Saturday, September 4, 2010

மருத்துவமனைக்கு மறுமலர்ச்சி

"நான் நோயுற்றால், அதைக் குணப்படுத்துபவன் அல்லாஹ்தான்" (26:80) என்பது, இஸ்லாத்தின் அருள்மறையாம் குர்ஆன்,                     மனிதனை இறை வல்லமை மீது நம்பிக்கை கொள்ளச் செய்து அறிவுறுத்தும் அருள் வாக்காகும்.

"ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. சரியான மருந்தால் சிகிச்சை செய்யும்போது, அல்லாஹ் நாடினால், அந்த நோய் குணமாகும்" (சஹீஹ் முஸ்லிம்) என்பது நபிமொழியாகும். இதுவும் இஸ்லாத்தின் இனிய போதனைதான்.கி.பி.1983 இல் பொதுநல நோக்குடன் தொடங்கப்பெற்றது நமதூரின் 'ஷிஃபா' மருத்துவமனை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசு மருத்துவமனையில் இல்லாத வசதிகளுடன் உருவாயிற்று இந்த 'ஷிஃபா' மருத்துவமனை என்பதும் நாமறிந்ததே. சிறந்த மகப்பேறு பெண் மருத்துவர்கள் இங்கு முழு நேரச் சேவையில் ஈடுபட்டிருந்ததால், சுகப் பிரசவங்கள் பல நிகழ்ந்துள்ளன. (இக்கட்டுரையாளரின் மூன்று பிள்ளைகள் இம்மருத்துவ மனையில்தான் பிறந்துள்ளனர்.) பல அவசர சிகிச்சைகளும் பெற்றுச் சுகமடைந்தவர்களும் நம்மூரில் ஏராளம். சிறப்பு மருத்துவர்கள் பலர் இங்கு வருகை தந்து சிகிச்சைகளும் தந்துள்ளனர். இவ்வாறு, அரசு சாராத பொது மருத்துவமனையாகவும், சேவை மனப்பான்மையிலும் இயங்கிவந்த 'ஷிஃபா'வுக்குச் சில ஆண்டுகளாகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்ற கசப்பான உண்மையை உணரத்தான் வேண்டும்.

அதற்கான காரணங்கள் யாவை என்று ஆராய்வது, இக்கட்டுரையின் நோக்கமன்று. 'நடந்தது நடந்ததாக இருக்கட்டும்; இனி நடக்க வேண்டியது நல்லதாக இருக்கட்டும்' என்ற எண்ணத்தில், நமதூரின் நலனில் அக்கறை கொண்ட சிலர் இம்மருத்துவமனைக்குப் புத்துயிர் அளிக்க முன்வந்துள்ளனர் என்பது ஓர் ஆறுதலான செய்தியாகும். எமது நட்பிற்குரிய அந்த நல்லுள்ளங்களின் வேண்டுகோளின்படி, நாம் ஒரு First Hand Report எடுப்பதற்காக 'ஷிஃபா'வுக்குச் சென்றோம்.

எமக்கு 'ஷிஃபா'வின் எல்லாப் பகுதிகளும் சுற்றிக் காட்டப்பட்டன. 'மாஷா அல்லாஹ்!' இதே Infrastructure வேறு ஊர்களில் இருந்தால், இன்றைக்கு இதன் நிலையே வேறாக இருந்திருக்கும். எல்லா வசதிகளும் இருந்தும், அதிரையின் மருத்துவச் சேவையில் இந்த 'ஷிஃபா'வுக்கு உரிய இடமில்லாமல் போனதற்கு என்ன காரணம்? யார் யார் காரணம்? கேள்விகளால் கவலைதான் கூடிற்று! இது ஒரு Full-fledged Hospital என்ற தகுதியில், இதன் மறுமலர்ச்சிக்கான தேவைகள் யாவை என்று ஆராய முயன்றோம்.

