Thursday, December 1, 2011

உழைப்பும் வட்டியும் - ஓர் இஸ்லாமிய அணுகல்


அண்மைக் காலம் வரை உலகின் பொருளாதாரம் வட்டியை அடிப்படையாகக் கொண்டே சுழன்று வந்தது. ஆயினும் கடந்த சில தசாப்தங்களாக உலகளாவிய ரீதியில் ஆர்த்தெழுந்துள்ள இஸ்லாமிய விழிப்புணர்வின் விளைவாக வட்டியில்லாத ஒரு பொருளாதார ஒழுங்கை உருவாக்க வேண்டும் என்பதில் இஸ்லாமிய உலகு தீவிர 
ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது. 

இதன் விளைவாக இன்று (2006 வரை) உலகில் சுமார் 280 வட்டியில்லா இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் தோன்றி வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்களின் நிலையான சொத்துக்கள் 280 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்படுகின்றது. சுமார் 450 பில்லியன் அமெரிக்க டொலர்களை இவை பல்வேறு பொருளாதார முயற்சிகளில் முதலீடு செய்துள்ளன. இந்நிறுவனங்களில் வைப்புக்களாகவுள்ளவற்றின் பணப் பெறுமதி சுமார் 220 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

ஐக்கிய அரபு இராஜ்யங்களில் (U.A.E) அமைந்துள்ள துபாய் இஸ்லாமிய வங்கி, அபூதாபி இஸ்லாமிய வங்கி, ஷார்ஜா இஸ்லாமிய வங்கி, எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கி ஆகிய நான்கு வங்கிகளும் 2006ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஈட்டியுள்ள இலாபம் 33.2% வீதமாகும் என நிதி அறிக்கைகள் கூறுகின்றன.

மலேஷியா, இந்துனேஷியா, பஹ்ரைன், சவூதி அரேபியா, சூடான், குவைத், ஈரான், எகிப்து முதலான முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் மட்டுமன்றி பிரித்தனியா உள்ளிட்ட பல முஸ்லிம் அல்லாத நாடுகளிலும் இஸ்லாமிய வங்கிகள் தோன்றி வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. பல பாரம்பரிய சர்வதேச வங்கிகள் தத்தமது வங்கிகளில் வட்டியில்லாத கொடுக்கல் - வாங்கல் அலகுகளை உருவாக்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையிலும் தற்போது இஸ்லாமிய நிதித்துறை குறுகிய காலத்திற்குள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகின்றது.

ஆயினும் இஸ்லாமிய நிதி ஒழுங்கு பற்றியும் கொடுக்கல் - வாங்கல் முறைமை பற்றியும் போதிய அறிவும் தெளிவும் கொண்டவர்கள் குறைவாக இருப்பது கவலைக்குரிய நிலையாகும். இந்நிலையில் இஸ்லாமிய நிதித்துறை சார்ந்த நிபுணர்களையும் வளவாளர்களையும் உருவாக்க வேண்டிய பெரிய பொறுப்பை இஸ்லாமிய நிறுவனங்கள், கலாசாலைகள் நிறைவேற்ற  வேண்டியது காலத்தின் தேவையும் சன்மார்க்கக் கடமையும் ஆகும்.

Monday, November 28, 2011

எங்கள் தலைவரின் சொல்..............


 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்'.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி).
ஆதாரம்: புகாரி.

இறைவனின் தூதர் நபிகள் நாயகம் ஸல் 

Sunday, November 27, 2011

இறைவேதம் குர்ஆனிடம் பேச வேண்டுமா?


முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளுக்கு...

குரானுடன் உரையாட விருப்பமா?


என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...

Tuesday, November 22, 2011

வரதட்சணை கொடுமைக்காக கணவனை சிறையில் அடைக்க ...

வரதட்சணை கொடுமைக்காக


 உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருக்கும் 




கணவனை சிறையில் அடைக்க மருமகள்கள்





தங்கள் வீட்டிலிருந்தபடியே புகார் கொடுக்கலாம்!!!


 
 Online Complaint Registration for NRI's

http://nottodowry.blogspot.com/

Saturday, November 19, 2011

சாதனை செயல்,அல்லாஹ்வுக்காக மட்டும்

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!...

அல்லாஹ் அக்பர்...அல்லாஹ் அக்பர்...அல்லாஹ் அக்பர்..

ஸஹீஹ் முஸ்லிம் முழுமையான பாகம் - அல்லாஹ்வின் மாபெரும் உதவி கொண்டு, நிறைவுபெற்று,பயன்பாட்டிற்கு வந்துவிட்டது...

ஸஹீஹ் முஸ்லிமின் முழுமையான பாகத்தை முதன்முதலில் எனதருமை சகோதர சகோதரிகளுக்கு அளிப்பதில் அளப்பறிய மகிழ்ச்சி அடைகிறேன்...

