அஸ்ஸலாமு அலைக்கும் அருமைச்சகோதர சகோதரிகளே! இனிய ரமலானை களிப்புடன் கழித்துக்கொண்டிருக்கும் நம் அனைவரின் மீதும்,மற்றும் இவ்வுலக மக்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
இந்த இனிய ரமலானில்,நோன்பு குறித்த எனது அனுபவங்களையும்,எனது ஊர் பழக்கங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பாக கொள்கிறேன்.இது என்னை அன்புடன் தொடர்பதிவுக்கு அழைத்து,நான் எழுதாததால்,உரிமையுடன் கோபித்துக்கொண்ட எனதருமை சகோதரியையும் திருப்திபடுத்துமாயிருக்கும்..இன்ஷா அல்லாஹ்.
முதலில் ஊர்.அடியேன் ”இராம்நாட்” அல்ல,இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் எனும் ஊரை சொந்த ஊராகக் கொண்டவன்.முஸ்லிம்கள் அதிகம்.அதே அளவு ஹிந்து சகோதரர்களும் இருக்கிறார்கள்..
எங்க ஊர் நான்கு பள்ளிகளை தன்னகத்தே கொண்டது..ஊர் பெரிய பள்ளிவாசல்,எனக்கு தெரிந்து சுற்றுவட்டாரத்தில் இத்தனை பெரிய இரட்டை மனரா(Tower??) உள்ள பள்ளி இதுவாகத்தான் இருக்கும்.நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னே கட்டப்பட்டது.அடுத்து ஊரணிப்பள்ளி,இது ஊரில் உள்ள ஊரணிக்கரையோரம் இருப்பதால் அதுவே பெயர்காரணம் ஆனது.அடுத்தது கீழப்பள்ளி(எங்க ஜமாத்),இது ஊரின் கிழக்கு திசையில் இருப்பதால் இதுவும் காரணப்பெயர் தான்.அடுத்தது வடக்குப்பள்ளி.ஸேம்.வடக்கு திசையில் இருப்பதால் வந்த பெயர் அது..
அடுத்தது நோன்பு.நோன்பு என்றாலே முதலில் நியாபகம் வருவது நோன்பு கஞ்சிதான்..அது எங்க ஊரில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு டேஸ்ட்.பெரிய பள்ளி கஞ்சி கொஞ்சம் காரம் ஜாஸ்தியா இருக்கும்.ஊரணிப்பள்ளி கஞ்சி எனக்கு ரொம்ப பிடித்தது.எங்க காலத்தில் மைதுவா என்ற பெரியவர்தான் காச்சுவார். கீழப்பள்ளி கஞ்சியும் அருமைதான்.இங்குதான் அதிகம் நோன்பு திறந்தது.
பெரியபள்ளி மனராவில் சுற்றிலும் கலர் பல்புகள் எப்போதும் பொருத்தி இருக்கும்.விஷேச நாட்களில்,குறிப்பாக பெருநாள்,தலைநோன்பு, இவற்றுக்கெல்லாம் அதை எரியவிடுவார்கள். நான் சிறுவயதில் நோன்புக்கு பிறை பார்ப்பதை விட அந்த லைட் போட்டாச்சான்னுதான் பார்ப்பேன்..பிறை பாத்துட்டா லைட் போட்ருவாக...
லைட் எரிஞ்சுட்டாலே,ரோட்ல இருந்து ஆட்டம் போட்டுகிட்டே வீட்டுக்கு வந்து,அம்மா நோன்பு வந்துடுச்சுன்னு சொல்ரது.
நோன்பு காலமெல்லாம் ஒரே சந்தோஷம் தான்.என்னவொ தெரியாது..ஊரும் ஜகஜோதியா இருக்கும்,நோன்பு பெருநாளுக்கு பிரத்தியேகமா ஊர்வரும் மக்கள்,இன்னும் ஊர் மக்கள் கூட்டம் கூடினமாதிரி இருக்கும்.
