Friday, October 21, 2011

வெட்கக்கேடானது...


 "நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாள்வது வெட்கக்கேடானது" என்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டே கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்தார்.



ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "முஸ்லீம்களை குண்டுவெடிப்புகளுக்குக் காரணகர்த்தாவாக சித்தரிக்க்கும் ஊடகங்களும் காவல்துறையும் அப்போக்கை கைவிட வேண்டும்" என்று கூறினார். தடய அறிவியல் உள்ளிட்ட விஞ்ஞான முறைகளில் நமது நாட்டின் காவல்துறைக்குத் திறமை இல்லாததாலேயே தீவிரவாத வழக்குகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக கூறினார். 




குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே மின்னஞ்சல்கள் அல்லது அலைபேசிகளில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் மூலம் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் குறித்து முடிவுக்கு வருவதை வண்மையாக கண்டித்தார். "உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் கையில் கிடைக்கும் முஸ்லீம்களின் மீது காவல்துறை பொய் வழக்கு போடுகிறது" என்றார். 



"அது போல் எவ்வித ஆதாரமும் இல்லாமல் பரபரப்புக்காக பொய் செய்தி வெளியிடும் ஊடகங்கள் கலந்துரையாடல்கள் போன்ற ஜனநாயக வழிமுறைகளின் மூலமாகவோ அல்லது அபாராதம் மூலமாகவோ, அரசின் விளம்பரங்களைக் கொடுக்காமல் தடுப்பதன் மூலமாகவோ தேவைப்பட்டால் ஊடக உரிமங்களை ரத்து செய்வதன் மூலமாகவோ திருத்தப்பட வேண்டும்" என்றும் மார்க்கண்டே கட்ஜ் குறிப்பிட்டார். 



கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் பெங்களூரு, வாரணாசி, புனே, மும்பை மற்றும் டெல்லி என பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளின் குற்றவாளிகள் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, October 19, 2011

கள்ளக் காதலும்,பெருகும் கொலைகளும்...


கடந்த 2006ம் ஆண்டு ஜூலை மாதம், கேரளாவின் சுற்றுலாத்தலமான மூணாறு, குந்தலா அணைக்கட்டின் அருகே, கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம். யாரென அனைவரும் அதிர்ந்து நிற்க, அருகில், புதுப்பெண்ணான மனைவி வித்யாலட்சுமி. தேனிலவு வந்த இடத்தில், யாரோ அனந்தகிருஷ்ணனை கொன்றுவிட்டு, நகைகளை பறித்துச் சென்றதாக அவர் கூற, போலீஸ் விசாரணையும், மொபைல் போன் குறுந்தகவல்களும் உண்மையை வெளிக்கொண்டுவந்தன.

அடுத்தடுத்து அதிர்ச்சித் திருப்பங்கள்... திருமணமான ஏழே நாளில், அனந்தகிருஷ்ணன் கட்டிய மஞ்சள் கயிற்றின் ஈரம் கூட காயாத நிலையில், கள்ளக்காதலன் ஆனந்துடன் சேர்ந்து, வித்யாவே கணவனை கொன்றது அம்பலமானது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை, அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறிக்கொண்டிருந்த இதுபோன்ற விஷயங்கள், தற்போது, தினசரி செய்தியாக மாறிவிட்டன. கணவனுக்கு தெரியாமல் மனைவி, மனைவிக்கு தெரியாமல் கணவன், மற்றொருவருடன் உறவு வைத்திருப்பது, சாதாரணமாகிவிட்டது.

334 கொலைகள் : மேற்கத்திய மோகமும், தகவல் தொழில்நுட்பக் கலாசாரமும் தமிழகத்தில் ஊடுருவத் துவங்கியபோதே, நாகரிகம் என்பதற்கான அடிப்படை விதிகளும் மாறிவிட்டன. இந்த வரிசையில், கள்ளக்காதலும் புதிய கலாசாரமாகிவிட்டது. ஆண், பெண் நட்பில், உடல் ரீதியான ஈர்ப்பு, பிரதான இடம் பிடித்துவிட்டது.
வீட்டில் கணவன், மனைவியின் தேவைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பூர்த்தியாகாதபோது புதிய துணையைத் தேடுகின்றனர். இந்த விவகாரம் பழைய துணைக்கு தெரியாதவரை பிரச்னை ஏற்படுவதில்லை. தெரிந்துவிட்டால், ஆண், பெண் யாராக இருந்தாலும், கண்டிப்பவரை, "காலி செய்யும்' அளவிற்கு துணிந்து விடுகின்றனர். கடந்தாண்டு மட்டும், 334 கொலைகள் நடந்துள்ளன.