இந்த ஆக்கத்தில் உங்களின் பங்கு குறிப்பிடத்தகுந்த ஒன்று...

அல்லாஹ் இதன் கூலியை முழுமையாக வழங்கிட போதுமானவன்...

பயன்படுத்திப்பார்த்து,மற்ற சகோதரர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்....

இதன் பதிவிறக்க சுட்டி:


இந்த நற்பணியை செவ்வனே செய்து நம் கைகளில் தவழ செய்திருக்கும் நம் சகோதரர் ரஜீன் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் இரண்டு உலகத்திலும் அள்ளி-அள்ளி கொடுப்பானாக,ஆமீன் 

Friday, November 18, 2011

மாமிச உணவு மனித இனத்திற்கு எதிரானதா?


இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட சில குழுக்கள் மாமிச உணவுக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றன. இறைச்சிக்காக விலங்குகளை அறுப்பதும், கொல்வதும் கூடாது என்பது இவர்களின் கொள்கையாகும். ஏனினும், இது கொள்கைக்காக எழும் பிராச்சாரமாக இல்லாமல் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் எதிர்ப்பதற்கான ஒரு ஊடகமாகவே பயன்படுத்தப்படுகின்றது.
இந்தியாவிலே RSS போன்ற அமைப்புக்கள் முஸ்லிம்கள் மாடு அறுக்கிறார்கள் என்ற காரணத்தினால் அவர்களைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இறந்த மாட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்த சில தாழ்த்தப்பட்ட மக்களை பசுவின் மீது கொண்ட பக்தியால் இவர்கள் அடித்தே கொலை செய்த நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.
இவ்வளவு தீவிரமாக மாமிசத்திற்காக விலங்குகளை அறுப்பதை எதிர்க்கும் இவர்களது ஆட்சியும் செல்வாக்கும் அதிகம் உள்ள பகுதிதான் உத்திர பிரதேசம். மாமிச உணவை எதிர்க்கும் பாரதீய ஜனதாக் கட்சி தான் உத்திர பிரதேசத்தை 1992 இல் ஆண்டது. இங்கு தான் இந்தியாவிலேயே அதிக அளவில் இறைச்சி விற்பனையாகின்றது என இந்தியா டுடே (1992 ஜுலை 21-5) தகவல் கூறுகின்றது. உத்திர பிரதேசத்திலிருந்து குவைட் நாட்டிற்கு 700 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள இறைச்சி ஏற்றுமதியாகியதாகவும், 1992 இல் இரகசியமாக இறைச்சி விற்பனை செய்த 850 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அதில் 80% வீதமானோர் இந்துக்கள் என்றும் அத்தகவல் கூறுகின்றது.
பசுவதை கூடாது என்று சட்டம் போடுவது! மாமிசம்உண்னும் முஸ்லிம்களை காட்டுமிறாண்டிகள் என்று கொச்சையாகப் பேசுவது! ஆனால், கோடிகோடியாக மாமிசம்விற்றுப் பணம் குவிப்பது! ஏன் இந்த முரண்பட்ட நிலை? இஸ்லாத்தை எதிர்ப்பதற்காகவே இந்த போலிப் பிரச்சாரம் என்பது வெளிப்படையான இரகசியமாகும்.
இலங்கையில் அண்மையில் இந்தப் பிரச்சினையை சிலர் பெரிது படுத்தி வருகின்றனர். இறைச்சிக்காக மாடு அறுப்பதைத் தடுப்பதற்காக சிலர் ஜனநாயக ரீதியில் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளனர். சில அதிகாரிகள் இதற்குத் தமது அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனர். சில அரசியல் சண்டியர்கள் தமது சண்டித்தனத்தைப் பயன்படுத்துகின்றர். இதில் ஒரு சிலர் கொள்கைக்காகப் பேசுபவர்களாக இருக்கலாம். பெரும்பாலானவர்கள் இன ரீதியான பொறாமையாலும் போட்டியாலுமே இதில் குதித்துள்ளனர்.