ஸ்கூல் உட்டு வந்தவொடன (d)டேப்(அதாவது தூக்குவாளி,எங்க ஊர்ல இதுக்கு இப்டிதா பேரு..ஏ எதுக்குனெல்லா தெரியாது.) ரெடியா கழுவி இருக்கும்.எடுத்துக்கிட்டு அஸர்(மாலை தொழுகை) தொழுக போய்ட்டு.வரும்போது வீட்டுக்கு கஞ்சி வாங்கிட்டு வர்ரது.அப்ரம் கொஞ்சம் வேலை சஹர்(முன்இரவு நோன்பு சாப்பாடு) ஏற்பாட்டுக்கு..நோன்பில் பிரத்தியேகமாக சாயங்காலம் ஃப்ரஷ்(புதியJ) மீன் வரும்..அப்ரம் நோன்பு திறக்க பஜ்ஜி (a banana slice, coated with flour, and immediately jumps in to hot oil, then fully fried, is called Bajji ;), வடை,...அப்ரம் குளியல்..இது மத்த ஊர்ல எப்டின்னு தெரியல..பட் பசங்க எங்க ஊர்ல சாயங்கால குளியல்தான்..அதும் ஆண்களுக்கு குளியல் எப்போமே பள்ளிலதான்.. இல்ல ஊரணில...வீட்டுக்குளியல் கொஞ்சம் ரேர்தான்..சோ எல்ல ஃப்ரண்ட்ஸும் சொல்லிவச்சு ஒன்னா போய் ஜாலியா குளிச்சுட்டு வந்துடுவோம்..
பின் மஃரிப்க்கு ஒரு அரைமணி நேரம் முன்னதாக நோன்பு திறக்க கெலம்பீர்ரது..நான் நோன்பு திறந்த அனுபவத்த ஊர் வழக்கப்படி மூனு காலகட்டமா பிரிக்கலாம்.
அதாவது.முதல் காலகட்டம் சிறுவயது.அப்போல்லாம் பள்ளிக்கு நோன்பு திறக்கன்னு சொல்லி கெலம்பும் போது அப்போல்லா எனாமல் பாத்திரம் ஃபேமஸ்,ஸோ ஒரு எனாமல் ஸ்பூன் நல்ல டிஸைன்ல எடுத்துக்கிட்டு.பேப்பர்ல பேரீச்சம்பழம், கொஞ்சம் அதே (d)டேப். மினி ஸைஸ்’ல சர்பத் கரைத்து அம்மா தருவாக...சில நாள் அதும் தரமாட்டாக..because me return வரும்போது டேப் மிஸ் ஆயிடும்..ஸோ,...போ.. பொயி நோன்பு தொரந்துட்டு வந்து இங்க எல்லா சாப்டுக்கோன்னு அனுப்பிருவாக..ஸ்பூன்ல கொஞ்சம் ஊருகாய் வேர சைட் டிஷ்...இன்னும் பொம்புள புள்ளைகள்லா,கிண்ணத்துல மீன் ஆனம்(குழம்பு) சுண்டவைத்து பேஸ்ட் மாதிரி ஆக்கி கொண்டு வருவாக..நாம கௌரவ கொரச்சல் காரணமா அதையெல்லா எடுக்கிறதில்ல.பட் பள்ளிக்குள்ள போயி கொஞ்சம் வாங்கிக்கிறது..
இப்போ பள்ளிக்குள்ள போனவொடன,கைல உள்ளதைலா ஒரு எடத்துல வைச்சுட்டு கொஞ்சநேரம் விளையாடுரது...கஞ்சி சட்டிக்கிட்ட போயிட்டா,அங்க இருந்து ஒரு சத்தம் வரும்..காரணம் நெருப்பு சரியா அணைக்காம இருக்கும்..ஸோ,குளிக்கிற ஏரியாவுக்கு போய் ஆட்டம் போட்ரது..அப்ரம் ஆள் எல்லா வர ஆரம்புச்ச ஒடன ஒரு லைன் ஃபாமாகும்.. அதாவது கலக்கம்புல (ஓட்டு போடுர க்யூ மாதிர்) ஆண்கள் பெண்கள்,அதாவது நாங்கதா நண்டு நசுக்கெல்லா அதுலதா போய் நிக்கனும்..ஒன்வே’தா.இப்டி போகும்போதுதா,ஒருத்தர் ஒருத்தர் பிரியமா விசாரிச்சுப்போம்,ஸைட் டிஷ்க்காக..
