Wednesday, October 27, 2010

படித்தேன்,பகிர்ந்தேன். உத்தி

”ஹலோ …. யாரு?”
“அஸ்ஸலாமு அலைக்கும் ரபீக்தானே? சுல்தானோட மகன் ரபீக்?
‘’ஆமா …. நீங்க?’’
‘’நான் தான் கம்பம்ல் இருந்து காதர் மாமா பேசறேன். சின்னப் புள்ளைல பார்த்தது. சொகமா இருக்கீயா?
  ‘’ஐயோ காதர் மாமா… ! எங்கப்பாவோட பெஸ்ட் பிரண்ட். சொல்லுங்க மாமா. எப்படியிருக்கீங்க? என்ன விசேஷம்?’’
  ‘’நல்லார்க்கேன் …. அப்புறம் நஜீபுன்னு ஒரு பையன் இருக்கானாமே, தேனிக்காரப் பையன். உங்கூடப் படிச்சவண்டு சொன்னாங்க. அவன் எப்படி நல்ல பையனா? சும்மா ஒரு காரியமாத்தேன் கேக்கறேன்.’’
  ‘’சூப்பர் பையன் மாமா. முன்பெல்லாம் அழகா இருப்பான்…’’
  ’’ஏன் இப்ப அழகா இல்லயா?’’
  ‘’இப்பக் கொஞ்சம் குடிக்கப் பழகி ஆளு நோஞ்சானாகிப் போனான். இருந்தாலும் விவரமான பையன் மாமா. ரொம்பக் கெட்டிக்காரன்.’’
  ‘’அப்படியா என்ன தொழில் செய்யறான்?’’
  ‘’தற்சமயம் ஒண்ணுமில்லை மாமா. அவுங்கப்பா அவன நம்பமாட்டேங்கிறார். ஒரு தரம் ரெண்டு லட்சத்தை தொலைச்சுட்டான்றதுக்காக பெத்த புள்ளைய வாழ்க்கை பூரா நம்பாட்டி எப்படி மாமா… அது சரி எதுக்கு அவனப் பத்திக் கேக்குறீங்க மாமா?’’
  ‘’சும்மா ஒரு கல்யாண ஆலோசனை. என்னுடைய ஒரு நண்பர் விசாரிக்கச் சொன்னார்.”
  ‘’தைரியமா பெண் கொடுக்கச் சொல்லுங்க மாமா. கடை வச்சுக் கொடுத்தா எப்படியும் பொழச்சுக்கிறுவான்.’’
  ‘’ப்ச்… அவன விடு… வேறே ஒரு பையன் இருக்கானாமே நாசர் –ன்னு சின்னமனூர்க்காரன். அவனத் தெரியுமா?’’
 ‘’நல்லாத் தெரியும். நஜீப விட தங்கமான பையன் மாமா.’’
 ‘’அவன் என்ன செய்யறானாம்?’’
 ‘’ஸ்டேசனரிக் கடை வைத்திருந்தான்.’’
 ’’வைத்திருந்தானா? இப்ப இல்லையா?’’
‘’ஆமா மாமா. ஃபிரண்டுங்க கூட சேர்ந்து சீட்டு விளையாண்டு ஒரே ராத்திரில எழுபத்தைந்தாயிரம் ரூபாய் தோத்துட்டான். அந்த விரக்தில குடி கொஞ்சம் ஓவராயிடுச்சு. மத்தபடி எந்தக் கம்பளைண்டுமில்லங்க மாமா. பொண்ணுக் கொடுக்கிறதாயிருந்தா ரெண்டு பையன்கள்ல யாருக்கு வேணும்னாலும் தைரியமா கொடுக்கச் சொல்லுங்க மாமா. நான் கூட ராத்திரி பூரா அவனுங்க கூடத்தான் இருந்தேன். சுபுஹுக்கு முன்னாடிதான் வந்து படுத்தேன். லுஹர் நேரம் போன் பண்ணி எழுப்பிட்டீங்க. அவனுங்க ரெண்டு பேருமே என்னோட உயிர் நண்பனுங்க. யாரையுமே நான் குறைச்சு சொல்ல மாட்டேன். சரிதானே மாமா?’’
  ‘’ரொம்ப சரிங்க மருமகனே. உன்னச் சின்னப் பிள்ளைல பார்த்தது. உங்கப்பாவை நல்லாத் தெரியும். நீ உங்கப்பனுக்கு அப்பனா இருக்கிறீயே. நான் அவனுங்களைப் பற்றி விசாரிக்குறதுக்காக போன் பண்ணலை. உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கிறத்தான் கூப்பிட்டேன். அல்லாஹ் காப்பாத்தினான். வச்சிரட்டா.’’  
நன்றி : சமரசம் : ஆகஸ்ட் 1-15,2010 