ஜப்பான், சீனா, பர்மா, கொரியா, தாய்லாந்து போன்ற பௌத்த நாடுகளில் எவ்விதப் பிரச்சினைகளும் இல்லாமல் மாமிச உணவுகள் தாராளமாக உட்கொள்ளப்படுகின்றன. இலங்கையில் இது சர்ச்சையாக்கப்படுவதற்கு பௌத்தம்காரணம் அல்ல. சிங்கள இனவாதமும், முஸ்லிம் எதிர்ப்புணர்வுமே இதற்கு அடிப்படையாகும்.
உலக சனத்தொகையில் 95% சதவீதமானோர் மாமிசம்உண்பவர்களே! மாமிசம் உண்ணக் கூடாது என்ற கருத்துடையோர் வெறும் 5% சதவீதம் மட்டுமே. இந்த 5% சதவீதமான மக்களும் தமது கருத்தின் படிதான் மீத 95% சதவீதமானோரும் செயல்பட வேண்டும். இல்லையென்றால் அவர்களை எதிர்ப்போம் என்று கூறுவது எந்த வகையில் நியாயம் என்று நினைத்துப் பாருங்கள்.
உலகில் முஸ்லிம்கள் மட்டுமன்றி கிறிஸ்தவர்கள், யூதர்கள், பெரும்பாலான இந்து-பௌத்த சகோதரர்கள் மற்றும் மதமே இல்லாத நாஸ்தீகர்கள் என சகல இனத்தவர்களும் மதத்தவர்களும் மாமிசம் உண்னும் போது மாமிசம்உண்ணாத மக்கள் முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து குதறுவது நியாயமா? முஸ்லிம்கள் மீதும், இஸ்லாத்தின் மீதும் கொண்ட போட்டியும், பொறாமையும் தான் இந்த எதிர்ப்புணர்விற்குக் காரணம் என்பதை இது உணர்த்தவில்லையா?
மனிதனைப் படைத்த இறைவன் அவனை மாமிசம் உண்ணும் இயல்பு கொண்டவனாகத்தான் படைத்துள்ளான். ‘புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது’ என்பார்கள். புலி மாமிச உண்ணியாகும். அது புல்லைத் தின்னாது. தின்றாலும் செமிக்காது. அப்படித்தான் அதை இறைவன் படைத்துள்ளான்.
யானை பெரிய மிருகம். அது மாமிசம் உண்ணாது. உண்டாலும் அது அதற்கு ஒத்துக் கொள்ளவோ, சமிபாடடையவே மாட்டாது. ஆனால், மனிதன் கீரை வகைகளையும், காய் கறிகளையும், மீன் மற்றும் மாமிச வகைகளையும் உண்ணலாம். இரண்டும் சமிபாடடையத்தக்க உடல் அமைப்புடன் இறைவன் அவனைப் படைத்துள்ளான். மாமிசம் உண்ணவே கூடாது எனப் பிரச்சாரம் செய்பவர்கள் படைத்த இறைவனைக் குறை கூறப் போகின்றார்களா?
தாவர உண்ணிகள் இலை குழைகளை அசை போட்டு உண்ணத்தக்க பல் அமைப்பைக் கொண்டவை. மாமிச உண்ணிகள் மாமிசத்தை கீறிக் கிழித்து உண்ணத்தக்க வேட்டைப் பல் கொண்டவை. மனிதன் இரண்டு பற்களையும் கொண்டவனாகப் படைக்கப்பட்டுள்ளான். மாமிசம் உண்ணத்தக்க பல் அமைப்புடனும், மாமிசத்தை சீரணிக்கத்தக்க உடல் அமைப்புடனும், மனிதனைப் படைத்த இறைவனை இவர்கள் குறை காண்பார்களா?
உணவுக்காக அறுக்கப்படும் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகள் தினமும் ஆயிரக்கணக்கில் அறுக்கப்பட்டாலும் அருகி அழியாத தன்மையுடையதாக இறைவனால் படைக்கப்பட்டுள்ளன.
உண்ணப்படாத உயிர்களான சிங்கம், புலி, யானை, கரடி, காண்டா மிருகம் போன்ற உயிர்கள் வேட்டையாடி கொல்லப்பட்டால் அப்படியே அருகி அழிந்துவிடும். இவ்வாறு வேட்டையாடப்படும் உயிர்கள் அழிந்து வருவது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வேட்டைகளைத் தடுக்கக்கூடிய சட்டங்கள் அனைத்து நாடுகளிலும் உள்ளன.
இதிலிருந்து எல்லாம் வல்ல இறைவன் மனிதனுக்கு உணவாக அமையத்தக்க விதத்தில் தான் இந்த உயிரினங்களைப் படைத்துள்ளான் என்ற உண்மையைப் புரியலாம்.
இதற்கு மாற்றமாக இந்த உயிரினங்கள் அறுக்கப்படாவிட்டால் அவை அபரிமிதமாகப் பெருகி மனிதனுக்கு இழப்புக்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி உணவின்றியும், நோயின் காரணமாகவும் தானாகவே அழிய ஆரம்பித்துவிடும்.
