ரமழான் எனும் புனித மாதம் அண்மிவிட்டது. இந்த ஆண்டின் ரமழானை அடைந்துகொள்ளாமல் மரணித்துவிட்ட முஸ்லிம்கள் அனைவருக்கும் நம் பிரார்த்தனைகள் உரித்தாகட்டும். இதை நமக்கு அடையத் தந்த அல்லாஹ்வைப் புகழ்கிறோம்! இந்தப் புனித மாதத்தை எதிர்நோக்கும் விதத்தில் ஆவலுடன் முஸ்லிம் சமுதாய அமைப்புகளும் தனி நபர்களில் பலரும் பல்வேறு நினைவூட்டல் நிகழ்வுகளும் அறிவுரைகளும் வழங்கி அவற்றின் மூலம் முஸ்லிம்கள் அதிகமாக நன்மைகளைப் பெறவேண்டும் என்ற நன்நோக்கத்தில் மிகவும் ஆர்வத்துடன் செயல் படுகின்றனர், அல்ஹம்துலில்லாஹ்!
அவ்வழியில் நாமும் பத்து அம்சத் திட்டம் ஒன்றை சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு வழங்குகிறோம். அவற்றைச் செயல்படுத்துவதன் மூலம் நாம் ரமழானில் மட்டுமின்றி ரமழான் அல்லாத மற்ற நாட்க்ளிலும் பலன் பெற்று இம்மை வெற்றியும் மறுமை ஈடேற்றமும் பெற அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமீன்.
1) ரமழானின் நோக்கம் நாம் "தக்வா" எனும் இறையச்சத்துடனும் இறையுணர்வுடனும் ஒவ்வொரு விஷயத்திலும் செயல்பட வேண்டும் என்பதாகும் நாம் சென்ற ரமழானிலும் ரமழானிற்குப் பிறகு இன்று வரையும் அவ்வாறு செயல்பட்டோமா? செயல்படுகிறோமா? என்று ஒரு முறையாவது சில நிமிடங்களை ஒதுக்கி, பள்ளியிலோ இரவின் தனிமையிலோ முதலில் சுயபரிசீலனை செய்ய வேண்டும்.
2) நமது கடமையான தொழுகைகளை நிறைவேற்றியது, அவற்றைப் பள்ளியில் ஜமாத்தோடு தொழுதது, உபரியான தொழுகைகள் மற்றும் குர்ஆனோடுள்ள தொடர்பு, வறியவர் துயர் நீக்கிடும் ஜகாத்-ஸதகா போன்ற தர்மங்கள் கொடுத்தது, சென்ற ரமழானுக்குப் பிறகு நமது ஈமானின் நிலையில் உறுதி கூடி இருக்கிறதா? என்று தன்னாய்வு செய்ய வேண்டும்.
3) நம்முடைய அன்றாட அலுவல்கள் கடந்த ரமழானுக்கு முன்னர்; ரமழானில்; ரமழானுக்குப் பின்னர் இன்றுவரை எவ்வாறு இருந்தது; இருக்கிறது; இருக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்து, உறுதி பூண்டு, செயல் திட்டமிட்டு நீறைவேற்ற முனைய வேண்டும்.
4) அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்களில் பொருட்செல்வம், சிந்தனை ஆற்றல், நேரம் போன்றவற்றை எவ்வாறு செலவழித்தோம் என்பதை மனத்தில் அசைபோட்டுப் பார்த்து, அவற்றை இறைதிருப்தியைக் கூடுதலாகப் பெறும் வகையில் ஆன்மீக, சமுதாய நற்பணிகளில் ஈடுபடுத்திட வழிகோல வேண்டும்.
5) ரமழான் என்பது குர்ஆனுடைய மாதம் என்பதால் ரமழானில் மட்டும் குர்ஆனை அதிகமாக ஓதி, குர்ஆனோடு தொடர்புடைய வாழ்க்கை என்பது ரமழானில் மட்டுமே என்ற குறுகிய எண்ணம் கொண்டுவிடாமல் முழு மனிதகுலத்துக்கும் நேர்வழி காட்டி, ஈடேற்றதின்பால் இட்டுச் செல்லும் இறைவேதம் அருளப்பட்ட மாதம் குர்ஆன் எனும் உயர்நோக்கில் குர்ஆனை என்றென்றும் பொருள் உணர்ந்து ஓதுவதோடு, அதன் சட்ட-திட்டங்களை நம் வாழ்வின் இறுதி மூச்சுவரை கடைப்பிடிக்கவேண்டும்.
6) கடந்த ரமழானில் நாம் நோற்ற நோன்பு, பொய்யும் புறமும் வீணானவையும் கலவாது இருந்ததா? அப்பயிற்சி ரமழானுக்குப் பின்னரும் தொடர்ந்ததா? கடந்தகால ரமழான் நோன்புகளை நோற்றதன் மூலம் நமது வாழ்க்கையில் தீமையான செயல்கள் அற்றுப் போயினவா? குறைந்தனவா? போன்ற கேள்விகளை நமக்கு நாமே கேட்டு விடைகாண வேண்டும்.
