பன்றிக் காய்ச்சல், உலக சுகாதார மையத்தால் கண்டங்களைத் தாண்டிப் பரவும் கொள்ளை நோயாக (epidemic) ஜூன் 11-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
ஆயினும், ஆகஸ்ட் 3-ம் தேதி புனேயில் பன்றிக் காய்ச்சலால் விளைந்த முதல் மரணம் பதிவு செய்யப்பட்ட பின்புதான் இந்தியா பெரும் பரபரப்போடு விழித்துக் கொண்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த இருபத்தாறுக்கும் மேற்பட்ட பன்றிக் காய்ச்சல் மரணங்கள் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன.
ஓரிரு ஆண்டுகளில் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்களைப் பாதிக்கச் சாத்தியமுள்ள கொள்ளை நோயாக பன்றிக் காய்ச்சல் உருவெடுத்துள்ளது என உலக சுகாதார மைய நிபுணர்கள் கருதுகின்றனர்.
கடந்த நூறு ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சல் இத்தகைய கொள்ளை நோயாகப் பரிமாணம் கொள்வது இது நான்காவது முறையாகும். ஆயினும், இந்தத் தடவை பன்றிக் காய்ச்சலின் வீரியம், இதுவரை “மிதமானதாக’ இருக்கிறது என ஒப்புக்கொள்ளும் நிபுணர்கள், அதன் வீரியமும் வேகமும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் எடுத்துரைக்கின்றனர்.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளுக்கே பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் பெரும் சவாலாகத் திகழும்போது, இந்தியா போன்ற ஒருங்கிணைந்த வளர்ச்சியடையாத நாடுகளுக்கு பன்றிக் காய்ச்சல் இன்னும் பெரிய சவாலாக விளங்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.
இக்கொள்ளை நோய் குறித்த ஆழமான புரிதலும், அரசும் குடிமக்களும் சேர்ந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுமே இதன் தாக்கத்தை மட்டுப்படுத்தும் என்பதை நாம் அடிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
1918-ம் ஆண்டு விஷக்காய்ச்சல் முதன்முதலாக கொள்ளை நோயாக உருவெடுத்தபோது, அதற்குக் காரணமான H1N1 இன்ஃபுளுயன்சா வைரஸôல் பன்றிகளும் பெருவாரியாகப் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு மற்ற விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே இருமல், சளி, தொண்டை வலி, தலைவலி, உடல்வலி மற்றும் காய்ச்சல் ஆகிய நோய்க்குறிகள் காணப்படும். இவ்வகை பன்றிக் காய்ச்சல், ‘மூச்சுத் திணறலோடு கூடிய விஷக்காய்ச்சல்’ எனப் பரவலாக அறியப்பட்டிருந்தாலும், முந்தைய வகைகளிலிருந்து சில அடிப்படையான அம்சங்களில் மாறுபடுகிறது. காய்ச்சல் ஒரு நோய்க்குறியாக பலரிடம் காணப்படுவதில்லை.
அதேவேளை, பேதி ஒரு முக்கிய நோய்க் குறியாகப் பலரிடம் காணப்பட்டுள்ளது. இருந்த போதிலும், இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளானவர்களில் பெரும்பாலோர், சாதாரண விஷக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களைப் போன்றே இரண்டு அல்லது மூன்று நாள்களில் குணமடைந்து விடுகின்றனர். ஆனால், குறிப்பிட்ட ஒருசிலர், சில மணித்துளிகளிலிருந்து சில நாள்களுக்குள் நோயின் தீவிரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
நோய் தீவிரமடையும்போது, சுவாச உறுப்புகளுக்குள் நீர்கோர்த்துக் கொள்வதால், மூச்சுத்திணறல் உண்டாவதைத் தொடர்ந்து சிறுநீரகம், இதயம், மூளை முதலிய முக்கிய அவயங்கள் செயலிழப்பதால் மரணம் உண்டாகிறது. இத்தகைய தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடியவர் இரண்டு வயதிற்குட்பட்ட சிறார்களாகவோ அல்லது அறுபது வயதைக் கடந்த முதியவர்களாகவோ இருக்கின்றனர்.