இலங்கையில் ஒரு நாளைக்கு சுமார் 30,000 மாடுகள் அறுக்கப்படுவதாக வைத்துக் கொள்ளுங்கள். வருடத்திற்கு சுமார் 10,950000 மாடுகள் அறுக்கப்படாமல் விடுபடப் போகின்றன. இது 10 வருடங்கள் தொடர்ந்தால் மாடுகளின் வளர்ச்சியால் மனிதன் பாதையில் பயணிக்க முடியாத நிலை ஏற்படும். புற்பூண்டுகள் அதிகம் உண்ணப்படுவதால் புதிதாக புற்பூண்டுகள் முளைக்காது மழை வீழ்ச்சி பாதிக்கப்படும். இவ்வளவு மாடுகளும் நீர் அருந்தப் போனால் நீர்த்தட்டுப்பாடு உண்டாகும்…. இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை. இந்தியாவில் ஒரு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு ஆடு, மாடுகள் காணிக்ககையாக செலுத்தப்பட்டு வந்தது. அந்த ஊர் மக்கள் முன்வைத்த பிரச்சினை என்னவெனில் ‘இந்த மாடுகளை ஏதாவது செய்ய வேண்டும். பாதையில் போகும் போது கையில் இருக்கும் பைகளைப் பரித்து உணவு தேடுகின்றது. தோட்டத்தில் புகுந்து துவம்சம் செய்கின்றது. காடுகளையும் அழித்து வருகின்றது’ என அவர்கள் முறைப்பாடு நீண்டு செல்கின்றது.
உலகின் துருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோக்கள் உள்ளனர். அவர்கள் மாமிசத்தையே பிரதான உணவாக உண்டு வாழ்க்கை நடாத்துகின்றனர். அவர்களுக்குத் தாவர உணவு கிடையாது. அவர்கள் தாவர உணவு தான் உண்ண வேண்டும். இல்லையென்றால் உண்ணாமல் சாக வேண்டும் என்று கூறப்போகின்றனரா?
எல்லாக் கோவில்களிலும், பௌத்தமத கிரியைகளிலும் மேளம் முக்கியத்துவம் பெறும். மேளம் இல்லாமல் கலாச்சார நிகழ்ச்சிகள் இடம் பெறாது. இந்த மேளத்துக்கான பதனிடப்பட்ட தோல்கள் அறுக்கப்பட்ட மாடுகளிலிருந்து தான் பெறப்படுகின்றன. மாடு அறுக்கக் கூடாது என்ற கொள்கைக்கு இது முரண்பாடாகத் தென்படவில்லையா?
உணவுக்காக மாடு அறுக்கக் கூடாது என்று பிரச்சாரம் செய்யும் இனத்தைச் சேர்ந்தவர்களே உணவுக்காக அறுக்கப்படும் இடங்களுக்கு மாடுகளை விற்பனை செய்து பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர். அறுக்கக் கூடாது என்றால் அறுப்பதற்காக விற்பதும் கூடாது. அறுப்பதற்காக நான் விற்கிறேன். ஆனால், நீ அறுப்பதை நான் எதிர்க்கிறேன் என்பது எவ்வளவு பெரிய முரண்பாடு! காசு கிடைத்தால் கடவுளையே கொன்று விற்கலாமா? அல்லது ஆதாயம் எனக்கென்றால் பழி உனக்கு என்றால் முடியாது என்ற சுயநலமா?
உயிர்களை உணவுக்காகக் கொல்லக் கூடாது என்றால் மாடு மட்டுமன்று மீன், கோழி எல்லாமே உயிர் தானே! இலங்கையின் கடல் வளத்தைப் பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விடுவோமா? கோழிப் பண்ணைகளையெல்லாம் மூடிவிடலாமா? நாட்டின் பொருளாதாரம் எங்கே போய் நிற்கும்?
உணவுக்காக முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் விலங்குகளைக் கொள்கின்றனர். முஸ்லிம்கள் அறுப்பதற்கும், ஏனைய சகோதரர்கள் கொல்வதற்குமிடையில் பலத்த வித்தியாசம் இருக்கிறது. இந்த வேறுபாட்டையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மாற்று சமூகத்தவர்கள் மின்சாரம் பாய்ச்சியோ, தடிகளால் அடித்தோ, துப்பாக்கியால் சுட்டோ விலங்குகளைக் கொல்கின்றனர். இஸ்லாம் இதைத் தடுக்கின்றது. விலங்குகளின் தொண்டைக் குழியில் கூறிய கத்தி வைக்கப்பட்டு விரைவாக மிக விரைவாக அதன் நரம்புகள் அறுக்கப்படும். அதன் மூலம் மூளைக்கும் உடலுக்குமிடையில் உள்ள உறவு துண்டிக்கப்படும். உடலில் உள்ள இரத்தம் முழுவதும் பீறிட்டு வெளியே பாயும். இதனால் அந்த மாமிசம் உண்பதற்கு ஏற்றதாக மாறுகின்றது. அடுத்து நரம்புகள் துண்டிக்கப்படுவதால் அந்த விலங்கு வேதனையை உணர மாட்டாது. இரத்தம் பீறிட்டு ஓடுவதால் அதற்கு வலிப்பு ஏற்படும். வேதனையை உணராமலே அது மிக விரைவில் இறந்து விடும். இது குறித்து செய்யப்பட்ட ஆய்வுகள் இஸ்லாமிய முறைப்படி அறுப்பதால் விலங்குகள் வேதனையை உணர்வதில்லை என்பதை உறுதி செய்கின்றது.