Wednesday, October 20, 2010

எனக்கு கிடைத்த சைனீஸ் விருந்து

நான் வேலை செய்யும் இடத்தின் அருகே ஒரு பெரிய ஷாப்பிங் காம்பள்க்ஸ் உள்ளது.அங்கு பல விதமான கடைகள்.அங்கு ஒரு சைனீஸ் ஹெர்பல் கடையும் இருக்கிறது.அங்குள்ள ஒரு சைனீஸ் பெண் எனக்குப் பழக்கம்.பிரேக் நேரத்தில் போய்  பேசிக் கொண்டிருப்பேன்.ஆங்கிலமும்,சைனீசும் கலந்த பேச்சு.அந்த கடையின் மனமும் மிக அருமையாக இருக்கும்.எல்லா வகையான வேர்கள்,தாவரங்கள்,இலைகள் இன்னும் பெயர் தெரியாத வகைகள்...............

ஒருநாள்,அந்த பெண் சொன்னால்.நாளைக்கு உங்களுக்கு விருந்து தரப் போகிறேன் என்று?நானும் சரி ஆனால் சிலவற்றை நான் சாப்பிடமாட்டேனே?(உள்ளுக்குள் பயங்கர பயம் வேறு)பாம்பு,தவளை,கரப்பான் என அடுக்கி இருந்தால் என்ன செய்வது?(இவற்றையெல்லாம் சைனீஸ் சூப்பர் மார்கெட்டில் பார்த்து,வியர்த்திருக்கிறேன்)என்று சொன்னேன்."என்ன சாப்பிட மாட்டீர்கள் என்று சொல்லுங்கள்"என்றால்.நானும் சொன்னேன்,பன்றி,பாம்பு,தவளை,இறைவன் பெயர் சொல்லி அறுக்காத - பிராணிகள்(உண்ண அனுமதிக்கப்பட்ட ஆடு,மாடு,கோழி போன்ற)என்று."சரி,நாளை வாருங்கள் லஞ்சுக்கு என்றால்.தலையாட்டிவிட்டு,சென்றுவிட்டேன்.

கணவரிடம் சொன்னேன்.உணவு தர அழைப்பு தந்த அந்த சகோதரியின் அழைப்பை ஏற்றுக்கொள்.உனக்கு பிடிக்காத - மார்க்கம் அனுமதிக்காத உணவு இருந்தா எடுத்து சொல்.புரிந்து கொள்வாள்.என்றார்.

மறுநாள்,மதியம் சென்றேன்.அப்போதுதான் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார் அந்தப் பெண்.பக்கத்தில் இன்னொரு சைனீஸ் பெண்,ஆனால் அந்த பெண் என்னைப்போல் ஹிஜாபோடு.என்னைக்கண்டதும் சலாம் (முஸ்லிம் முகமன்)சொன்னால்.பதில் சொன்னேன்.மூவரும் அமர்ந்தோம்.

