இனித் தொடராக வரக்கூடிய குர்ஆனின் வசனங்கள் யாவும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டவைகளே. அரபி மொழியில் இருக்கும் வசனங்கள் தான் குர்ஆன் எனப்படும். அதில் தான் நாம் குர்ஆனின் முழுமையான அர்த்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் வரும் அலக்عـلـقة) ) எனும் அரபிச் சொல்லுக்கு, அதன் அகராதிப் பொருள்படி,
1) அட்டைப் பூச்சி.
2) தொடுக்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள்
3) இரத்தக் கட்டி இந்த அலக் (عـلـقة) நிலையிலுள்ள கருவை அட்டைப் பூச்சி (Leech)- (* The Developing Human, Moore and Persaud 5th ed., P.08.)
மேலும், இந்த அலக் (عـلـقة) என்ற நிலையில் கருவானது தாயின் கருவறையில் ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையில் தாயின் இரத்தத்தை உறிஞ்சி தன் வளர்நிலைகளுக்கு சக்தியைப் பெற்றுக் கொள்கின்றது. இந்த செயல்பாடு குளத்தில் காணப்படும் அட்டைப் பூச்சியானது பிற பிராணி அல்லது விலங்கினங்களின் தோலின் மேற்பரப்பில் ஒட்டிக் கொண்டு, அந்த பிராணியின் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்வதை ஒத்து இருக்கின்றது (*Human Development as Described in the Qur’an and Sunnah, Moore and Others. P.36.) அலக் (عـلـقة) எனும் அரபிப் பதத்திற்கான இரண்டாவது பொருளானது தொட்டுக் கொண்டு அல்லது தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் எனப்படும். தாயின் கர்ப்ப அறையில், கருவின் முதல் ஆரம்ப வளர் நிலையில் எவ்வாறு கரு அமைந்திருக்கும் என்பதையும், அது எவ்வாறு கர்ப்ப அறையில் தொடுத்துக் கொண்டிருக்கின்றது மேலும் அலக் (عـلـقة) எனும் பதத்திற்கான மூன்றாவது பொருளாக இரத்தக் கட்டி எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. கருவின் ஆரம்ப வளர்நிலையில் அதை நோக்குவோமானால், அதன் புறத் தோற்றமும் அதை மூடி இருக்கும் பை போன்ற சவ்வுத் தோற்றமும், உறைந்த நிலையில் உள்ள இரத்தக் கட்டி போன்ற அமைப்புடன் இருப்பதை காண முடியும். கருவின் ஆரம்ப நிலையில் அதிகப்படியான இரத்த ஓட்டம் கருவின் மீது பாய்ச்சப்படுவதால், அதன் புறத் தோற்றம் உறைந்த நிலையிலுள்ள இரத்தக் கட்டி போன்று தோற்றமளிக்கின்றது. (Human Development as Described in the Qur’an and sunnah, Moore and Others., Page.37-38).
மேலும் கருவின் வளர்நிலையில் அதனது மூன்றாவது வாரம் வரை இரத்த ஓட்டச் சுழற்சி செயல்படாதிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.(The Developing Human, Moore and Persuad, 5th ed., P.65).
மேற்கண்ட அலக் (عـلـقة) எனும் அரபிப்பதத்திற்கான மூன்று அர்த்தங்களுமே அது தரும் பொருள்களுக்கான விளக்கத்திற்கு எந்த வித மாறுபாடும் இல்லாமல் ஒத்திருப்பதை நாம் காண முடிகின்றது.