எனவே, மாடு அறுப்பதைத் தடுக்க வேண்டும், இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்பது இலங்கையில் மீண்டும் இனவாதத்தைத் தூண்டும் பிரச்சாரமாகும்.
ஒரு மனிதன் மாமிசம் உண்பதைத் தவிர்ப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. அனுமதிக்கப்பட்ட உணவை விரும்பியவர் உண்ணலாம். விரும்பியவர் தவிர்க்கலாம். இந்த அடிப்படையில் மாமிசம் உண்பதை விரும்பினால் தவிர்க்கவும் உரிமை இருக்கிறது. பௌத்த மதம் அதைத் தடுக்கிறது. என்றால் மாமிசம் உண்ணாதீர்கள் என்று பிரச்சாரம் செய்யும் உரிமை பௌத்தர்களுக்கு உண்டு. மாமிசம் உண்பதைத் தவிர்க்கப் போகிறேன் என்று அதன் மூலம் மக்கள் முடிவு செய்தால் அதுவும் பிரச்சினையில்லை.
புத்த மதம் மாமிசம் உண்ணக் கூடாது என்று கூறுகின்றது. எனவே, பௌத்தர்கள் மாமிசம் உண்ணக் கூடாது என்று கூறினால் அது நியாயம். புத்த மதம் மாமிசம் உண்ணக் கூடாது என்கிறது. அதனால் முஸ்லிம்கள் மாமிசம் உண்ணக் கூடாது என்பது என்ன நியாயம்? நாம் தாம் பௌத்தத்தை மதமாக ஏற்றுக் கொள்ளவில்லையே!
‘எமது மதம் எமக்கு! உங்கள் மதம் உங்களுக்கு!’ என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். எமது மதப்படி நாம் செயல்படுகின்றோம் உங்கள் மதப்படி நீங்கள் செயற்படுங்கள். யாரும் யாருடைய மதத்தையும் அடுத்தவர்கள் மீது திணிக்கக் கூடாது என்பது தானே நியாயம்.
இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்பதற்காக கையெழுத்து வேட்டையில் இறங்கியிருக்கும் மத குருக்களே! உயர் அதிகாரிகளே! இதற்குப் பக்க துணையாக இருக்கும் அரசியல் தலைவர்களே! பௌத்த மதம் மதுபானத்தையும் தடை செய்கின்றதே! இதனால் இலங்கை மக்களில் பலர் தமது வாழ்வையே இழந்து தவிக்கின்றனரே!
மதுபான சாலைகளையும், மதுக் கடைகளையும் மூட வேண்டும் என்று ஏன் நீங்கள் போராட்டம் நடத்தவில்லை?
பௌத்த மதம் ஆபாசத்தைத் தடுக்கின்றது. ஆபாசமான சினிமாக்கள், களியாட்டங்கள், இசைக் கச்சேரிகள், ஆபாச பத்திரிகைகள் இவற்றுக்கு எதிராக ஏன் போராட்டம் நடாத்தவில்லை?
இந்தப் போராட்டத்தில் இறங்கியிருப்பவர்கள் பௌத்தத்திற்காக இந்தப் போராட்டத்தில் இறங்கவில்லை. பௌத்தத்தின் பெயரைப் போலியாகப் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு பௌத்தத்தின் மீது பற்றுக் கிடையாது. இவர்களின் செயற்பாடுகள் கௌதம புத்தரின் போதனைகளுக்கே முரணானது. இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கும் எதிராக மக்கள் உணர்வுகளைத் தூண்டிவிட பௌத்தத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்பதே உண்மையாகும்.
எனவே, பௌத்தத்தை நேசிக்கும் நல்ல பௌத்தர்களும், மாமிசம் உண்ணாத இன நல்லுணர்வை மதிக்கும் பௌத்த சகோதரர்களும் இவர்களின் தீய நோக்கத்திற்குத் துணை போகக் கூடாது என்பதே எமது பணிவான வேண்டுகோலாகும்.
எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