ஆவலாக அந்தப்பெண்களையும்,உணவையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.உணவு பரிமாறப்பட்டது.ஒவ்வொரு உணவின் தட்டு பக்கத்திலும் ஒரு குறிப்பு,ஆங்கிலத்தில்.பொறித்த கோழி-ஹலால்,மாடு வறுவல்-ஹலால்,பிரியாணி சோறு ஹலால்,(சைனீஸ் ஸ்டைல்-(கூடுதலாக பிரியானில் சேமியா சேர்க்கப்பட்டிருந்தது)சைனீஸ் டி.இன்னும் சாலட் வகைகள்.எனக்கு ஆச்சரியம்,

"என் தோழி இவள் மூன்று மாதம் முன்பு இஸ்லாத்தை தழுவினால்.அன்றிலிருந்து இறைவனால் அனுமதிக்கப்பட (ஹலால்)உணவு மட்டுமே சாப்பிடுகிறாள்.நீயும் இந்த மார்க்கம்தான் என்பதை அறிந்து,என் தோழியையும் அறிமுகப்படுத்தி - விருந்து தர வேண்டும் என விரும்பினேன்,அதுதான் இந்த ஏற்பாடு"அந்த சைனீஸ் பெண் சொன்னால்.எனக்கு வயிறும் நிறைந்து, மனமும் நிறைந்தது.கண்கள் பணிக்க - இறைவனுக்கு நன்றி சொல்லி விடை பெற்றேன்.ரொம்ப அற்புதமான அனுபவம்.மாஷா அல்லாஹ்.

Sunday, October 10, 2010

படித்ததில் பிடித்தது ! எதிர்க்குரல்!!

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

   
கரைந்து போன பரிணாம ஆதாரங்கள் - II

நியாண்டர்தல் மனிதர்கள் (Neandertals or Neanderthals) - நமக்கும் குரங்கிற்கும் இடைப்பட்டவர்கள் இல்லை: 

இந்த தலைப்பு உங்களில் சிலருக்கு ஆச்சர்யத்தை தந்திருக்கலாம். "நியாண்டர்தல் மனிதர்கள் நமக்கு முன்வந்தவர்கள் என்றல்லவா படித்ததாக நினைவிருக்கின்றது, அவர்கள் நமக்கு முன்னோர்கள் இல்லையா, குரங்கு போன்ற உயிரினத்திற்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்டவர்கள் இல்லையா?" என்று நீங்கள் கேட்கலாம்.  

இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் "நியாண்டர்தல் மனிதர்கள் அறிவில் மனிதர்களை விட குறைந்தவர்கள் என்று கூட கேள்விப்பபட்டிருக்கின்றோமே?" என்றும் கேட்கலாம். 

ஆம், நீங்கள் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான். ஆனால், இவையெல்லாம் தவறு என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. எந்த அளவுக்கு என்றால், நியாண்டர்தல் மனிதர்கள் நமக்கு முன்னோர்கள் என்ற கூற்று போய் இப்போது இவர்களுக்கும் நமக்கும் பொதுவான மூதாதையர் என்று கூறும் அளவிற்கு....



"குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் இன்னும் ஏன் குரங்குகள் இருக்கின்றன?" என்று பரிணாமவியலாளர்களை நோக்கி கேள்வி எழுப்பினால், உடனே "உங்களுக்கு பரிணாமம் பற்றி தெரியவில்லை. மனிதன் குரங்கிலிருந்து வரவில்லை, மாறாக நமக்கும் குரங்கிற்கும் பொதுவான மூதாதையர்" என்று பதில் சொல்லுவார்களே, அதுபோலத்தான் இப்போது மனிதனிற்கும் நியாண்டர்தல் மனிதர்களுக்கும் உள்ள உறவை விளக்குகின்றனர் பரிணாமவியலாளர்கள்.  