கடந்த 2008, 2009, 2010 ஆகிய மூன்று ஆண்டுகளில் 143 ஆண்களும், 120 பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆண்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், அவர்களது மனைவிமார்கள் பெரும்பாலும் சம்பந்தப்பட்டுள்ளனர்.
காதலில் பல வகைகள் இருப்பதைப் போல், கள்ளக்காதலிலும் மூன்று, நான்கு பிரதான வகைகள் உள்ளன.

கவனத்தில் வராத மனைவியர் : முதல் வகைக்கு பலியாகுபவர்கள், பணமே பிரதானமாகக் கொண்ட ஆண்கள். இவர்களுக்கு, மனைவியிடம் காதலைக் காட்டுவதற்கு கூட நேரம் இருப்பதில்லை. இத்தகைய கணவன்மார்களின் மனைவிகளுக்கு, பக்கத்து வீட்டுக்காரனின், "ஹலோ! சவுக்கியமா?' என்ற குசல விசாரிப்பு கூட, மிகப் பெரிய குதூகலத்தைக் கொடுத்துவிடுகிறது. குசல விசாரிப்பு, "குஜால்' வரை சென்றுவிடுகிறது.

இத்தகைய பெண்களுக்கு, தன்னோடு பழகும் ஆணின் அழகோ, அறிவோ ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை. கணவனை விட சுமாரான அழகு, அந்தஸ்து என இருந்தாலும், தன் மீது அக்கறை காட்டுகிறான் என்ற எண்ணமே, அவர்கள் பக்கம் இவர்களை விழ வைத்துவிடுகிறது. இது கணவன்மார்களுக்கு தெரியும் போது, முதலில் கண்டிப்பு, அடுத்த கட்டம், கொலை. இதில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றவர்கள் ஏராளம் என்கிறது போலீஸ் தரப்பு.

"மாஜி' காதல் : அடுத்த வகை, திருமணமான பின், கணவனது நடவடிக்கைகள் பிடிக்காமல், முன்னாள் காதலனுடன் கள்ளக்காதல் கொள்வது. பெற்றோர் விருப்பம், நிர்பந்தத்திற்காக காதலித்தவனை விட்டு வேறு ஒருவரை கரம் பிடிக்கும் பெண்கள், சில நேரங்களில் முன்னாள் காதலனை பார்க்கும் போது, மீண்டும் உள்ளிருக்கும் காதல் துளிர்க்கிறது. காதலனோ, பழைய காதலியின் பலவீனத்தை பயன்படுத்திக் கொள்ள, கள்ளத்தனமாக காதல் வளர்கிறது. இதில், பெண்கள் பெரும்பாலும் பாதுகாப்பாக உணர்வதாக, மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது போன்ற சம்பவங்களிலும், சில நேரம், கட்டுப்படுத்துபவர் உயிர், "கட்டுப்பட்டுப்' போகிறது. இதற்கு, மூணாறு ஹனிமூன் கொலை ஒரு எடுத்துக்காட்டு. இது தவிர, சென்னையில், பள்ளி ஆசிரியை ஒருவர் முன்னாள் காதலனால், கொலை செய்யப்பட்ட சம்பவமும், கள்ளக்காதல் கொலை பட்டியலை உயர்த்தியது.

ஐ.டி., காதல் : ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள், பெரும்பாலும், வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்றனர். கணவன், மனைவியை தவிர மற்ற உறவினர்களிடம் இருந்து பிரிந்திருக்கும் நிலையில், வேலை பளுவும் கூடும் போது, குடும்ப வாழ்க்கை பின்தங்குகிறது. இந்த நிறுவனங்களில் ஆண்கள், பெண்கள் சகஜமாக பழகுவதால், பல தொடர்புகள் ஏற்படுகின்றன. மேலும், ஐ.டி., நிறுவனங்களை தவிர, பல வீடுகளில் கணினி வசதி உள்ளதால், "சாட்டிங்' கலாசாரம் மூலமும் கள்ளக்காதல் விவகாரங்கள் பெருகியுள்ளன. பல நாட்கள் சாட்டிங் மூலம் பழகும் சிலர், நேரில் பார்க்கும் போது பிடித்துப் போனால், காதலை வளர்த்துக் கொள்கின்றனர். இதில், சிலர் "வீடியோ சாட்டிங்' மூலம், பாலியல் செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