அப்போதுதான், இந்த மருத்துவமனைக்காக அண்மையில் பணியமர்வு பெற்ற மகப்பேறு மருத்துவர்டாக்டர் கோமதி MBBS, DGO அவர்கள் 'ஷிஃபா'வுக்குள் இன்முகத்துடன் நுழைந்தார்கள். அந்நேரத்தில் அவர்களுக்கு நோயாளி ஒருவரும் இல்லாததால், நமக்கு அவர்களுடன் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிட்டியது.

டாக்டர் கோமதி அவர்கள் நமதூருக்குப் புதியவர் அல்லர். 'ஷிஃபா'வில் சில ஆண்டுகள் பணியாற்றியதன் பின்னர், சஊதி அரேபியா, யமன் போன்ற அரபு நாடுகளில் சில ஆண்டுகள் மருத்துவச் சேவை செய்துவிட்டுத் திரும்பி வந்துள்ளார்கள். 'ஷிஃபா'வின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களின் அன்பழைப்பை ஏற்று, இந்த மகப்பேறு மருத்துவர் நமதூருக்கு வந்துள்ளார்கள். டாக்டர் கோமதி அவர்களைத் தற்போதைய 'ஷிஃபா'வின் இயக்குநர்கள் மிகுந்த பொருள் செலவில் வரவழைத்து, இங்குப் பணியில் அமர்த்தியுள்ளார்கள். டாக்டர் அவர்களின் பேச்சிலிருந்து, இந்த மருத்துவமனையை முன்னேற்றம் செய்யவேண்டும் என்ற அவரின் நோக்கம் தெரிந்தது. தலைமை மருத்துவர் என்ற முறையில், டாக்டர் அவர்கள் சில பரிந்துரைகளை முன்வைத்தார்கள். அவை முறையாக இதன் இயக்குநர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுவிட்டன. டாக்டரின் அயல்நாட்டு அனுபவங்களின் தாக்கம், அவர்களின் பரிந்துரைகளில் வெளிப்பட்டது.

மொத்தத்தில், 'ஷிஃபா'வுக்கு ஒரு Face-lifting அவசரத் தேவை. இதனை நாம் மின்னஞ்சல் மூலம் இதன் நலம் விரும்பிகளுக்குத் தெரிவித்துவிட்டோம். அவர்களும், இவை இன்றியமையாதவை என்றே உணர்கின்றனர். அதன் அறிகுறி, இப்போதே தென்படுகின்றது. அதாவது, எம் பரிந்துரைகளுள் சில இப்போதே செயலுருப் பெறத் தொடங்கியுள்ளன. மருத்துவ உபகரணங்கள் பழுது பார்க்கப்பட்டுப் பயன்பாட்டு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த MBBS பெண் மருத்துவர் (GP) ஒருவரும் அண்மையில் பணியமர்வு பெற்றுள்ளார். உள்ளூர் டாக்டர்களுள், டாக்டர் ஹகீம் MBBS, DA அவர்கள் தொடக்க காலம் முதல் 'ஷிஃபா'வுடன் ஏற்படுத்திக்கொண்ட சேவைத் தொடர்பு பாராட்டத் தக்கதாகும்.

மகப்பேறு சிறப்பு மருத்துவருடன் சில பரிந்துரைகளில் நாமும் ஒத்த கருத்தில் உடன்பட்டோம். அவற்றுள் ஒன்று, நன்கு பயிற்சி பெற்ற 'நர்ஸ்'கள் மிகத் தேவை என்பதாகும். சரியான பணியுடை (Uniform) அணிந்து, முறையாக அவர்கள் சேவை செய்யும்போது, நோயாளிகளுக்கு ஓர் ஆறுதல் உண்டாகின்றது.

குழந்தை நல மருத்துவர் ஒருவரின் தேவை பற்றியும் 'ஷிஃபா'வின் இயக்குநர்களிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கு, உடனடியாக, உள்ளூரில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரை on call basis பயன்படுத்திக்கொள்ளவும் ஏற்பாடு நடைபெறுகின்றது. தற்போது வருகை தரும் பல் மற்றும் 'ஹோமியோபதி' மருத்துவர்களின் சேவையும் மிகப் பயனுள்ளதாக இருக்கின்றது.