"Neandertals (Homo neanderthalensis) are currently believed to be our closest evolutionary relatives. Although some researchers once thought they were our immediate ancestors in Europe, most now agree that Neandertals and modern humans most likely shared a common ancestor within the last 500,000 years, possibly in Africa." --- The Neandertal Genome, Scince Magazine, sciencemag.org
நியாண்டர்தல் மனிதர்கள் பரிணாமப்படி நமக்கு நெருங்கிய உறவினர்களாக நம்பப்படுகின்றார்கள். அவர்கள் நம்முடைய immediate மூதாதையர் என்று சில ஆய்வாளர்களால் கருதப்பட்டிருந்தாலும், இப்போது பெரும்பாலான ஆய்வாளர்கள் நியாண்டர்தல் மனிதர்களும் தற்காலத்திய மனிதர்களும் பொதுவான மூதாதையர்களை கொண்டிருக்கலாம் என்று ஒப்புக்கொள்கின்றனர் --- (Extract from the original quote of) The Neandertal Genome, Scince Magazine, sciencemag.org 

நியாண்டர்தல் மனிதர்களில் இருந்து நாம் வந்ததாக இந்த பதிவை படிக்கும் வரை நீங்கள் நினைத்திருந்தால் (Ape like creatures --> Neandertals --> Modern Humans) இன்றோடு அந்த நம்பிக்கையை புதைத்து விடுங்கள். நமக்கும் அவர்களுக்கும் பொதுவான மூதாதையராம் (Common Ancestor --> Neardertals & Common Ancestor --> Modern Humans). 

அது சரி, குரங்கு போன்ற உயிரினத்திற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினமாக நியாண்டர்தல்களை காட்டி பரிணாமத்திற்கு இது ஆதாரம் என்று சந்தோஷப்பட்ட பரிணாம உலகத்திற்கு இந்த பலத்த அடி எப்படி ஏற்பட்டது?  

இதற்கு விடைக்காண நீங்கள் நியாண்டர்தல் குறித்த ஆய்வுகளை உற்று நோக்கினால் பரிணாமவியலாளர்களுக்கு அப்படி ஒப்புக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்பதை உணரலாம்.     

முதலில், யார் இவர்கள்?  

1829 ஆம் ஆண்டே நியாண்டர்தல் படிமங்கள் பெல்ஜியம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவைகள் கற்கால மனிதர்களின் படிமங்களாக  அங்கீகரிக்கப்படவில்லை. பின்னர் 1856 ஆம் ஆண்டு ஜெர்மனியின் நியாண்டர் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள் தான் தற்காலத்திய மனிதர்களின் முன்னோர்களாக அங்கீகரிக்கப்பட்டன. இந்த படிமங்கள் நியாண்டர்தல்-1என்று அழைக்கப்பட்டன. 

1886 ஆம் ஆண்டு,  பெல்ஜியத்தில் கிட்டத்தட்ட முழுமையான இரண்டு நியாண்டர்தல் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அன்றிலிருந்து இன்று வரை பல நியாண்டர்தல் படிமங்கள் கிடைத்திருக்கின்றன. நியாண்டர்தல்கள், சுமார் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்து சுமார் 30,000-24,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்ததாக கணக்கிட்டுள்ளனர். அதாவது இந்த இனம் சுமார் 30,000-24,000 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்து விட்டது. எப்படி அழிந்தன?...பதிவின் இறுதியில் பார்ப்போம்.      

சரி, நியாண்டர்தல்களுக்கும் தற்காலத்திய மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்? 

உடலளவில் வித்தியாசங்கள் உண்டு. நியாண்டர்தல்களின் உயரம் தற்காலத்திய மனிதனை விட சுமார் 5-6 இஞ்சுகள் குறைவு. இதையே 20,000 ஆண்டுகள் முந்தைய ஐரோப்பிய மனிதர்களோடு ஒப்பிட்டால் நியாண்டர்தல்களும் அந்த மனிதர்களும் ஓரே மாதிரியான உயரம்தான். நியாண்டர்தல்கள் திடமான உடலமைப்பை கொண்டிருந்திருக்கின்றார்கள்.  அவர்களுடைய மண்டை ஓடு பெரியதாகவும், மூளை தற்காலத்திய மனிதர்களோடு ஒப்பிடுகையில் சற்று பெரிதாகவும் இருந்துள்ளது.

மனிதர்களுக்கு முன் வந்தவர்களா நியாண்டர்தல்கள் ? 

