல மீதியும்,அமெரிக்காவுல பாதியுமா முடிச்சி,கை நிறைய சம்பளம்.சரி போதும் என்னப்பத்தி.

இந்த மாதிரி,பேரு மாறிப் போன விஷயம் உங்களுக்கும் இருந்தா பகிர்ந்துக்கோங்க.நம்மை வயித்து எரிச்சல கொட்டித் தீத்துக்கலாம்.

(இது குமுறல்,சாட்டையடி அல்ல)

Saturday, September 5, 2009

யாரை ஏமாத்த இந்த வேலை? சாட்டையடி 2

இது புனிதமான ரமலான் மாசம்,அல்லாஹ்வுடைய மன்னிப்பு கிடைக்கும் மாசம்,அருள் நிறைந்த மாசம்.உலக முஸ்லிம்கள் எல்லாம் நோன்பு நோற்று,அமல் செய்யும் மாசம்,அதோட நாம பெரும்பாலான மக்கள் இந்த மாசத்துலதான் ஜகாத்தும் கணக்கு பண்ணி கொடுக்கிறோம்,கூடுதல் நன்மை கிடைக்கும் என்கிறதால.

ஆனா நெறைய பேரு ஜகாத்து கொடுக்கிறேன் பேர்வழி என்று ஏழை ஜனங்களை கூட்டி வச்சி,அவங்க வீட்ட்லயோ,தேங்கா வாடியிலயோ தல ஒன்னுக்கு அஞ்சோ,பத்தோ இப்பிடி கொடுக்கிறாங்க.அதுமட்டுமில்லாம அவன் திரும்ப வந்து வாங்கிடுவான்னு மை வச்சி வேற உடுவாஹ.என்னமோ எலக்ஸன்ல ஒட்டு போடுற மாதிரி.அதோட அந்த நேரத்த பாக்கனுமே,எதோ போர் நடந்த எடம் மாதிரி இருக்கும்.எடுபிடி பல பேரு,ஐயோடா,காட்டுக் கத்தல் கத்திக்கிட்டு,அட இதுக்கு பேரு மொதல்ல ஜகாத்தா?யாரடா ஏமாத்தப் பாக்குறீங்க?ஊரெல்லாம் உங்களை வள்ளல் என்று சொல்ல கொடுக்கிறியா?இல்ல அல்லாஹ்வுக்குன்னு கொடுக்கிறியா?

மொதல்ல ஜக்காத்துன்னா என்னா?அது ஒரு கடமை.அல்லாஹ்வுக்கு செய்ற கடமை.அழகான முறையில,வூட்டுல உக்காந்து,கணக்கு பண்ணி,அந்த காசை எடுத்துக்குட்டுப் போய், சொந்தத்துல இருக்குற ஏழை,அக்கம் பக்கம்,இப்பிடி போய் பாத்து,அவங்க தேவை நிறைவேற்ற அளவுக்கு கொடுத்துட்டு வந்தா,அவங்க தேவையும் நிறைவேறும்,நீ கொடுத்த ஜகாத்து ஊர்ருக்கு தெரியாது,அல்லாஹ்வும் பொருந்திக் கொள்வான்.ஜக்காத்து வாங்குற நிலமையில இருக்கிறவன் கண்ணியம் காக்கப்படும் இல்லையா?

அட இதுகூட வேணாங்க,நம்ம ஊர்ல பைத்துல் மால் இருக்கு,(இப்போ எல்லா ஊர்லயும் இருக்கு) பரக்கத் சார்,முனாப் காக்கா இருக்காக,அங்க போய்,இது என்னோட ஜக்காத்து,இன்ன வூட்டுல,இன்ன ஆள் கஷ்டப்படுது,இந்த பணத்தை கொண்டு போய் சேத்துப்புடுங்க,இப்பிடி சொன்னா,யாருக்கும் தெரியாம,அழகா கொண்டு போய் சேக்கப் போறாங்க.இதுனால யார் கொடுத்தான்னு கூட தெரியாது,உங்களுக்கும் ஏழை துவா கிடைக்கும்.

அத வுட்டுட்டு யாராவது,பெருமைக்காக செஞ்சீங்கன்னா,அல்லாஹ் பாத்துக்கிட்டு இருக்கான்,மறந்துடாதீங்க.


நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்தார். அவருடன் கையில் அவருடைய மகள் இருந்தாள். அவளுடைய கையில் இரண்டு தங்க வளையங்கள் இருந்தன. நபி(ஸல்) அந்தப் பெண்மணியிடம் ''நீ இதற்கு ஜகாத் கொடுத்துவிட்டாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ''இல்லை'' என்றார். ''மறுமையில் அல்லாஹ் இதற்குப் பதிலாக நெருப்பினால் ஆன இரண்டு வளையங்கள் அணிவிப்பதை விரும்புகிறாயா?'' என்று கேட்டார்கள். (இதைக் கேட்டவுடன்) அவர் அவற்றைக் கழற்றிக் கொடுத்து விட்டார் என்று அமீர் இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். அபூதாவூத், நஸாயீ மற்றும் திர்மிதீஇது ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


தங்கத்தால் செய்யப்பட்டிருந்த ஒருவகை நகையை நான் அணிந்திருந்தேன், அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ''இதுவும் (சேகரித்துப் பதுக்கி வைக்கும்) புதையல் ஆகுமா?'' என்று அதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு, ''அதனுடைய ஜகாத் செலுத்தப்பட்டிருந்தால் அது புதையல் ஆகாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், தாரகுத்னீ. இது ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.

இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்.