ஜாலிக்காக கள்ளக்காதல் : இதைத் தவிர எதைப் பற்றியும் கவலைப்படாமல், விளையாட்டுக்காக அல்லது செக்ஸ் தேவைக்காக மட்டும் சிலருடன் உறவு வைத்திருப்பதை, "பேஷனாக' கருதுபவர்களும் உண்டு. திருமணமான ஆணும், பெண்ணும் தங்களுக்கு தெரிந்தவர்களுடன் இந்த வகையில் உறவு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

"டிவி' தொடர்களும் ஒரு காரணம் : கள்ளக்காதல் சம்பவங்கள் தொடர்பாக, மனநல நிபுணர் நம்பி கூறியதாவது:
கிராமங்களில் அரசல் புரசலான விஷயங்கள், நகர்ப்புறத்தின் வளர்ச்சியால் தற்போது அதிகரித்துள்ளது. நகரமயமாதல், தொழில் மயமாதல் போன்ற காரணங்களால், தொடர்புக்கான வசதிகள் அதிகரித்துள்ளன. நகர்ப்புறத்தில், அடுத்த வீட்டில் யார் இருக்கின்றனர். அந்த வீட்டிற்கு யார் வந்து செல்கின்றனர் என்பதே பலருக்கு தெரியாது. இதனால், ஆணோ, பெண்ணோ தவறு செய்வதற்கு வாய்ப்புகள் அதிகரித்து விட்டன.

தாம்பத்ய வாழ்க்கையில் ஏமாற்றம் அதிகரிக்கும் போதும், கணவன், மனைவிக்கிடையில் ஒற்றுமையின்மை அதிகரிக்கும் போதும், பிறரது தொடர்புக்கான வாய்ப்புகள் அதிகரித்துவிடுகிறது. ஏமாற்றம், விரக்தியில், தேடுதல் உணர்வும் அதிகரிக்கிறது. இதை, ஊடகங்களும் அதிகளவில் ஊக்குவிக்கின்றன. "டிவி' சீரியல்கள் இது போன்ற விஷயங்களை நியாயப்படுத்துவதுடன், இப்படியெல்லாம் செய்யலாம் என்று தூண்டுகின்றன. கணவன்மார்களிடம் இருக்கும் குடிப்பழக்கம், பெண்களிடம் இருக்கும் அறியாமை ஆகியவை, இருதரப்பையும் அரவணைப்பை தேடச் செய்கிறது.

சிங்கப்பூரில், தற்கொலை சம்பவங்கள் அதிகரித்த போது, தற்கொலை செய்திகள் வெளியிடக் கூடாது என்று ஊடகங்களுக்கு மூன்று மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தடைக்குப் பின், தற்கொலை சம்பவங்களே குறைந்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டாக்டர்கள் சிலரும், இது போன்ற கள்ளத்தொடர்பு விஷயங்களை தவறானதில்லை என்று நியாயப்படுத்துகின்றனர். இதை சட்ட விரோதமான உறவு என்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இவ்வாறு நம்பி கூறினார்.

ஒழுக்கம் தான் ஒரே வழி? : இந்த சம்பவங்களில் நடவடிக்கை குறித்து, பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: குடும்ப நல மையங்களில் முதலில், இது தவறு என்று கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. மீறி தவறு செய்யும் போதும், புகார் வரும் போதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த விஷயத்தில், தனி மனித ஒழுக்கம் என்பது முக்கியம். அனைத்து மதங்களிலும், இந்த விஷயம் தவறு என்பது உணர்த்தப்படுகிறது. அதற்கான தண்டனையும் அளிக்கப்படுகிறது. ஆனாலும், யாரும் அவற்றை மதிப்பதில்லை.

இந்த விஷயங்களுக்கு ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் பெரிதும் உதவுகின்றன. சமூகத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடும் என்று பயப்படுபவர்கள் மட்டுமே, இந்த விஷயத்தில் சற்று தள்ளி நிற்கின்றனர். கலாசார சீரழிவுக்கு, இந்த விஷயம் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் கூறினார்.