இல்லை என்கின்றன ஆய்வு முடிவுகள். ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித படிமங்கள் காணக்கிடைக்கின்றன. நியாண்டர்தல்களோ சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் மறைந்திருக்கின்றனர். ஆக, ஒரே காலக்கட்டத்தில் இருவரும் வாழ்ந்திருக்கின்றனர்.

"A few years ago, they [Neandertals] were thought to be ancestral to anatomically modern humans, but now we know that modern humans appeared at least 100,000 years ago, much before the disappearance of the Neandertals. Moreover, in caves in the Middle East, fossils of modern humans have been found dated 120,000-100,000 years ago, as well as Neandertals dated at 60,000 and 70,000 years ago, followed again by modern humans dated at 40,000 years ago. It is unclear whether the two forms repeatedly replaced one another by migration from other regions, or whether they coexisted in some areas " --- Francisco J. Ayala, Darwin and Intelligent Design, Fortress Press, Minneapolis, 2006.
சில வருடங்களுக்கு முன்னால், அவர்கள் (நியாண்டர்தல்) உடல்ரீதியாக தற்காலத்திய மனிதர்களுக்கு முன்னோர்களாக கருதப்பட்டார்கள். ஆனால், இப்போது நமக்கு கிடைக்கும் தகவல்படி, தற்காலத்திய மனிதர்கள் குறைந்தபட்சம் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியிருக்கின்றார்கள், அதாவது நியாண்டர்தல்கள் மறைவதற்கு பல காலங்களுக்கு முன்னராகவே. 
அதுமட்டுமல்லாமல், மத்திய கிழக்கில் உள்ள குகைகளில், 120,000-100,000 ஆண்டுகளுக்கு முந்தைய தற்காலத்திய மனிதர்களின் படிமங்களும், 60,000-70,000 ஆண்டுகளுக்கு முந்தைய நியாண்டர்தல்களின் படிமங்களும், பிறகு மறுபடியும் 40,000 ஆண்டுகளுக்கு முந்தைய தற்காலத்திய மனிதர்களின் படிமங்களும் கிடைத்திருக்கின்றன. இந்த இரண்டு வகைகளும் மாறி மாறி குடியேறினார்களா அல்லது இருவரும் சேர்ந்தே வாழ்ந்தார்களா என்பது இன்னும் தெளிவில்லாமல் உள்ளது --- (Extract of the original quote of) Francisco J. Ayala, Darwin and Intelligent Design, Fortress Press, Minneapolis, 2006. 

நியாண்டர்தல்கள் மனிதர்களுக்கு முன்வந்தவர்கள் என்றால் அல்லது குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்ட உயிரினங்கள் என்றால், எப்படி ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்திருக்க முடியும்?....இது முதல் அதிர்ச்சி....

இந்த ஆய்வு முடிவுகள் உங்களுக்கு ஆச்சர்யத்தை தந்திருந்தால் மிக சமீபத்திய ஆய்வு முடிவுகள் இன்னும் வியப்பை தரும். ஆய்வாளர்களுக்கோ இது ஒரு மிகப்பெரிய ஷாக். என்னவென்றால், மனிதர்களும் நியாண்டர்தல்களும் ஒன்றோடு கலந்து வாரிசுகளை உருவாக்கியிருக்கவேண்டும் என்பதுதான் அது.




தற்காலத்திய மனிதர்களின் மரபணுக்களில் (ஆப்ரிக்கர்கள் தவிர) 1-4% நியாண்டர்தல்களிடமிருந்து வந்துள்ளவாம். அதாவது நியாண்டர்தல்கள் அழிந்து விடவில்லை, அவர்கள் இன்னும் நம்மில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்களாம்.