இது மட்டுமன்றி ஆஸ்த்மா முதலான சுவாச மண்டல நோய்கள், ஹெச்ஐவி மற்றும் நீரிழிவு நோய் முதலான நோய் எதிர்ப்பைக் குறைக்கும் நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும், உடல் பருமன் கொண்டவர்களும், கருவுற்றிருக்கும் பெண்களும் பன்றிக் காய்ச்சலின் தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாக சாத்தியமுள்ளவர்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோயைப் பரவாமல் தடுக்கவும் அதன் தாக்கத்தைத் தணிக்கவும் நோய் குறித்த நடைமுறை ரீதியிலான புரிதலும், ஒருங்கிணைந்த அணுகுமுறையும் அவசியம்.
அமெரிக்க அனுபவத்தையும் உலக சுகாதார மைய அறிக்கைகளையும் அலசிப் பார்க்கும்போது பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் ஒருசில நாள்களிலோ அல்லது ஓரிரு வாரங்களிலோ தீர்ந்துவிடக்கூடிய பிரச்னையில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்நோய் தட்பவெப்ப சூழலுக்கேற்ப அலை அலையாக ஓரிரு ஆண்டுகளாகத் தொடர்ந்து தாக்க வாய்ப்பிருக்கிறது என்பதை அமெரிக்க அனுபவம் சுட்டிக்காட்டுகிறது. நியூயார்க் மாநகரத்தில் இரண்டாம் அலை பன்றிக் காய்ச்சல் தொடங்கியிருப்பதாக மாநகர அதிகாரிகள் கருதுகின்றனர்.
தனி மனிதர்கள் மற்றும் குடும்பங்களைப் பொருத்தவரை, வெறுமனே பீதியடைவதும் வதந்திகளைப் பரப்புவதும், அன்றாடப் பணிகளைத் தவிர்த்துக்கொள்ள விளைவதும் நடைமுறை ரீதியான பலன் எதனையும் தரப்போவதில்லை.
தனிமனிதர்களும் குடும்பங்களும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். நோயின் இயல்பையும், அதன் தாக்கத்தின் தீவிரத்தையும் மக்கள் அறிவுபூர்வமாக விளங்கிக் கொள்ள முன்வருவதோடு, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கைக்கொள்ளவும் முன்வர வேண்டும்.
கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுவது நோயின் தாக்கத்தைப் பெருமளவு தணிக்க உதவும். வீடுகளைக் காற்றோட்டமும் வெளிச்சமும் புகக்கூடிய விதத்தில் வைத்துக் கொள்வது; சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வது; ஆரோக்கியமான உணவை உட்கொள்வது; நிறைய நீர் பருகுவது; காய்ச்சல் மற்றும் சளி ஏற்பட்டால் சளியைத் துடைக்கும் கைக்குட்டைகள் போன்றவற்றைத் தனியாக, கவனமாக அப்புறப்படுத்துவது; மூன்றடுக்குப் பாதுகாப்பு முகமூடியை நோயுற்றவரும், தேவைப்பட்டால் வீட்டிலுள்ள மற்றவர்களும் அணிந்து கொள்வது; கைகளை சோப் அல்லது ஆல்கஹால் கலந்த கலவையால் அடிக்கடி கழுவிக் கொள்வது; நோய்க்குறி உள்ளவர்களிடமிருந்து முடிந்தவரை விலகியிருந்து அவருக்குப் பணிவிடை செய்வது.
நோய்க்குறி உள்ளவர்கள் பன்றிக் காய்ச்சல் வந்தவருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தாலோ அல்லது பன்றிக் காய்ச்சல் உள்ள பகுதிக்குச் சென்று வந்திருந்தாலோ அல்லது நோயின் தீவிரத்தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ள குறிப்பிட்ட வயது, நோய் அல்லது உடலியல்பு இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டவராக இருந்தாலோ கட்டாயமாக H1N1 வைரஸ் இருக்கிறதா என மருத்துவரின் ஆலோசனையோடு பரிசோதனை செய்து கொண்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
“மக்கள் அதிகமாக கூடக்கூடிய மருத்துவமனை, பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் பணிபுரிவோர் நிறுவனங்களில் பணியாற்றுவோரில் யாருக்கேனும் நோய்க்குறிகள் இருந்தால் அவர்களும் பாதுகாப்பு முகமூடி அணிந்து கொள்ள வேண்டும்.