Friday, October 21, 2011

வெட்கக்கேடானது...


 "நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாள்வது வெட்கக்கேடானது" என்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டே கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்தார்.



ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "முஸ்லீம்களை குண்டுவெடிப்புகளுக்குக் காரணகர்த்தாவாக சித்தரிக்க்கும் ஊடகங்களும் காவல்துறையும் அப்போக்கை கைவிட வேண்டும்" என்று கூறினார். தடய அறிவியல் உள்ளிட்ட விஞ்ஞான முறைகளில் நமது நாட்டின் காவல்துறைக்குத் திறமை இல்லாததாலேயே தீவிரவாத வழக்குகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக கூறினார். 




குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே மின்னஞ்சல்கள் அல்லது அலைபேசிகளில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் மூலம் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் குறித்து முடிவுக்கு வருவதை வண்மையாக கண்டித்தார். "உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் கையில் கிடைக்கும் முஸ்லீம்களின் மீது காவல்துறை பொய் வழக்கு போடுகிறது" என்றார். 



"அது போல் எவ்வித ஆதாரமும் இல்லாமல் பரபரப்புக்காக பொய் செய்தி வெளியிடும் ஊடகங்கள் கலந்துரையாடல்கள் போன்ற ஜனநாயக வழிமுறைகளின் மூலமாகவோ அல்லது அபாராதம் மூலமாகவோ, அரசின் விளம்பரங்களைக் கொடுக்காமல் தடுப்பதன் மூலமாகவோ தேவைப்பட்டால் ஊடக உரிமங்களை ரத்து செய்வதன் மூலமாகவோ திருத்தப்பட வேண்டும்" என்றும் மார்க்கண்டே கட்ஜ் குறிப்பிட்டார். 



கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் பெங்களூரு, வாரணாசி, புனே, மும்பை மற்றும் டெல்லி என பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளின் குற்றவாளிகள் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, October 19, 2011

கள்ளக் காதலும்,பெருகும் கொலைகளும்...


கடந்த 2006ம் ஆண்டு ஜூலை மாதம், கேரளாவின் சுற்றுலாத்தலமான மூணாறு, குந்தலா அணைக்கட்டின் அருகே, கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம். யாரென அனைவரும் அதிர்ந்து நிற்க, அருகில், புதுப்பெண்ணான மனைவி வித்யாலட்சுமி. தேனிலவு வந்த இடத்தில், யாரோ அனந்தகிருஷ்ணனை கொன்றுவிட்டு, நகைகளை பறித்துச் சென்றதாக அவர் கூற, போலீஸ் விசாரணையும், மொபைல் போன் குறுந்தகவல்களும் உண்மையை வெளிக்கொண்டுவந்தன.

அடுத்தடுத்து அதிர்ச்சித் திருப்பங்கள்... திருமணமான ஏழே நாளில், அனந்தகிருஷ்ணன் கட்டிய மஞ்சள் கயிற்றின் ஈரம் கூட காயாத நிலையில், கள்ளக்காதலன் ஆனந்துடன் சேர்ந்து, வித்யாவே கணவனை கொன்றது அம்பலமானது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை, அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறிக்கொண்டிருந்த இதுபோன்ற விஷயங்கள், தற்போது, தினசரி செய்தியாக மாறிவிட்டன. கணவனுக்கு தெரியாமல் மனைவி, மனைவிக்கு தெரியாமல் கணவன், மற்றொருவருடன் உறவு வைத்திருப்பது, சாதாரணமாகிவிட்டது.

334 கொலைகள் : மேற்கத்திய மோகமும், தகவல் தொழில்நுட்பக் கலாசாரமும் தமிழகத்தில் ஊடுருவத் துவங்கியபோதே, நாகரிகம் என்பதற்கான அடிப்படை விதிகளும் மாறிவிட்டன. இந்த வரிசையில், கள்ளக்காதலும் புதிய கலாசாரமாகிவிட்டது. ஆண், பெண் நட்பில், உடல் ரீதியான ஈர்ப்பு, பிரதான இடம் பிடித்துவிட்டது.
வீட்டில் கணவன், மனைவியின் தேவைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பூர்த்தியாகாதபோது புதிய துணையைத் தேடுகின்றனர். இந்த விவகாரம் பழைய துணைக்கு தெரியாதவரை பிரச்னை ஏற்படுவதில்லை. தெரிந்துவிட்டால், ஆண், பெண் யாராக இருந்தாலும், கண்டிப்பவரை, "காலி செய்யும்' அளவிற்கு துணிந்து விடுகின்றனர். கடந்தாண்டு மட்டும், 334 கொலைகள் நடந்துள்ளன.

கடந்த 2008, 2009, 2010 ஆகிய மூன்று ஆண்டுகளில் 143 ஆண்களும், 120 பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆண்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், அவர்களது மனைவிமார்கள் பெரும்பாலும் சம்பந்தப்பட்டுள்ளனர்.
காதலில் பல வகைகள் இருப்பதைப் போல், கள்ளக்காதலிலும் மூன்று, நான்கு பிரதான வகைகள் உள்ளன.