"Researchers sequencing Neandertal DNA have concluded that between 1 and 4 percent of the DNA of people today who live outside Africa came from Neandertals, the result of interbreeding between Neandertals and early modern humans" --- Neandertal Genome Study Reveals That We Have a Little Caveman in Us, Gate Wong, Scientific American, 6th May 2010.   
நியாண்டர்தல் DNA வை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், ஆப்ரிக்காவிற்கு வெளியே வாழும் மனிதர்களிடம் 1-4% நியாண்டர்தல் DNAக்கள் இருப்பதாக முடிவு செய்திருக்கின்றனர். இது நியாண்டர்தல்களும் தற்காலத்திய மனிதர்களின் முன்னோர்களும் இணைந்ததால் ஏற்பட்டது --- (Extract from the original quote of) Neandertal Genome Study Reveals That We Have a Little Caveman in Us, Gate Wong, Scientific American, 6th May 2010.         

அது ஏன் தற்காலத்திய ஆப்ரிக்கர்களிடம் நியாண்டர்தல்களின் மரபணுக்கள் காணப்படவில்லை?...இதற்கு எப்படி விளக்கம் சொல்லுகின்றார்கள் என்றால், தற்காலத்திய மனிதர்கள் ஆப்ரிக்காவில் தோன்றியவர்களாம், நியாண்டர்தல்களோ ஐரோப்பாவில் தோன்றி ஆசியா வரை சுற்றியவர்களாம். மனிதர்கள் ஆப்ரிக்காவை விட்டு வெளியேறி மத்திய கிழக்கிற்கு குடியேறிய போது அங்கிருந்த நியாண்டர்களுடன் கலந்து விட்டார்களாம். அதனால் தான் ஐரோப்பியர்கள், ஆசியர்களது மரபணுக்களில் நியாண்டர்தல்கள் காணப்படுகின்றார்களாம். அதே சமயம் ஆப்ரிக்கர்களிடம் இவர்கள் காணப்படவில்லையாம்.

ஒரு நிமிஷம்........இந்த இருவரும் சேர்ந்து வாரிசுகளை உருவாக்கியிருக்கின்றார்கள் என்றால், பிறகு எப்படி நியாண்டர்தல்களை வேறு ஒரு உயிரினமாக பார்க்க முடியும்? அவர்களும் மனிதர்கள் தானே? அவர்களை மனித இனங்களில் ஒன்றாகத் தானே பார்க்கவேண்டும்?....

ஆம், அறிவியலாளர்கள் இப்போது இந்த கருத்தையும் ஆதரிக்க துவங்கியிருக்கின்றார்கள்.

மரபணு சோதனைகள் ஆரம்ப காலகட்டங்களில் இருப்பதால் பொறுத்திருந்து தான் இவை இன்னும் என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டும்.

ஆக, குரங்கு போன்ற உயிரினத்திருக்கும் நமக்கும் இடைப்பட்டவர்கள் நியாண்டர்தல்கள் என்ற கூற்றும் தவறு, அதுபோலவே நியாண்டர்தல்கள் மனிதர்கள் அல்ல என்ற கூற்றும் தவறு....

நியாண்டர்தல்கள் அறிவில் குறைந்தவர்களா? 

இதுவும் ரொம்ப காலமாக நம்பப்பட்டு வந்த ஒன்று. அதாவது மனிதர்கள் அறிவில் சிறந்தவர்களாம், நியாண்டர்தல்கள் அறிவில் குறைந்தவர்களாம். அதனால் தான் அவர்கள் அழிந்துவிட்டார்களாம்.

முதலில் அறிவில் குறைந்தவர்கள் (நியாண்டர்தல்), பிறகு அறிவில் சிறந்தவர்கள் (தற்காலத்திய மனிதர்கள்) என்று வந்திருப்பதால் இது பரிணாமத்திற்கு ஆதாரம் என்று காட்டினார்கள் பரிணாமவியலாளர்கள். அந்தோ பரிதாபம், அந்த ஆதாரமும் சுக்கு நூறாக நொறுங்கியிருக்கின்றது.

சமீபத்திய ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், நியாண்டர்தல்களுக்கு பின்னர் வந்த மனிதர்கள் உருவாக்கிய கருவிகள் நியாண்டர்தல்கள் உருவாக்கிய கருவிகளை விட சிறந்தவை இல்லையாம். இது பரிணாமவியலாளர்களுக்கு மற்றொரு அடி.