அங்க போன அண்ணன்மார்கள் சின்ன பசங்களுக்கு தட்டுலதான் கஞ்சி ஊத்தி கொடுப்பாக... இந்த தட்டு மேட்டர சமாளிக்கத்தா அந்த ஸ்பூன்..அப்டியே குடிக்க முடியாதுல்ல...பொம்புள புள்ளைக இந்த தட்டு ஸ்டேஜ் வரைக்கும்தா..பள்ளிக்கு வருவாக/...அப்ரம் பாவம்..யாரு?? நாங்கதா...வேரெதுக்கு?? then நோ ஸைட் டிஷ்!!!...
அப்ரம் இரண்டாம் காலகட்டம் கொஞ்சம் வளர வளர..தட்டை நம்ம கெவுரவத்த கொஞ்சம் டேமேஜ் பண்ணும்..அதனால அண்ணம்மார கொஞ்சம் கரெக்ட் பண்ணி,கோப்பை வாங்க ட்ரை பண்ரது..சில நேரம் கிடைக்கும்,கிடைக்காது...பெரியவங்களுக்கு இல்லாம போயிரும்ப்பா,அப்டீன்னு காரணம் சொல்லிருவாக...பெருந்தன்மையோட சரிங்ண்ணா அப்டீன்னு வந்துர்ரது...(வேர வழி??)
அப்ரம் கொஞ்சம் வளந்ததுக்கப்பரம்,ரெகுலர் கோப்பைக்காரராயிரது..ஸ்பூன தூக்கி கடாசிட்டு அதே (d)டேப் மினி ஸைஸ்’ல சர்பத்.ஒரே சமயத்துல ரஸ்னா,டேங்,லெமன் ஜூஸ்,நன்னாரி சர்பத்,ரோஸ்மில்க்,அப்ரம் ஆளாலுக்கு ஒன்னு ரெண்டு பஜ்ஜி,இப்டி கொண்டுவந்து எல்லாத்தையும் ஒன்னா போட்டு ஷேர் பண்ணி சாப்டுவோம்.இதுல சுண்டல்,இருந்தா இன்னும் ஸ்பெஷல்..எல்லாத்தையும் கஞ்சில போட்டு குடிக்கும்போது சேத்து சாப்பிட்ட இன்னும் நல்லா இருக்கும்...
அடுத்த ஸ்டேஜ்,அண்ணன்மார் ஸ்டேஜ்..நாமதா பொருப்பாளி???.ஸீனியர்ஸ் எல்லா வேலை அது இதுன்னு கெலம்பீருவாக...இது “பாரம்பரியமா கெடைக்கிற மருவாத”” (பரிவட்டம் கட்ர மாதிரி???)அப்பல்லா ஆல் இன் ஆல் நாமதா..நம்ம பசங்கல்லா சேந்து இந்த வேலைய பாக்குறது..(வீட்டு வேலைய விட்ருவோம்,அதுவேர விஷயம்..) but பொதுவாழ்க்கைன்னு வந்துட்டாலே இதெல்ல சகஜம்தேன..
ஊரணி + பள்ளி |
அஸர் தொழுக வந்ததோட,மக்களுக்கு நோன்பு கஞ்சி வினியோகம்,அப்ரம் நோன்பு திறக்க வரும் மக்களுக்கு கோப்பைல கஞ்சி ஏற்பாடு பண்ரது.இந்த கோப்பை கஞ்சியோட பருப்பு துவையல் செய்வாங்க..அதை கோப்பையின் விளிம்பில் ஆறுவிரல் அளவுக்கு வைத்துவிடுவோம்..தட்டுல வெறும் ரெண்டு விரல் அளவுதான்.துவையல் காம்பினேஷன் சூப்பரா இருக்கும்...அப்ரம் வர்ர வட,பஜ்ஜி,ஐட்டங்கள பிரிச்சு எல்லாருக்கும் கொடுக்குறதுன்னு படுபிஸி,கொஞ்சம் பெரிய மனுஷத்தனம் வந்துரும்,பள்ளி வேலையெல்லா பாக்குறோம்ல...
வெளியூர்கள்ல இருக்கிறமாதிரி..பள்ளிலையே நோன்பு திறக்கிரதில்லை..பள்ளியின் பின்புறம் தான் கஞ்சி தயாராகும்.அங்கு பெரிய இடம் இருக்கும் எல்லா பள்ளிலையுமே.. அங்குதான் நோன்பு திறப்போம்..அப்ரம் எங்க செட்’க்கு மட்டும் அங்க இருக்குர உள் வரண்டாவுல அனுமதி...