கவனத்தில் வராத மனைவியர் : முதல் வகைக்கு பலியாகுபவர்கள், பணமே பிரதானமாகக் கொண்ட ஆண்கள். இவர்களுக்கு, மனைவியிடம் காதலைக் காட்டுவதற்கு கூட நேரம் இருப்பதில்லை. இத்தகைய கணவன்மார்களின் மனைவிகளுக்கு, பக்கத்து வீட்டுக்காரனின், "ஹலோ! சவுக்கியமா?' என்ற குசல விசாரிப்பு கூட, மிகப் பெரிய குதூகலத்தைக் கொடுத்துவிடுகிறது. குசல விசாரிப்பு, "குஜால்' வரை சென்றுவிடுகிறது.

இத்தகைய பெண்களுக்கு, தன்னோடு பழகும் ஆணின் அழகோ, அறிவோ ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை. கணவனை விட சுமாரான அழகு, அந்தஸ்து என இருந்தாலும், தன் மீது அக்கறை காட்டுகிறான் என்ற எண்ணமே, அவர்கள் பக்கம் இவர்களை விழ வைத்துவிடுகிறது. இது கணவன்மார்களுக்கு தெரியும் போது, முதலில் கண்டிப்பு, அடுத்த கட்டம், கொலை. இதில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றவர்கள் ஏராளம் என்கிறது போலீஸ் தரப்பு.

"மாஜி' காதல் : அடுத்த வகை, திருமணமான பின், கணவனது நடவடிக்கைகள் பிடிக்காமல், முன்னாள் காதலனுடன் கள்ளக்காதல் கொள்வது. பெற்றோர் விருப்பம், நிர்பந்தத்திற்காக காதலித்தவனை விட்டு வேறு ஒருவரை கரம் பிடிக்கும் பெண்கள், சில நேரங்களில் முன்னாள் காதலனை பார்க்கும் போது, மீண்டும் உள்ளிருக்கும் காதல் துளிர்க்கிறது. காதலனோ, பழைய காதலியின் பலவீனத்தை பயன்படுத்திக் கொள்ள, கள்ளத்தனமாக காதல் வளர்கிறது. இதில், பெண்கள் பெரும்பாலும் பாதுகாப்பாக உணர்வதாக, மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது போன்ற சம்பவங்களிலும், சில நேரம், கட்டுப்படுத்துபவர் உயிர், "கட்டுப்பட்டுப்' போகிறது. இதற்கு, மூணாறு ஹனிமூன் கொலை ஒரு எடுத்துக்காட்டு. இது தவிர, சென்னையில், பள்ளி ஆசிரியை ஒருவர் முன்னாள் காதலனால், கொலை செய்யப்பட்ட சம்பவமும், கள்ளக்காதல் கொலை பட்டியலை உயர்த்தியது.

ஐ.டி., காதல் : ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள், பெரும்பாலும், வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்றனர். கணவன், மனைவியை தவிர மற்ற உறவினர்களிடம் இருந்து பிரிந்திருக்கும் நிலையில், வேலை பளுவும் கூடும் போது, குடும்ப வாழ்க்கை பின்தங்குகிறது. இந்த நிறுவனங்களில் ஆண்கள், பெண்கள் சகஜமாக பழகுவதால், பல தொடர்புகள் ஏற்படுகின்றன. மேலும், ஐ.டி., நிறுவனங்களை தவிர, பல வீடுகளில் கணினி வசதி உள்ளதால், "சாட்டிங்' கலாசாரம் மூலமும் கள்ளக்காதல் விவகாரங்கள் பெருகியுள்ளன. பல நாட்கள் சாட்டிங் மூலம் பழகும் சிலர், நேரில் பார்க்கும் போது பிடித்துப் போனால், காதலை வளர்த்துக் கொள்கின்றனர். இதில், சிலர் "வீடியோ சாட்டிங்' மூலம், பாலியல் செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

ஜாலிக்காக கள்ளக்காதல் : இதைத் தவிர எதைப் பற்றியும் கவலைப்படாமல், விளையாட்டுக்காக அல்லது செக்ஸ் தேவைக்காக மட்டும் சிலருடன் உறவு வைத்திருப்பதை, "பேஷனாக' கருதுபவர்களும் உண்டு. திருமணமான ஆணும், பெண்ணும் தங்களுக்கு தெரிந்தவர்களுடன் இந்த வகையில் உறவு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

"டிவி' தொடர்களும் ஒரு காரணம் : கள்ளக்காதல் சம்பவங்கள் தொடர்பாக, மனநல நிபுணர் நம்பி கூறியதாவது:
கிராமங்களில் அரசல் புரசலான விஷயங்கள், நகர்ப்புறத்தின் வளர்ச்சியால் தற்போது அதிகரித்துள்ளது. நகரமயமாதல், தொழில் மயமாதல் போன்ற காரணங்களால், தொடர்புக்கான வசதிகள் அதிகரித்துள்ளன. நகர்ப்புறத்தில், அடுத்த வீட்டில் யார் இருக்கின்றனர். அந்த வீட்டிற்கு யார் வந்து செல்கின்றனர் என்பதே பலருக்கு தெரியாது. இதனால், ஆணோ, பெண்ணோ தவறு செய்வதற்கு வாய்ப்புகள் அதிகரித்து விட்டன.