கருவின் அடுத்த வளர்நிலையாக முல்கதன் (مضغة) எனும் அரபிப்பதத்தைக் குர்ஆன் குறிப்பிடுகின்றது. முல்கதன்(مضغة) எனும் சொல்லுக்கு அரபி அகராதியானது பற்களால் மென்று துப்பிய பொருள் (Chewed-like substance) சூவிங்கம் மிட்டாயைக் கடித்து மென்று துப்பும் போது, அதில் பற்களின் வரிகள் பட்டு எவ்வாறு தோற்றம் தருமோ அது போலத் தோற்றத்தை, முத்கா நிலையில் உள்ள கரு தோற்றம் தரும். இது கரு வளர்நிலையில் 28-வது நாளில் தெளிவாகக் காணப்படும். மேலும் பற்களின் வரிகள் போன்ற அமைப்பையும் கருவின் முதுகுப் புறத்தில் தெளிவாகக் காணலாம். The Developing Human, Moore and Persuad, 5th ed., P.8. அறிவியல் என்ற துறை இருப்பதையே அறியாத அந்தக் காலத்தில், இன்று இருப்பது போல எக்ஸ்-ரே கருவிகள், CT ஸ்கேன் கருவிகள், நுண் பெருக்கிகள் (Microscope), போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளே இல்லாத, அவற்றை எண்ணிக் கூடப் பார்க்க இயலாத 1400 ஆண்டுகளுக்கு முன் உள்ள சமூகத்தில் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு இணையான அறிவியல் கூற்றுக்கு முற்றும் மாற்றமில்லாத வகையில் எவ்வாறு இவ்வளவு தெளிவான முறையில் கரு வளர்ச்சியைப் பற்றிக் கூற முடிந்தது!!!
கி.பி. 1677-ல் தான் ஆணின் விந்தில் உள்ள ஸ்பெர்மெடோஸோவா ((Spermatazoa) எனும் விந்தணுச் செல்லை உருப்பெருக்கி (Miroscope) மூலம் ஹாம் மற்றும் லீயுவென்ஹேக் எனும் அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர். இவர்கள் வாழ்ந்த அந்தக் காலம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தை விட 1000 ஆண்டுகள் பிந்தைய காலமாகும் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. இவர்கள் விந்தணுவைக் குறித்து ஆய்வு செய்த போது, விந்தணுவில் இருக்கும் மனிதனின் மாதிரித் தோற்றம் தான், பெண்ணின் கருப்பையை அடைந்து, வளர்கிறது எனும் (தவறான) கொள்கையை அன்றைய மக்கள் கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. The Developing Human, Moore and Persuad, 5th ed., P.௯
உடற்கூறு இயல் (Anatomy), கருவியல் (Embryology) ஆகிய மருத்துவத் துறையில் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியும் இவற்றில் முனைவர் (P.hd.) பட்டங்களும் பெற்றுள்ள டாக்டர் எமிரிடஸ் கீத் L. மூர் என்பவர் 'மனிதனின் வளர்நிலைகள்' (The Developing Human) எனும் ஆய்வு நூலை எழுதி உள்ளார்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் 8 வெவ்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் எழுதிய இந்த அறிவியல் பூர்வமான ஆய்வானது, தனிப்பட்ட ஒருவரால் ஆய்வு செய்து எழுதப்பட்ட சிறந்த நூலாக, அமெரிக்காவில் உள்ள இதற்கான சிறப்பு ஆய்வுக் குழுவில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டாக்டர். கீத் மூர் அவர்கள் கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள டொராண்டோ பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும், மருத்துவத் துறைப்பிரிவில் அடிப்படை அறிவியல் (Basic Science) பிரிவில் உதவித் தலைவராகவும், உடற்கூறு இயல் (Anatomy) துறையில் 8 ஆண்டுகள் சேர்மனாகவும் பணிபுரிந்துள்ளார். 1984-ல் கனடாவின் உடற்கூறு இயல் துறை அசோஸியேஸனின் சிறப்பு விருதான J.C.B.விருதை, டாக்டர். கீத் மூர் அவர்களின் உடற்கூறு இயல் ஆய்வுக்கான சிறப்பு விருதாக வழங்கி கவுரவிதிதுள்ளது. உலக அளவில் பல்வேறு அஸோஸியேஸன்களையும் குறிப்பாக அமெரிக்க மற்றும் கனடாவின் உடற்கூறு இயல் மற்றும் பல்வேறு ஆய்வுப் பிரிவுக் கவுன்சில்களையும் வழி நடத்திச் சென்ற பெருமையும் இவருக்கு உண்டு.
1981-ல் சௌதி அரேபியாவின் தம்மாம் (Dammam) நகரில் நடைபெற்ற 7-வது மருத்தவ கருத்தரங்கில் டாக்டர்.கீத் மூர் அவர்கள் கலந்து கொண்டு பேசும் பொழுது, மனிதனுடைய கருவின் வளர்நிலைகளைப் பற்றி குர்ஆன் கொண்டுள்ள கருத்துக்களை ஆய்வு செய்து உதவுவதில் நான் பெருமைப்படுகின்றேன் என்றார்.