மூன்றாண்டுகளில் அதிகளவில் கள்ளக்காதல் கொலை நடந்த நகரங்கள்:

1. தர்மபுரி -38
2.கிருஷ்ணகிரி-27
3.நாகப்பட்டினம்-23
4.வேலூர்-20
5.தேனி-14. இந்த ஐந்து பகுதிகளும் பொருளாதாரம், கல்வியில் பின்தங்கியவை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய சம்பவங்கள்:

* 2006 ஜூன்: தேனிலவுக்காக மூணாறு சென்ற போது, மனைவி வித்யாலட்சுமியின் ஏற்பாட்டின்படி, கணவன் அனந்தகிருஷ்ணன் கொல்லப்பட்டது.

* 2010 ஜூலை: தண்டையார்பேட்டையில், பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்த நடுநிலைப் பள்ளி ஆசிரியை, முன்னாள் காதலனால் கொல்லப்பட்டது.

* 2010 ஜூலை: தன் வயிற்றில் வளர்ந்த கருவை கலைக்கச் செய்ததற்காக, கள்ளக்காதலன் ஜெயக்குமாரின் மகன் ஆதித்யாவை, காதலி பூவரசி கொன்று, சூட்கேசில் வீசியது.

*2011- சார்லஸ் என்பவர், நண்பனின் மனைவியுடன் கொண்டிருந்த கள்ளத் தொடர்பு காரணமாக கொலையுண்டது.

* 2011 பிப்ரவரி- சிந்தாதிரிப்பேட்டையில் சிரஞ்சீவி என்பவர் மனைவி, கணவனின் கள்ளத்தொடர்பை கண்டிப்பதற்காக தீக்குளித்தது.

* 2011 செப்டம்பர்- சூளைமேட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கணவன் மற்றும் குழந்தைகளை விட்டு, காதலனுடன் சென்று, மூன்று மாதம் கழித்து திரும்பி வந்தது. 


தினமலர்


நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து; அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக; மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.


“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.


நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.
 திருக்குர்ஆன் 



Monday, September 26, 2011

'அதிரை அறிஞர்' புலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள் இன்று மரணம்


நம் 'அதிரை அறிஞர்' புலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு இறப்பெய்திவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
நம் சிறார்கள் கல்வி ஞானம் பெற வேண்டும் என்பதில் புலவர் பஷீர் மிகுந்த அக்கறையுடையவர்கள்.

சிறார்களுக்கு எளிதில் இஸ்லாமியப் பாடங்களை விளக்கும் வகையில் புதுமலர்கள் என்ற பெயரில் ஒவ்வொரு வகுப்புக்கும் தக்கவாறு நூல்களை எழுதியுள்ளார்கள்.

அன்னாரின் ஜனாஸா நாளை 27.09.2011 காலை 10  மணிக்கு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சாதிக்பாஷா நகர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்: அதிரை அஹ்மது காக்கா அவர்கள் 
அவர்களின் பேச்சை கேட்க 

Saturday, September 24, 2011

சிந்தனை செய்வீர் ! சிரம் பணிவீர்,ஏக இறைவனுக்கு!!



கேப் கேனவரல் (அமெரிக்கா), செப்.24: அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அனுப்பிய செயற்கைக்கோள் வெள்ளிக்கிழமை அதிகாலை பூமி மீது மோதியது; ஆனால் பூமியின் எந்தப் பகுதியில் இது மோதியது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.




 சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்காக யுஏஆர்எஸ் எனப்படும் செயற்கைக்கோள் நாசா நிறுவனம் 1991-ல் விண்ணுக்கு அனுப்பியது. இது 6 டன் எடையுடையது. 2005-ல் செயற்கைகோள் செயலிழந்ததால், செயற்கைக்கோளுடனான தொடர்பை நாசா துண்டித்தது. இதையடுத்து இந்த செயற்கைகோள், புவிவட்டப் பாதையிலிருந்து கீழே இறக்கப்பட்டு மற்றொரு வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருந்தது.


 இந்த நிலையில் இந்த செயற்கைக்கோள் பூமி மீது மோதும் அபாயம் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த செயற்கைக்கோளின் சில பகுதிகள் பூமி மீது மோதியதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.