மருத்துமனையின் உள்ளும் புறமும் பல சீர்திருத்தங்களால் மிளிரப் போகின்றன, மிக விரைவில். நாம் வழங்கிய பரிந்துரைகளுள், கீழ்க்கண்டவை Long term projects என்ற அடிப்படையில், 'ஷிஃபா'வின் இயக்குநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன:

      'ஷிஃபா'வின் சுற்றுச் சுவருக்குள், இங்கே பணி புரியும் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கான வீட்டு வசதி செய்து கொடுத்தல்.

•       புதிய மருத்துவப் பிரிவுகளுக்கான கட்டட வசதி செய்தல்.

•      'ஷிஃபா'வின் செலவினங்களை ஈடு செய்யப் போதுமான வருமானம் தரும் துறைகளைத் தொடங்குதல்.

• ஏழைகள் மற்றும் வசதியற்றவர்களின் சிகிச்சைகளுக்காகப் பொறுப்பேற்கும் நல்லுள்ளம் கொண்டவர்களை நியமித்தல்.

•     வருகையாளர்களின் வசதிக்காகப் பள்ளிவாசல் கட்டுவது.

தற்போதைய நிர்வாகிகளாகப் பட்டதாரிகள் இருவர் பணி புரிகின்றனர் என்ற செய்தி, கடந்த கால illiterate நிர்வாகிகளால் நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஓர் ஆறுதலான செய்தியாகும்.

இந்த மருத்துவமனை தொடங்க இருந்த கால கட்டத்தில், நமதூரின் தலைவர்களுள் ஒருவர் தொலைநோக்கோடு ஒரு பரிந்துரை செய்தாராம். அதாவது, இந்த 'ஷிஃபா' மருத்துவமனையைத் தஞ்சாவூரில் கட்டினால் நல்லதல்லவா? நம்மூர் மக்கள் வந்து தங்கித் தமக்குப் பிடித்த மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெறுவார்களே. அதனால் பல டாக்டர்களின் தொடர்பு ஏற்படுமே என்பதெல்லாம் அப்பெரியவரின் ஆலோசனையாம். ஆனால், நம்மூர் மக்கள் வெளியூர்களுக்குப் போய் சிரமங்களை ஏற்கக் கூடாது; செலவினங்களைக் குறைக்கவேண்டும் என்றெல்லாம் கருத்துக்கொண்டு, எதிர்நீச்சல் போட்டு, மர்ஹூம் AMS முதலியவர்களால் இந்த மருத்துவமனை தொடங்கப் பெற்றதாம்.

அத்தகையோரின் நல்ல நோக்கங்கள் நிறைவேற நாமெல்லாம் பங்களிப்புச் செய்ய வேண்டாமா? எவ்வாறு பங்களிப்புச் செய்யலாம் என்றும், 'ஷிஃபா'வின் செலவினங்களை ஈடு செய்வதற்கு, இதன் வருமானத்தைப் பெருக்க என்னென்ன வழிகளைப் பின்பற்றலாம் என்றும் கருத்திடுங்களேன், பார்ப்போம்!


ஆக்கம்: அதிரை அஹ்மது

3 comments:

பாத்திமா ஜொஹ்ரா said...

ஹலோ அதிரை நிருபர் குழு உங்கள் வேண்டுகோளை ஏற்று ஷிபா ஆஸ்பத்திரி செய்தி வெளியிட்டுள்ளேன்.

அதிரைநிருபர் குழு said...

எங்கள் கேரிக்கையை ஏற்று இக்கட்டுரையை உங்கள் வலைப்பூவில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

நட்புடன் ஜமால் said...

அல்ஹம்துலில்லாஹ்

மிக்க சந்தோஷம்

இயன்ற அளவு உள்ளூர்வாசிகளுக்கு கொடுக்க முடிந்த வேலைகளை கொடுக்கலாம்.