7) ரமழான் எனும் இந்த கண்ணியமான மாதத்தில் செய்யப்படும் அமல்களுக்கும் தர்மங்களுக்கும் பல மடங்கு நன்மைகள் உள்ளன என்பதை உணர்ந்து, (உம்ரா போன்ற) வழிபாடுகளை அதிகப்படுத்தினோமா? தீய, வீணான செயல்களைத் தவிர்த்துக் கொண்டதோடு நன்மையான செயல்பாடுகளைக் கூட்டிக்கொண்டோமா? கடந்த ரமழானில் நம் வாழ்வில் தீயவை குறைந்து நல்லவை கூடியிருப்பின் அவை ரமழானுக்கு மட்டுமில்லை; வாழ்நாள் முழுவதற்கும் எனும் எண்ணத்துடன் பயிற்சியுடன் தொடர்வோமாக!
8) ரமழான் இரவுத் தொழுகையின் மகத்துவத்தை உணர்ந்து அவற்றை பேணினோமா, எண்ணிக்கைகளுக்கு முக்கியமளிக்காமல் அதில் அல்லாஹ்வோடு இருந்த ஈடுபாட்டிற்கும் இறையுணர்வுக்கும் முக்கியமளித்ததோடு நமது தேவைகளை அதன் மூலம் அல்லாஹ்விடம் சமர்ப்பித்தும், நமது பாவங்களையும் குறைகளையும் நினைத்து வருந்தி அழுது முறையிட்டு தீர்வு பெறும் பழக்கத்தை கடந்த ரமழானிற்குப் பின்னரும் கடைப்பிடித்தோமா?
9) ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த லைலதுல் கத்ரு எனும் இரவைக் கடந்த ரமழானின் கடைசிப் பத்து இரவுகளை வணக்கத்தில் கழித்திடவேண்டி கண்விழித்து, இத்திகாஃப் எனும் பள்ளியில் தங்கி வணக்கம் புரிந்திட நமது பணிகளில் இருந்து விடுப்பு எடுத்தோமா எடுக்க நாடினோமா அல்லது, ரமழான் இரவுகளை உடுப்புகள் அணிகலன்கள் வாங்கி அமல்கள் புரிய வேண்டிய காலத்தை இழந்து அலைபவர்கள்போல் அல்லாமல் ரமழானுக்கு முன்னரே நமது கொள்முதல்களை முடித்துக் கொண்டு ரமழானின் நன்மைகளைக் குவிப்போமா?
10) ரமழானில் நோன்புடன் இருக்கும் போது டீவியும் சினிமாவும் தவிர்க்க வேண்டும் என்பதைவிட வீணானவைகள் எதிலும் எங்கும் தவிர்க்க வேண்டும் என்பதை மற்ற நாட்களிலும் உணர்ந்திட இஸ்லாமியச் சிந்தனை, இறையுணர்வு, இறையச்சம், அதிகரித்திட வழிகோலும் வாய்ப்பு வசதிகள் நம் சமகால வாழ்வில் குவிந்து கிடக்கின்றன. இஸ்லாமிய நூல்கள், கேஸட்டுகள், மார்க்கப் பிரச்சார ஒளிபரப்புகள், இணைய தளங்கள் (ISLAMIC WEB SITES http://www.satyamargam.com/) போன்றவை நிறைய உள்ளன. அவற்றோடும் அவற்றை அறிமுகப்படுத்தும் அமைப்புகளோடும் ஈடுபாடு கொள்வதும் பிறரையும் கொள்ளச் செய்வதும் நம்மை இந்த ரமழான் மாதத்தின் நோக்கத்தைப் பெற உதவும் என்பதையும் உணர்வோமாக.
அல்லாஹ் நம்மையும் நம் உற்றர் உறவினர் அண்டை வீட்டார் அண்டை நாட்டார் என்று முழு மனித சமுதாயக் குடும்பத்தையும் இந்த உண்மைகளையும் உணர்வுகளையும் ஏற்றுச் செயல்பட்டு இம்மை எனும் இவ்வுலக வாழ்விலும் மறுமை எனும் நிலையான வாழ்விலும் நன்மைகளைப் பெற்றுக்கொண்ட வெற்றியாளர்களாக அருள் புரிய பிராத்திப்போமாக!
தொகுப்பு : இப்னு ஹனீஃப்
1 comment:
salaam
நல்ல விசயங்களை வரவேற்ப்போம்...எளிமையான நல்ல கட்டுரை..நோன்பை பற்றி அறிய http://tvpmuslim.blogspot.in/2012/07/50.html பார்க்கவும்
எங்க தளத்திற்கும் வாங்க உங்க கருத்த சொல்லுங்க
புதிய வரவுகள்:இந்தியன்னு சொல்லவே கேவலமா இருக்கு,குடிதண்ணீரை எப்போ குடிக்கனும்னு உங்களுக்கு தெரியுமா?-www.tvpmuslim.blogspot.com
Post a Comment