 ஆனால் பூமியின் எந்தப் பகுதி மீது செயற்கைக்கோள் மோதியது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இதுதொடர்பான ஆய்வில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். செயற்கைக்கோள் மோதியதால் யாரும் காயமடையவில்லை என நாசாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி தினமணி 


22:65(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம்விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.


3:83அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.




7:54நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.
இறைவனின் இறுதி வேதம் திருக்குர்ஆன் 

Monday, September 5, 2011

"இல்லை இல்லை நான் நாசமாகத்தான் போகிறேன் என்ன பந்தயம்"

ரொம்ப நாளக்கி பின்னாடி சந்திக்கிறதுல மகிழ்ச்சி,எல்லாருக்கும் அல்லாஹ்வுடைய சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.
கண்ணியம் வாய்ந்த,அருள் பெற்ற ரமலான் மாதம் நம்மை விட்டு விடை பெற்று விட்டது.நம் அனைவர் பாவங்களையும் ஏக இறைவன் அல்லாஹ் மன்னித்து அருள்வானாக ஆமீன்.

ரொம்ப நாளக்கி பின்னாடி சந்திக்கிறதுல - ரொம்பவே நிறைய மாற்றங்கள்.

நாத்திகம் பேசிக் கொண்டு,நாட்களைக் கடத்திக் கொண்டு நரக விளிம்பில் இருக்கும் நாத்திக மாக்களுக்கு - இஸ்லாம் விடும் சவால்களை நம் சகோதரர்கள் அழகான முறையில் எடுத்து வைக்கிறீர்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

தங்கள் மூளையை ஒழுங்காக உபயோகித்து,சிந்தித்து,ஆய்ந்து,உணர்ந்து ஏக இறைவன் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கே நன்மையாகும்,"இல்லை இல்லை நான் நாசமாகத்தான் போகிறேன் என்ன பந்தயம்" என் அவர்கள் (நாத்திகவாந்திகள்)இருப்பார்களேயானால் நஷ்டம் அவர்களுக்குத்தான் என்பதை உணர்ந்து கொள்ளட்டும்.

 அந்த நாத்திகர்களிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

ஒரு நாத்திகன் ஒரு முஸ்லிமிடம்  சொன்னான்,"இல்லாத கடவுளுக்கு ஏன்
இப்படி நீங்கள் வணங்குகிறீர்கள்,சொர்க்கம்,நரகம் உண்டென நம்புகிறீர்கள்?இப்படி இறைவன்,இறைவன் என்று அவனுக்கு பயப்படுகிறீர்கள்?என்று.

அதற்கு பொறுமையாக அந்த முஸ்லிம் சொன்னார் ,"நீ சொல்வது போல், உன் கூற்றுப் படி இறைவன் இல்லையென்றாலும்  எனக்கு நஷ்டம் ஏற்படப்போவதில்லை,ஆனால் அப்படி ஒரு இறைவன் இருந்தாலும் எனக்கு நஷ்டம் ஏற்படப்போவதில்லை,காரணம் நான் அவனை - அந்த ஒருவனை ஏற்றுக்கொண்டுள்ளேன்,தொழுகிறேன்,வணங்குகிறேன்.எனக்கு எப்படி இருந்தாலும் கவலையோ,துக்கமோ இல்லை.எனவே எனக்கு அவன் சொர்க்கம் தருவான்,ஆனால் நீயோ,அந்த ஏகனை மறுக்கிறாய்?உன் நிலை என்ன என்பதை சிந்தித்துப் பார்,உனக்குத்தான் நஷ்டம்"என்றார்.


 அந்த முஸ்லிமின்  மறுமொழி கேட்டு வாயடைத்துப் போனான,
அந்த நாத்திகன். 


நீங்களும் சிந்தியுங்கள் இன்றைய 
 நாத்திகர்களே,நஷ்டம் யாருக்கென்று!



Tuesday, August 30, 2011

பெருநாள் வாழ்த்துக்கள்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சகோதர சகோதரிகள் அனைவருக்கும்

என்னுடைய இதயம் கனிந்த நெஞ்சார்ந்த 

பெருநாள் வாழ்த்துக்கள்...



Monday, August 15, 2011

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்!