"Research by UK and American scientists has struck another blow to the theory that Neanderthals (Homo neanderthalensis) became extinct because they were less intelligent than our ancestors (Homo sapiens). The research team has shown that early stone tool technologies developed by our species, Homo sapiens, were no more efficient than those used by Neanderthals" --- New Evidence Debunks 'Stupid' Neanderthal Myth, Science Daily, dated 26th August 2008. 
நியாண்டர்தல்கள் அறிவில் குறைந்தவர்களாக இருந்ததால் மறைந்து விட்டார்கள் என்ற கோட்பாட்டிற்கு மற்றொரு அடியாக விழுந்துள்ளது பிரிட்டன் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு. மனிதர்கள் உபயோகப்படுத்திய ஆரம்ப கால கருவி யுக்திகள், நியாண்டர்தல்கள் உபயோகப்படுத்திய யுக்திகளோடு ஒப்பிடும் போது சிறந்ததாக இல்லை என்று இந்த ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது --- (Extract from the original quote of) New Evidence Debunks 'Stupid' Neanderthal Myth, Science Daily, dated 26th August 2008.   

இது மட்டுமா, இவர்கள் உடல் ஆபரணங்களை செய்திருக்கின்றார்கள், இறந்தவர்களை புதைத்திருக்கின்றார்கள், தாங்கள் வாழும் இடங்களை ஒழுங்குபடுத்திருக்கின்றார்கள் என்று பல...

சுருக்கமாக சொல்லுவதென்றால் இவர்கள் அறிவில் சிறந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர்.

நியாண்டர்தல்கள் பேசினார்களா? 

இது போன்ற கேள்விகளுக்கு படிம ஆதாரங்கள் மூலம் விடை கூறுவது கடினம். ஆனால், அவர்கள் பேசுவதற்குண்டான தகுதிகளை கொண்டிருந்தார்கள் என்கின்றன ஆய்வுகள். எப்படி?, மனிதர்கள் பேசுகின்றார்கள் என்றால் அதற்கு காரணமான மரபணுக்களில் FOXP2 என்ற மரபணு முக்கியமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்களின் இந்த மரபணுவில் உள்ள வேறுபாடுகள் அப்படியே நியாண்டர்தல் மனிதர்களிடமும் உள்ளனவாம்.

"Neandertals and modern humans share the same variant of the language gene FOXP2" --- The Neandertal Genome, Scince Magazine, sciencemag.org

அதனால் அவர்கள் பேசக்கூடிய தகுதியை பெற்றிருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

"Genetic studies hint Neanderthals were equipped for language" --- Modern speech gene found in Neanderthals, Kerri Smith, Nature, 18th October 2007, doi:10.1038/news.2007.177
மரபணு ஆய்வுகள் நியாண்டர்தல்கள் பேசுவதற்குரிய தகுதியை பெற்றிருந்ததாகதெரிவிக்கின்றன --- (Extract from the original quote of) Modern speech gene found in Neanderthals, Kerri Smith, Nature, 18th October 2007, doi:10.1038/news.2007.177 

சரி, எப்படி இவர்கள் மறைந்தார்கள்?

இதற்கு தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. பல்வேறு யூகங்கள் உள்ளன. மற்றொரு மனித இனத்தால் இவர்கள் அழிக்கப்பட்டிருக்கலாம், மற்ற மனிதர்களோடு இணைந்ததால் காலப்போக்கில் மறைந்து போயிருக்கலாம் என்பது போன்ற யூகங்கள்...

ஆக, நியாண்டர்தல் மனிதர்கள்,

  • தற்காலத்திய மனிதர்களோடு ஒன்றாக வாழ்ந்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் நமக்கு முன்வந்தவர்களோ அல்லது குரங்கிற்கும் நமக்கும் இடைபட்டவர்களோ கிடையாது.
  • அவர்கள் மனித இனம் தான். முன்னர் எண்ணப்பட்டது போல அவர்கள் ape-like கிடையாது...
  • அறிவில் சிறந்து விளங்கியிருக்கின்றாகள்.
  • பேசக்கூடிய தகுதியை பெற்றிருந்திருக்கின்றார்கள்.