மேலும் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த அறிவியல் கருத்துக்கள் கொண்ட வசனங்களை கடவுளிடம் இருந்து தான் முஹம்மது அவர்கள் பெற்றிருக்க முடியும். ஏனெனில், அவர்கள் வாழ்ந்து, மறைந்து பன்னெடுங்காலம் வரையும் இதற்கான அறிவும் ஆய்வும் நடைபெறவில்லை. மாறாக, மிக நீண்ட காலத்திற்குப் பின்பே இந்த ஆய்வுகள் யாவும் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆராய்ச்சிகளின் மூலமாக முஹம்மது அவர்கள் இறைவனின் திருத்தூதர் தான் என்பதை உண்மைப்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மேற்கண்ட ஆய்வுகளின் மூலம் குர்ஆனானது இறைவனின் வேதம் தான் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? எனக் கேட்ட பொழுது இதில் எனக்கு எந்த சிரமமும்ல்லை எனப் பதில் கூறினார்.
மேலும் டாக்டர். கீத் மூர் அவர்கள் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் பொழுது, மனித கரு வளர்ச்சியானது பல தொகுதிகளைக் கொண்ட மிகவும் சிக்கலான, இடைவிடாத தொடர்ச்சியான பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வளர்நிலைகளைக் கொண்டது. இந்த வளர்நிலைத் தொடர் மாற்றங்களை குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் மணிமொழி (ஹதீஸ்) களைப் பயன்படுத்தி தனித் தனிப் பிரிவுகளாக அல்லது நிலைகளாக பிரித்தறிவதற்கான புதிய முறைகளை ஏற்படுத்த முடிந்துள்ளது. (இது நவீன விஞ்ஞானத்தற்கு குர்ஆன் வழங்கியுள்ள பேருதவியாகும் - ஆசிரியர்) இந்த புதிய முறையானது இலகுவானதாகவும், விரிவானதாகவும், இன்றைய அறிவியல் கொள்கைகளுக்கு ஏற்புடையதாகவும் அமைந்துள்ளது. 7-ஆம் நூற்றாண்டின் போது வாழ்ந்த அண்ணலார் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவன் வழங்கிய குர்ஆனையும் அவர்களது போதனை (ஹதீஸ்) களையும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியதன் விளைவாக, மனிதனின் கருவளர்ச்சியின் நிலைகளைப் பற்றிய அறிவை இன்றைய நவீன அறிவியல் உலகத்திற்கு தெளிவுபடுத்த முடிந்துள்ளது என்பது மிகவும் ஆச்சரியமானதே!!! என்று குறிப்பிட்டுப் பேசினார்.
மேலும் அவர் பேசும் போது: கரு வளர்ச்சியின் நிலைகளைப் பற்றி கோழி முட்டையில் தம் ஆய்வை நிகழ்த்தி, இன்றுள்ள அறிவியல் உலகிற்கு கரு வளர்ச்சி பற்றிய முதன் முதல் அறிவை வழங்கியவர் அரிஸ்டாட்டில் என்ற அறிவியலாளர் தான். ஆனால் அவர் கூட குர்ஆன் கூறிய அளவிற்கு கருவின் பல வளர்நிலைகளைப் பற்றி குறிப்பிடவில்லை. எனக்குத் தெரிந்த வரை, இந்த 20-ம் நூற்றாண்டில் தான் மனிதனின் கருவின் வளர்நிலைகளைப் பற்றிய அறிவியல் அறிவை சிறிதளவே விஞ்ஞானிகள் பெற்றிருந்தனர். இதன் மூலம் குர்ஆனில் கூறப்பட்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் (குர்ஆனிய வசனங்கள்) யாவும், அது 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதிலிருந்து, திருமறைக் குர்ஆன் கொண்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் யாவும் மனிதனின் அறிவு சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளாக இருக்க முடியாது என்பதும் தெளிவாகிறது. மேலும், திருமறைக் குர்ஆனானது இறைவன் அவனது திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய வேதம் தான் என்ற ஒரே இறுதி முடிவுக்குத் தான் நம்மால் வர இயலுகின்றது. ஏனெனில், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத, எந்த அறிவியல் பயிற்சியும் பெற்றிராத முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இன்றைய அறிவியலுக்கு முரண்படாத கருத்துக்களை பெற்றிருந்திருப்பார்கள் என்பதை நம்மால் கூற இயலாது.