இதும் இல்லாம என்னோட முதல் காலகட்டத்துல நோன்பு திறந்து மஃரிப்(after sunset prayer) முடிஞ்ச ஒடன..வீட்டுக்கு ஓடி,வெர எதுனாச்சும் சாப்டுட்டு அப்டியே கெளம்பீர்வோம்.. எங்க...பைத் எனும் ஊர்வளத்துக்கு தான்..ஏரியா பசங்க எல்லா ஒன்னா சேந்து,ஒரு ரெண்டு ரெண்டு பேரா நாலு இல்ல அஞ்சு ரோ வர்ர மாதிரி பைத் அரேஞ்சு பண்ணி அப்டியே ஊருக்குள்ள ஒரு ரவுண்டு வர்ரது...
இதுல பாட்டுவேர...பின்ன பைத்துன்னா பாட்டு இல்லாமையா???
“நோன்பான நோன்பின் நாளில்....
நோன்பினை நோற்கவே...,நன்மைகள் சேர்க்கவே...
ரமலானிலே....புனிதஅஅஅ ரமலானிலெ......
லைலத்துல் கதிர் என்ற புனிதமிக்க ஒளிமிக்க நன்நாளில்
இம்மாதத்தை படைத்திட்ட இறையை நாம் ஏற்றி புகழ்ந்திடுவோம்....
(இந்த லைன் ஹைபிச்;ல இருக்கும்,இதுக்கப்பரம் எல்லா லைன்னுமே ஹைபிச்தான்.. ஏன்னுலா தெரியாது..பாரம்பரியம்...அப்டி புடிச்சுட்டு வந்துட்டோம்)
Conti..
இஸ்ஸுலாத்தின் கடமைகள் ஐந்து,அதை
ஒழுங்காக நிறைவேற்றி...இறையோனை தொழுதேற்றி
வாழ்ந்திடுவோம்,..நன்மைஇஇஇஇ சேர்த்திடுவோம்ம்.
நோன்பான நோன்பின் நாளில் Repeattu…”
இதுக்கெடையில ஒரு உண்டியல் ரெடி பண்ணி ஒருத்தன் கைல கொடுத்துர்ரது...பைத் மூவ் ஆக ஆக அவன் அப்டியே ஒரு கலெஷன் போட்டுட்டே வருவான்...அப்ரம் அத பொதுக் காரியங்களுக்கு செலவு பண்ரது(அப்டியே பண்ணிட்டாலும்!)...என்ன பொல்லாத பொது காரியம்...அந்த வயசுல பரோட்டா கடைலைலா போய் உக்காந்து சாப்டதே இல்லை... பைத் உறுப்பினர்கள் எல்லா பொதுக்குழுவ கூட்டி,எந்த கடைல பரோட்டா சால்னா ஸ்பெஷல்ன்னு முடிவு பண்ணி,அந்த கனவ நெரவேத்திப்போம்..
அப்ரம் தராவீஹ்..வீட்ல சொல்லிட்டு இஷாவுக்கு முன்னாடியே கெலம்பீர்வோம்..அம்மாவேர பெண்கள் மதரஸாவுக்கு தொழுக போயிருவாங்களா..நமக்கு ஜாலிதான்..போகவேண்டியது இஷா(இரவுத் தொழுகை) அட்டன் பண்ணிட்டு,எஸ்கேப்பு..வெளியா பூரா பசங்கதா,,,ஊர்பூரா ஓடி விளையாட்டுதான்..