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் சாட்டையடி தொடரும்.............Friday, September 4, 2009

ஆண்கள் உண்மையில்- பொட்டைகளா?வீரர்களா?? சாட்டையடி 1

கணவன் கொலை,மனைவி வெறிசெயல்?கள்ளக் காதல்,கணவனை கொன்ற மனைவி கைது?கள்ளக் காதலுக்கு இடையூறு,மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றவருக்கு தூக்கு தண்டனை?

இவைகள் நாம் அன்றாடம் பார்க்கும் செய்திதாங்க.இது பழசுன்னாலும்,இந்த மாதிரி நியூசு இப்போ ரொம்ப அதிகமா வந்துகிட்டே இருக்கு.அதுதான் வேதனையான விஷயம்.இந்த மாதிரி நடக்குறதுக்கு நெறைய காரணங்கள் இருந்தாலும்,அத்தனையும் மனுஷனோட தரப்புலேர்ந்துதான் உண்டாகுது.காரணம் ஏக இறைவன் நமக்கு தெளிவான வேதத்தையும்,நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தெளிவான ஹதீசையும் தந்துள்ளார்கள்,அத நாம ஒழுங்கா பின்பற்றவில்லை என்பதோடு கூடி,மற்ற மாத்து சனங்ககிட்டேயும் எடுத்து சொல்லல.இதுக்கு நாமதான் காரணம்.வேலைக்கி போறவன்,வேலை மட்டும் பாத்து சம்பளம் வாங்கி பொண்டாட்டி புள்ளைய காப்பாத்தனும்னு நெனக்கிறான்,பிசினஸ் பண்றவன்,ஒழுங்கா பிசினஸ் பண்ணினா போதும்னு நினைக்கிறான்.இப்பிடி அவன் அவன் தான் மட்டும், தன் குடும்பத்தை மட்டும் பாத்துகிட்டு இருந்தா,இந்த சமூகம் உருப்படுமா?அல்லாஹ்வுக்கு பதில் சொல்லனும்கிற பயம் இல்லையா?


எத்தன பேரு தான் வீட்டுல இருக்கிற குமர பத்திக் கவலை படுற மாதிரி,பக்கத்து வீடு,பக்கத்து தெரு,அதே ஊரு,அசலூரு இப்பிடி குமர் தேங்குதே,இதுக்கு என்ன காரணம்,அதுக்கு நாம இந்த ஊரோட சேர்ந்து என்ன செய்யணும் அப்பிடின்னு யோஷிசீங்களா?கல்யாண வயசு வந்தும்,கல்யாணம் முடிக்காமே,அவ தவிக்கிற தவிப்பு எத்தனை பேருக்கு தெரியும்?இதுனால அவ இன்னொருத்தன் கூட ஓடிப் போக வாய்ப்பு இருக்கா,இல்லைய்யா?இப்பிடி யாரும் கண்டுகொள்ளாத காரணத்தால வரதட்சணை பேய் இப்படி பிடிச்சி ஆட்டுதே,ஏன் கல்லைப் போல் நிற்கிறீர்கள் ஆண் சமுதாயமே?ஆம்பிளைன்னா வீரன்னுதான் பேரு,ஆனா வரதட்சணை வாங்குற,ஊக்கப்படுத்துற எந்த ஆம்புளையும் பொட்டதான்,இதுல என்னா சந்தேகம்?

கல்யாணம் முடிக்க இயலாம,தவறு செய்கிற பாவத்துக்கு தள்ளப்படுகிற அவலம் இந்த வரதட்சணைக்கு இருக்காமாதிரி,கல்யாணம் செஞ்சும்,ஆம்பிளையோ,பொம்பளையோ விபச்சாரம் பண்ணுற கேடு கெட்ட நிலக்கி வர்றாங்கன்னா அதுக்கு என்ன காரணம்,அதுக்கு தொலைக் காட்சியும்,ஆடம்பர மோகமும்,அல்லாஹ் நாளை மறுமையில் விசாரிப்பான் என்ற பயமும் இல்லாத காரணம்தானே?அது போல வலுக்கட்டாயம் பண்ணி,பிடிக்காத மாப்பிள்ளை,அல்லது பிடிக்காத பொண்ணு,இப்படி கட்டி வைக்கிறது,ஆணோட கருத்த கேட்டு செய்ற மாதிரி பொண்ணோட கருத்து கேட்கிறது இல்லை.இப்படி அடுக்கிக் கொண்டே போகலாமே?ஏன் இந்த நிலை,ஆண் என்ற போர்வையில் உலா வரும் பொட்டைகளே,(நல்ல ஆண்கள் மன்னிக்கவும்,மற்றவர்களுக்கு சூடு-சொரணை வருகிறதா?என பார்ப்போம்)குரான்,ஹதீஸைக் கொண்டு உங்களை எச்சரிக்கிறேன்.நாளை மறுமையில் அல்லாஹ்விடம் நாம் பதில் சொல்லியே தீர வேண்டும்,மறந்துவிடாதே?

அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!” (புகாரி, முஸ்லிம்)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُநபி صلى الله عليه وسلم அவர்கள் மொழிந்தார்கள்: “எவருடைய மார்க்கப் பக்தியையும் நற்குணத்தையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ அத்தகைய மனிதர் உங்களிடம் திருமணம் கேட்டு வந்தால் அவருக்கு மணமுடித்துக் கொடுத்து விடுங்கள். நீங்கள் இப்படிச் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும் தீமையும் விளைந்துவிடும்.” (திர்மிதி)

மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும் எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்த பந்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.(4:1)

(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (2:221)

(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!


(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.

(அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.


திரு குர்ஆன் (1 - 1 to 7)