தாம்பத்ய வாழ்க்கையில் ஏமாற்றம் அதிகரிக்கும் போதும், கணவன், மனைவிக்கிடையில் ஒற்றுமையின்மை அதிகரிக்கும் போதும், பிறரது தொடர்புக்கான வாய்ப்புகள் அதிகரித்துவிடுகிறது. ஏமாற்றம், விரக்தியில், தேடுதல் உணர்வும் அதிகரிக்கிறது. இதை, ஊடகங்களும் அதிகளவில் ஊக்குவிக்கின்றன. "டிவி' சீரியல்கள் இது போன்ற விஷயங்களை நியாயப்படுத்துவதுடன், இப்படியெல்லாம் செய்யலாம் என்று தூண்டுகின்றன. கணவன்மார்களிடம் இருக்கும் குடிப்பழக்கம், பெண்களிடம் இருக்கும் அறியாமை ஆகியவை, இருதரப்பையும் அரவணைப்பை தேடச் செய்கிறது.

சிங்கப்பூரில், தற்கொலை சம்பவங்கள் அதிகரித்த போது, தற்கொலை செய்திகள் வெளியிடக் கூடாது என்று ஊடகங்களுக்கு மூன்று மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தடைக்குப் பின், தற்கொலை சம்பவங்களே குறைந்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டாக்டர்கள் சிலரும், இது போன்ற கள்ளத்தொடர்பு விஷயங்களை தவறானதில்லை என்று நியாயப்படுத்துகின்றனர். இதை சட்ட விரோதமான உறவு என்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இவ்வாறு நம்பி கூறினார்.

ஒழுக்கம் தான் ஒரே வழி? : இந்த சம்பவங்களில் நடவடிக்கை குறித்து, பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: குடும்ப நல மையங்களில் முதலில், இது தவறு என்று கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. மீறி தவறு செய்யும் போதும், புகார் வரும் போதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த விஷயத்தில், தனி மனித ஒழுக்கம் என்பது முக்கியம். அனைத்து மதங்களிலும், இந்த விஷயம் தவறு என்பது உணர்த்தப்படுகிறது. அதற்கான தண்டனையும் அளிக்கப்படுகிறது. ஆனாலும், யாரும் அவற்றை மதிப்பதில்லை.

இந்த விஷயங்களுக்கு ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் பெரிதும் உதவுகின்றன. சமூகத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடும் என்று பயப்படுபவர்கள் மட்டுமே, இந்த விஷயத்தில் சற்று தள்ளி நிற்கின்றனர். கலாசார சீரழிவுக்கு, இந்த விஷயம் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் கூறினார்.

மூன்றாண்டுகளில் அதிகளவில் கள்ளக்காதல் கொலை நடந்த நகரங்கள்:

1. தர்மபுரி -38
2.கிருஷ்ணகிரி-27
3.நாகப்பட்டினம்-23
4.வேலூர்-20
5.தேனி-14. இந்த ஐந்து பகுதிகளும் பொருளாதாரம், கல்வியில் பின்தங்கியவை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய சம்பவங்கள்:

* 2006 ஜூன்: தேனிலவுக்காக மூணாறு சென்ற போது, மனைவி வித்யாலட்சுமியின் ஏற்பாட்டின்படி, கணவன் அனந்தகிருஷ்ணன் கொல்லப்பட்டது.

* 2010 ஜூலை: தண்டையார்பேட்டையில், பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்த நடுநிலைப் பள்ளி ஆசிரியை, முன்னாள் காதலனால் கொல்லப்பட்டது.

* 2010 ஜூலை: தன் வயிற்றில் வளர்ந்த கருவை கலைக்கச் செய்ததற்காக, கள்ளக்காதலன் ஜெயக்குமாரின் மகன் ஆதித்யாவை, காதலி பூவரசி கொன்று, சூட்கேசில் வீசியது.

*2011- சார்லஸ் என்பவர், நண்பனின் மனைவியுடன் கொண்டிருந்த கள்ளத் தொடர்பு காரணமாக கொலையுண்டது.

* 2011 பிப்ரவரி- சிந்தாதிரிப்பேட்டையில் சிரஞ்சீவி என்பவர் மனைவி, கணவனின் கள்ளத்தொடர்பை கண்டிப்பதற்காக தீக்குளித்தது.

* 2011 செப்டம்பர்- சூளைமேட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கணவன் மற்றும் குழந்தைகளை விட்டு, காதலனுடன் சென்று, மூன்று மாதம் கழித்து திரும்பி வந்தது. 


தினமலர்


நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து; அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக; மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.


“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.


நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.
 திருக்குர்ஆன்