மற்றபடி வீதிகளில் வருவோர் போவோர் எல்லாம் முகமூடி அணிந்து கொள்வது பொதுவான அச்சத்தையும், குழப்பத்தையும் உண்டாக்குவதைத் தவிர வேறெந்தப் பலனையும் தராது”.
மற்றொன்று, பள்ளிக்கூடங்கள். பள்ளிக்கூடங்களை மூடுவது எந்தப் பிரச்னைக்கும் தீர்வு ஆகாது. அதுமட்டுமன்றி, காலவரையின்றி பள்ளிக்கூடங்களை மூடுவதும் நடைமுறை சாத்தியமில்லாதது. ஒருசில பாதுகாப்பு முன்னேற்பாடுகளோடு தடையேதுமின்றி பள்ளிக்கூடங்களை நடத்தலாம். நோய்க்குறி உள்ளவர்கள் நோய் தீரும் வரை பள்ளிக்கூடத்துக்கு வரக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
பள்ளியில் யாருக்கேனும் நோய்க்குறிகள் தோன்றினால் அவர்களுக்குப் பாதுகாப்பு முகமூடி அணிவித்து, தனித்த அறையில் தங்கச் செய்து வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும். இதுகுறித்த தெளிவான வழிகாட்டுதலை அரசாங்கம் வழங்க வேண்டும்.
பன்றிக் காய்ச்சல் நோயைக் கண்டறிவதில் தாமதம் காட்டிய மருத்துவர் மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுப்போம் என்ற ரீதியிலான குறுகிய மேலோட்டமான அணுகுமுறை நோயின் தன்மைகளையும், பிரச்னையின் பரிமாணத்தையும் மத்திய அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை முதல்வர் தலைமையிலான பன்றிக் காய்ச்சல் குறித்த ஆய்வுக் கூட்டம் நல்ல தொடக்கம் என்பதில் சந்தேகமில்லை.
நோய் இருப்பதாகச் சந்தேகப்படுபவர்களை பரிசீலனை செய்வதற்கான மருத்துவ மையங்களையும், தரமான பரிசோதனைக் கூடங்களையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்போடு பரவலாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனெனில் ஓரிரு மையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினால், அதுவே நோய் பரவுவதற்கு வழிவகை செய்ததாகிவிடும்.
பன்றிக் காய்ச்சல் நோயில் பாதிக்கப்பட்டவர்கள் என பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டவர்களை தக்க முன்னேற்பாடுகளுடன் வீடுகளிலேயே சிகிச்சை செய்யவும், தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்கள் ஆகியோரை சிறப்பு மையங்களில் சேர்த்து சிகிச்சை செய்யத் தேவையான வழிகாட்டுதலையும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தகுந்த ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.
நோயின் தீவிரத்தை மட்டுப்படுத்த உதவுவதாகக் கருதப்படும் டாமிஃபுளூ வைரஸ் கொல்லி மருந்தை மாவட்ட அளவில் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்வதோடு, அதைப் பயன்படுத்துவதற்கான சரியான வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும்.
பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் வைரஸôன புதியவகை H1N1 வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் முயற்சிக்கு இந்திய அரசாங்கம் தீவிரமான பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதும் முக்கியமானதாகும்.
கடைசியாக, எல்லா தரப்பினருக்கும் இத்தகைய கொள்ளை நோய்கள் எடுத்துவைக்கும் தெளிவான செய்தி ஒன்று உண்டு. ஒருவர் கழுத்தில் ஒருவர் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் போட்டி உலகில், பணம் மனிதனை வழிநடத்திச் செல்லும் பரபரப்பான வாழ்வில், வாசலில் மரணம் வந்து தட்டக்கூடும் என்ற உணர்வு, நின்று நிதானமாக தன் வாழ்வின் நோக்கையும், போக்கையும் மறு பரிசீலனை செய்ய மனிதனுக்கு தரப்பட்ட ஒரு வாய்ப்பு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது
-------------------------------------------------------------------------------------------------------------------
(தானகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்;ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீNழு விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்;, அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்;. இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்;. எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;. ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.
5:3
THE QURAN