Tuesday, August 24, 2010

பெஞ்சமினுக்கு உணவு

சின்னஞ்சிறு கதைதான்.ஆனால் அது கொண்டுள்ள கருத்து ஆழமானது.படித்தவுடன் - பிடித்து விட்டது.அதை நீங்களும் ரசிக்க அதை அப்படியே தருகிறேன் நன்றியோடு!

வர்கள் சாமுவேல் மற்றும் பெஞ்சமின். நெடுந்தொலைவு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இரு யூதர்கள். ஒரு பாலைவனத்தைக் கடந்து செல்லும்போது ஏற்பட்ட கடும் மணற்புயலால் தம் திசையைத் தொலைத்து விட்டனர்.


எங்கு அலைந்து தேடியும் செல்ல வேண்டிய வழி புலப்பட வில்லை. கையில் கொண்டு வந்திருந்த உணவும் நீரும் தீர்ந்து விட்டதால் பசியின் பிடியில் சிக்கித் தவித்தனர்.

கிட்டத்தட்ட சுய நினைவை இழக்கும் தருவாயில், விடிகாலை நேரத்தில் ஒரு குடியிருப்புப் பகுதி கண்ணில் பட்டது கண்டு மகிழ்ச்சியடைந்தனர் இருவரும். தொழுகைக்கான பாங்கு சப்தம் அந்த இடத்திலிருந்து கேட்க, நெருங்கிச் சென்று பார்த்தபோது அது ஒரு பள்ளிவாசல் என்பதைக் கண்டனர்.

ஏதோ உணர்ந்தவனாக சாமுவேல் கூறினான். "பெஞ்சமின்.. இதோ பார். இது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்பது நிச்சயம். நாம் முஸ்லிம்கள் என்று நடித்தால் மட்டுமே உணவு கிடைக்கும். எனவே, என் பெயரை முஹம்மத் என்று சொல்லப்போகிறேன்."

பெஞ்சமின் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. "என் பெயர் பெஞ்சமின் தான். பொய் சொல்லி அவர்களை ஏமாற்றி உண்ண விரும்பவில்லை!"

களைத்துத் தளர்ந்து போய் பள்ளிவாசலுக்குள் புகுந்த இருவரையும் கனிவோடு வரவேற்ற இமாம், அவர்களிருவரின் பெயர், விபரங்களை விசாரித்தார்.

"நான் முஹம்மத்" என்றான் சாமுவேல்

"நான் பெஞ்சமின், நானொரு யூதன்" என்றான் பெஞ்சமின்

அவர்களின் உருவத்தை வைத்தே பசியில் இருப்பதை அறிந்து கொண்ட இமாம், பள்ளிவாசலின் உட்புறம் திரும்பி உதவியாளர்களை அழைத்தார்.

"தயவு செய்து உடனடியாக பெஞ்சமினுக்கு உணவு கொண்டு வாருங்கள்"

அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்திருந்த சாமுவேலிடம் இமாம் கூறினார். "முஹம்மத், இது ரமளான் மாதம் என்பதை நீங்கள் அறிவீர்கள்"

- அபூ ஸாலிஹா

3 comments:

ஹுஸைனம்மா said...

நல்ல கதை. பகிர்வுக்கு நன்றி!!

ராஜவம்சம் said...

பொய் சில நேரம் அல்ல பலநேரம் காலை வாரும்.

அபூ ஸாலிஹா said...

தற்போது தான் இந்த மீள்பதிவைக் காண நேரிட்டது. தங்களுக்கும் இதனைப் பதித்திருந்த சத்தியமார்க்கம்.காம் தளத்தினருக்கும் நன்றி.