இனியும் உங்களிடம் யாரும் வந்து நியாண்டர்தல்கள் நமக்கு முன்வந்தவர்கள் என்றோ, நமக்கும் குரங்கு போன்ற உயிரினத்திற்கும் இடைப்பட்டவர்கள் என்றோ, அவர்கள் அறிவுத்திறனில் நம்மை விட குறைந்தவர்கள் என்றோ கூறினால், ஆய்வு முடிவுகளை எடுத்துக் காட்டி விளக்கம் கொடுங்கள். அவர்களுடைய எண்ணம் தவறு என்று நிரூபிக்கப்பட்டு விட்டதாக எடுத்து கூறுங்கள்.

நீங்கள் விடைபெறுவதற்கு முன்னால் இதையும் கேட்டுவிட்டு செல்லுங்கள். குரங்கு போன்ற ஒன்றிலிருந்து கொஞ்ச கொஞ்சமாக நிமிர்ந்து தற்காலத்திய மனிதன் வந்ததாக படம் போட்டு காண்பிப்பார்களே...அதுவெல்லாம் சுத்த non-s****.... 

இன்ஷா அல்லாஹ் இது பற்றி எதிர்கால பதிவுகளில்...

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்...


Pictures taken from:
Picture - 1: Designed by Aashiq Ahamed
Picture - 2: As appeared in Science Daily magazine dated 26th August 2008.
Picture - 3: As appeared in Max Planck Institute's website

My sincere thanks to: 
1. Max Planck Institute, Germany.
2. Science Magazine.
3. Science Daily.
4. Nature Magazine.
5. Scientific American.
6. Wikipedia.
7. New Scientist Magazine.

References: 
1. A Draft Sequence of the Neandertal Genome - Science 7 May 2010: Vol. 328. no. 5979, pp. 710 - 722, DOI: 10.1126/science.1188021.
2. The Neandertal Genome - Sciencemag.com.
3. New Evidence Debunks 'Stupid' Neanderthal Myth, Science Daily, dated 26th August 2008.
4. In praise of… Neanderthal man - The Guardian,  Wednesday 13 January 2010
5. Neandertal Genome Study Reveals That We Have a Little Caveman in Us, Gate Wong, Scientific American, 6th May 2010.
6. Creationist Arguments: A Neandertal in Armor? - FAQs, talkorigins.org.
7. Neanderthals and Humans Likely Interbred - K. Kris Hirst, dated 6th May 2010, archaeology.about.com.
8. The Neandertal Genome Project - The Max Planck Institute for Evolutionary Anthropology. www.eva.mpg.de.
9. Neanderthal genome reveals interbreeding with humans - Ewen Callaway, New Scientist, 6th May 2010.
10. Neandertals, Humans Share Key Changes To 'Language Gene' - Science Daily, 21st October 2007.
11. Neandertals have the same mutations in FOXP2, the language gene, as modern humans - 18th October 2007, anthropology.net.
12. Neanderthal 'make-up' containers discovered - BBC, 9th January 2010.
13. Welcome to the family, Homo sapiens neanderthalensis - New Scientist, Magazine issue 2760, 13th May 2010.
14. Neanderthals, Francisco Ayala, FOXP2 gene - Wikipedia.



ஆஷிக் அஹ்மத் அ

Saturday, October 2, 2010

சிறந்தவர் யார் ?

அண்ணல் நபிகளின் அமுத மொழிகள்

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 
"(பசித்தவருக்கு) உணவளிப்பதும், 
உமக்கு அறிமுகமானவருக்கும் அறிமுகமற்றவருக்கும் ஸலாம் (முகமன்) சொல்வதுமாகும்" என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
*************************************************

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (முஸ்லிம்களில் சிறந்தவர்)" என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் அல்-ஆஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) ஆகியோரிடம் கேட்டு, அபுல் கைர் (ரஹ்).

**************************************************