இந்த இருட்டுல ஒளிஞ்சு விளையாடுரது சூப்பரா இருக்கும்,,பசங்க இருக்குர தைரியத்துல பகல்லையே போக பயப்புடுர பாழடஞ்ச வீட்டுலைலா ஒளிஞ்சு விளையாடுவோம்...ஜாலியா விளையாடும்போதே எங்கள்ல ஒருத்தன் கண்ணும் கருத்துமா..பள்ளிய நோட்டம் விட்டுக்கிட்டே இருப்பான். இருவதாவது ரக்காயத்(கடைசித் தொழுகை) வந்த ஒடன எல்லாம் போய்..பள்ளி ஹவுஸ்’ல(சிறிய நீர் தொட்டி)..சலசலன்னு ஒளூ(wash) செஞ்சுட்டு ஜாயின் பண்ணிப்போம்...தொழுகை முடிஞ்ச ஒடன தப்ரூக்(அன்பளிப்பு) ஏதாவது.. பரிமாறுவாங்க.. நீங்க நெனைக்கலாம்,அடச்சே அல்ப்பம்!!..போயும் போயும் இதுக்காகவா? அப்டீன்னு.. அதுதா இல்லை..இந்த தப்ரூக்கோட வீட்டுக்கு போனாத்தா பயபுள்ள கரெக்ட்டா தொழுதுட்டு வந்துருக்குன்னு அம்மா நம்புவாக...அதுக்கு தா இந்த ஏற்பாடு...அப்ரம் ஒரு ஸ்டேஜ்ல.. கரெக்ட்டா தொழுக ஆரம்பிச்சாச்சு...ஹஸ்ரத்,டே ஹமீது மயனே..இங்கவா...என்ன நேத்து ஆளக்காணோம்ன்னு நம்மலைல்லா மதிச்சு விசாரிகிர அளவுக்கு கரெக்டா தொழுதோம்ல...(நல்லவனாக்கும்...ம்ம்)
அப்ரம் நோன்புன்னாலே,நம்ம அண்ணன்மார் எல்லாம் சேந்து ஒரு வீட்டோட திண்ணைல மைக் செட் குழாய்,ஸ்பீக்கர் சகிதம் ரெடியாயிருவாங்க..ஸகர் நேரம் சொல்ரதுக்கு... கண்ட்டினுஅஸ்ஸா ஹனிபா பாட்டு ஓடும்..ஒவ்வொரு ஒருமணி நேர இடைவெளியிலும்”””” மைக்க தட்டி,இப்பொழுது நேரம் சரியாக!!! பண்ணண்டு மணி,ஸகர் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.அப்டீன்னு வார்ன் பண்ணிட்டு, பாட்ட தட்டி உட்டுட்டு சீட்டு விளையாட ஆரம்ச்சுருவாக..
இதுக்கெல்லா நமக்கு நாட் அள்ளவ்டு..அவ்வங்கெலோட போய் நாய் மாரி ஊரசுத்திட்டு நடு சாமத்துல வந்து கதவ தட்டுரது...அதுக்கு பெசாம குரான எடுத்து ஒக்காந்து ஓது,நோம்பான நாள்ல நன்மை,இல்ல பெசாம தூங்கு...(இது அம்மா...).ஓக்கே...அதுக்கு மேல பேச முடியாது..
ஆனா ஒரே ஒருநாள் அதையும் கெஞ்சி கேட்டு அட்டன் பண்ணுனேன்..செம ஜாலி,,,..அப்ரம் ப்ச்...இல்ல...நோன்பின் மாண்பு தெரியாமல் விளையாட்டாய் கழிந்த காலம் பள்ளிப் பருவத்துடன் முற்றுப்பெற்றது.அதன் பின் மார்க்கக் கடமைகளின் முக்கியத்துவமும், அருமையும் தெரியவர,நோன்புகால விளையாட்டுக்களெல்லாம் வினையாய் முடியும் என உணர்ந்து,அவற்றை கைவிட்டது வேறு விஷயம்.
அப்டீ நோன்பு ஓடி பெருநாள் வந்துரும்..பெருநாள் காலைல...ஷாம்பு’’லா இல்லை... பலமணகப்பி,அப்டீன்னு ஒரு பவ்டர்,சிககாய்,கஸ்தூரி மஞ்சள் வேர என்னன்னமோ போட்டு ஒரு வீட்ல செஞ்சு விப்பாக,ஒரு பாக்கெட் ரெண்டு ரூவான்னு...அது ஆளுக்கு ஒன்னு.. அம்மாக்கு ரெண்டு...