செல்வத்தின் மீதுள்ள ஆசை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது!
“பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு” (அல்-குர்ஆன் 3:14)
கப்ருகளை சந்திக்கும் வரை செல்வத்தை பெருக்கும் ஆசையில் இருக்கும் மனிதன்!
“செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அவ்வாறல்ல – மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்” (அல்-குர்ஆன் 102:1-8)
பொருட் செல்வமும், மக்கள் செல்வமும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்!
“செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன” (அல்-குர்ஆன் 18:46)
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்!
அறிந்து கொள்ளுங்கள்: ‘நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும், பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை” (அல்-குர்ஆன் 57:20)
இவ்வுலகில் செல்வங்கள் தரப்பட்டிருப்பது ஒரு சோதனைக்காதத் தான்!
“நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு’ என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 8:28)
அல்லாஹ் சிலரை சிலரைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கிறான்!
“அல்லாஹ் உங்களில் சிலரை சிலரைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கிறான்; இவ்வாறு மேன்மையாக்கப்பட்டவர்கள்; தங்களுடைய செல்வத்தை தங்கள் வலக்கரங்களுக்கு உட்பட்டு(த் தம் ஆதிக்கத்தில்) இருப்பவர்களிடம் கொடுத்து, அவர்களும் இவர்கள் செல்வத்தில் சமமான உரிமை உள்ளவர்கள் என்று ஆக்கிவிடுவதில்லை; (அவ்வாறிருக்க) அல்லாஹ்வின் அருட்கொடையையா? இவர்கள் மறுக்கின்றனர்” (அல்-குர்ஆன் 16:71)
செல்வமும் வறுமையும் அல்லாஹ்வின் நாட்டத்தில் உள்ளவை!
“நிச்சயமாக என்னுடைய இறைவன் தான் நாடியவர்களுக்கு, செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும், (அதை, தான் நாடியவர்களுக்கு சுருக்கியும் விடுகிறான் – எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்’ என்று (நபியே!) நீர் கூறும்” (அல்-குர்ஆன் 34:36)
அல்லாஹ் வழங்கியிருக்கும் செல்வ செழிப்பைக் கொண்டு ஆணவம் கொள்ளாதீர்கள்! அல்லாஹ் காரூனுக்கு வழங்கிய செல்வத்திலிருந்தும், தண்டனையிலிருந்தும் படிப்பினை பெறுங்கள்!
“நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் – நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: ‘நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்’ என்று கூறினார்கள். ‘மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை’ (என்றும் கூறினார்கள்). (அதற்கு அவன்) கூறினான்: ‘எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!’ இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள். அப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்: ‘ஆ! காரூனுக்கு கொடுக்கப்படடதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்’ என்று கூறினார்கள். கல்வி ஞானம் பெற்றவர்களோ; ‘உங்களுக்கென்ன கேடு! ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்’ என்று கூறினார்கள். ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், ‘ஆச்சரியம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் சித்தியடைய மாட்டார்கள்’ என்று கூறினார்கள்” (அல்-குர்ஆன் 28:76-82)
செல்வ செழிப்புள்ளவர்களைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்!
“இன்னும் அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; நிச்சயமாக இவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலகத்திலேயே வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர் போவதையும் அல்லாஹ் விரும்புகிறான்” (அல்-குர்ஆன் 9:85)
நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் செல்வத்தைக் கண்டு அதைப் போல் அடைய வேண்டும் என ஆசைக் கொள்ளாதீர்கள்!
“நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்” (அல்-குர்ஆன் 43:33)
உங்களின் பிள்ளைகளும், செல்வங்களும் இறைவனை மறக்கச் செய்ய வேண்டாம்!
“ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்” (அல்-குர்ஆன் 63:9)
இவ்வுலகின் செல்வம், செல்வாக்கு மற்றும் அதிகாரங்கள் யாவும் அழிந்து விடக் கூடியவைகள்!
“ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: ‘என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே! ‘அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே- ‘(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? ‘என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! ‘என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!’ (என்று அரற்றுவான்)” (அல்-குர்ஆன் 69:25-29)
நிலையற்ற இவ்வுலக செல்வத்தின் மீது காதல் கொண்டுள்ள மனிதன்!
“குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக)” (அல்-குர்ஆன் 104:1-9)
மறுமையில் பயனளிக்காத இவ்வுலக செல்வங்கள்!