அதை தலை மற்றும் உடம்புக்கு தேய்த்து குளிக்கனும்..நிய்யத்துதா(எண்ணம்) மறந்துரும்ன்னு,சொல்லிட்டே போரது..கடைசில மறந்துரும்L.. அன்னைக்கும் பள்ளிலதா குளியல்ஸ்.அப்ரம் புது ட்ரெஸ்,ஊரணிப்பள்ளில இருந்து பெரிய பள்ளிக்கு பைத் போகும்(இது பெரியவங்க பைத்,நம்ம ஐட்டம் இல்ல), அதுல ஜாயின்பண்ணி கடைசி ரோ’ல பசங்கலோட பேசிக்கிட்டே பள்ளிக்கு போய்ட்டு... தொழுகை.. அப்ரம் வெளிய வந்து எத்ன மணிக்கு மீட்டிங் எல்லா பேசிவச்சுட்டு,வீட்டுக்கு போய்,அப்ரம் சொந்தக்காரங்க வீட்டுக்கெல்லா ஒரு ரவுண்டு...பெரியத்தா சின்னத்தா,மாமி,அப்டீன்னு எல்லா பெருநாள் காஸ் தருவாங்க..ஒரு கலெக்ஷன போட்டுட்டு வந்துருவோம்..அப்ரம்..ஊர் பேட்டைல ராட்னம் போட்டுருப்பாக...ஒரு ரெண்டு மூனு தடவ தலைராட்டினம்,கொடைராட்னம் ஆடிட்டு, அப்டீ போய்,இஸ்டத்துக்கு ஐஸ் வாங்கி திங்கிறது...அப்ரம்..வேரொன்னு செய்யாம காஸ வீட்டுக்கே கொண்டு வந்துருவேன்..அப்போல்லா செலவு பண்ண தெரியாது :)
இப்டியே பெருநாள் ஓடினஒடன...அடுத்த நாள் டல்லாயிடும்....அடுத்த நோன்பு எப்போன்னு.. ஆசையோட..நாள் ஓட ஆரம்பிக்கும்.
ஹ்ம்ம்,,,இதெல்லா எழுதும்போதே அப்டி மனக்கண்ல எல்லா காட்சியும் ஓடி மறையுது... அர்ப்புதமான அனுபவம்...மறக்க முடியாது,,.
காலம் மாற காட்சியும் மாறி..இன்றைய நோன்பு அமீரகத்தில்....
ப்ளைன் கஞ்சி |
மட்டன் கஞ்சி |
இங்க,உறவுகளை பிரிந்து,....நம்ம கடல்கடந்த நட்புகளோடு,,நோன்பு நல்லாவே போகுது.. நம்மஜலீலாக்கா,அவங்கள மறக்க முடியாது...அவங்களோட நோன்பு கஞ்சி சமயல் குறிப்பு தயவுல..சூப்பரா நோன்பு கஞ்சி காய்ச்சி...அரும்மையா நோன்பு திறக்குறோம்...மாஷா அல்லாஹ்...
இஃப்தார் அரேஞ்மெண்ட் |
இந்த நேரத்துல,அவங்களுக்கு எனது நன்றியையும்,அவங்க குடும்பத்துக்கு அல்லாஹ் எல்லா நலன்களையும் வழங்க பிராத்திக்கிறேன்...
அப்பாட ஒருவழியா சகோ ஆமினா அழைத்த தொடர் பதிவையும் இத வச்சு சமாளிச்சுரலாம்ன்னு நெனைக்கிறேன்..பாப்போம் அக்கா என்ன சொல்ராகன்னு....
மற்றும் எல்லா சகோதர சகோதரிகளுக்கும்..இனிய ரமலான் வாழ்த்துக்களை மனமாற தெரிவித்தவனாக விடைபெருகிறேன்.
அன்புடன் ரஜின்
4 comments:
நோன்புக் கஞ்சி பற்றி அறிய முடிந்தது. சென்னை ராயப்பேட்டையில் இருக்கும்போது தோழிகள் எங்களுக்கும் தருவார்கள்.
நன்றீ பாத்திமா பகிர்வுக்கு.:)
PLEASE SUPPORT TO ARREST SUBRAMANYA SWAMY,
http://peacetrain1.blogspot.com/
இப்பதான் இந்த பதிவை பார்த்தேன், என்னையும் நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி பாத்திமா
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
Follower ஆகி விட்டேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_18.html) சென்று பார்க்கவும்...
நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…
Post a Comment