“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா” (அல்-குர்ஆன் 26:88)
இம்மையின் செல்வ சுகங்களில் மூழ்கிக் கிடந்தவர்களின் செயல்கள் யாவும் அழிந்து விடும்!
“(முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது; அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன – அவர்கள்தான் நஷ்டவாளிகள்” (அல்-குர்ஆன் 9:69)
நரகத்தில் விழுந்து விட்டால் நம்முடைய இவ்வுலக செல்வங்கள் எவ்விதப் பயனும் அளிக்காது!
“ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது” (அல்-குர்ஆன் 92:11)
இறைவனுக்கு நெருக்கமாக்கி வைக்கும் ஆற்றல் செல்வத்திற்கு இல்லை! மாறாக ஒருவரின் நற்கருமங்களே இறை நெருக்கத்தைப் பெற்றுத்தரும்!
“இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சுவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள்” (அல்-குர்ஆன் 34:37)
கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உதவினால் அல்லாஹ் இரு மடங்கு கூலி தருவான்!
“(கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் – அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள்” (அல்-குர்ஆன் 2:245)
தான தர்மங்கள் செய்வதினால் வறுமை உண்டாகாது! மாறாக செல்வம் பெருகும்!
“(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்¢ யாவற்றையும் நன்கறிபவன்” (அல்-குர்ஆன் 2:268)
ஒவ்வொரு முறை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் போதும் 1x7x100=700 மடங்கு நன்மைகள் கிடைக்கும்!
“அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்” (அல்-குர்ஆன் 2:261)
செய்த தர்மங்களை சொல்லிக்காட்டாதிருந்தால் நற்கூலிகள் கிடைக்கும்!
“அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு; இன்னும் – அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்” (அல்-குர்ஆன் 2:262)
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தான தர்மங்கள் செய்பவருக்கான உவமானம்!
“அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது: உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம்
பார்க்கின்றவனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 2:265)
அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்பணித்துக் கொண்டவர்களுக்கு தான தர்மங்கள் செய்யுங்கள்!
பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்” (அல்-குர்ஆன் 2:273)
நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்!
“நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 3:92)
பணக்காரர்களுக்கிடையில் செல்வம் சுற்றிக்கொண்டிருக்கக் கூடாது!
“அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்” (அல்-குர்ஆன் 59:7)
தான தர்மங்கள் செய்வதினால் உள்ளும் புறமும் தூய்மையடையும்!
“(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை
அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 9:103)
பயபக்தியுடையவர்களின் செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு!
“நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்¢ நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர். அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள். அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு” (அல்-குர்ஆன் 51:15-19)
எல்லா செல்வங்களை விட மிக்க மேலான செல்வம் அல்-குர்ஆன்!
“மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது; ) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது. அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) – இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது’ என்று (நபியே!) நீர் கூறும்” (அல்-குர்ஆன் 10:57-58)
உண்மையான முஃமின்கள் யார்?
“நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் – இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்” (அல்-குர்ஆன் 49:15)
பொன்னையும் பொருளையும் சேகரித்து வைத்துக் கொண்டு தான தர்மம் செய்யாதிருப்பவருக்கான தண்டணைகள்!
“எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) ‘இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்’ (என்று கூறப்படும்)” (அல்-குர்ஆன் 9:34-35)

Saturday, August 13, 2011

அருட்கொடையாம் தொழுகை.

தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே. தொழுகை
உங்களுக்கே.

ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.

பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான். 

தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.


CLICK AND READ.

>>> முஸ்லீம்களே!! தொழுகைக்கு நேரம் வகுப்பது சரிதானா? <<<

>>> முஸ்லீம்களே!! வெள்ளிக்கிழமை மட்டும் தொழுகைக்கு முக்கிய‌த்துவம் ஏன்? <<<


>>> முஸ்லீம்களே அரபு மொழியில் மட்டும் வழிபாடு ஏன் ? <<<

>>> க‌ட‌வுளின் உருவங்க‌ள‌ற்ற‌ பள்ளிவாச‌ல்க‌ள் எப்ப‌டி புனித‌மாக‌ இருக்க‌முடியும்? <<<


வாஞ்சையுடன் வாஞ்சூர்.